தமிழ்நாடு அறிவியல் சங்கம், சிஎஸ்ஐஆர் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் தேசிய தமிழ் அறிவியல் மாநாடு, சென்னையில் உள்ள – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் 2026 பிப்ரவரி 20 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் கருப்பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நிலையான வளர்ச்சி என்பதாகும். இம்மாநாடு தமிழ் மொழி வாயிலாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தனித்துவமான தளம் ஆகும்.
பல்வேறு அறிவியல் களங்களில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க, புகழ்பெற்ற அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் மாணவர்களை இந்நிகழ்வு ஒன்றிணைக்கும்.
இம்மாநாட்டிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி 2025 நவம்பர் 12 அன்று சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி மையத்தில் நடைபெற்றது. அந்த மையத்தின் ஆலோசகர் எஸ் பாரிவள்ளல் அனைவரையும் வரவேற்றார். விஞ்ஞான பாரதி அமைப்புக்கான தென்மண்டல அமைப்பு செயலாளர் ஆர் அப்கா, மாநாட்டின் கருத்துக் குறித்து விளக்கம் அளித்தார். தமிழ்நாடு அறிவியல் சங்கத்தைச் சேர்ந்தவரும், சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ முன்னாள் இயக்குநருமான டாக்டர் பி சந்திரசேகரன் இம்மாநாடு குறித்து எடுத்துரைத்தார். இதற்கான அதிகாரப்பூர்வ சுவரொட்டியையும் மாநாட்டிற்கான இணையதளத்தையும் சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி இயக்குநர் டாக்டர் என் ஆனந்தவள்ளி வெளியிட்டார். தமிழ்நாடு அறிவியல் சங்கத்தின் துணைத்தலைவர் டாக்டர் வி பார்த்தசாரதி நன்றி தெரிவித்தார்.
பாரம்பரிய அறிவமைப்புகளை நவீன அறிவியல் சிந்தனையுடன் இணைக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அறிவியலை முழுவதுமாக ஆழ்ந்து புரிந்துகொள்வதற்கான ஒரு ஊடகமாக செம்மொழியாம் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை இது எடுத்துரைக்கிறது. சிஎஸ்ஐஆர், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், இஸ்ரோ மற்றும் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்று தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
