நடிகர் தனுஷூம், இயக்குனர் மாரிசெல்வராஜூம் இணையும் புதிய படத்திற்கான அறிவிப்பு இன்று (ஏப்ரல் 9) வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ’பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரிசெல்வராஜ்.
பரியேறும் பெருமாள் படம் கொடுத்த வெற்றியால் தன்னுடைய இரண்டாவது படத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷை ’கர்ணன்’ திரைப்படத்தின் மூலம் இயக்கும் வாய்ப்பை பெற்றார் மாரி செல்வராஜ்.
பேருந்து தங்கள் ஊரில் நிற்காததை தட்டிக்கேட்கும் கிராமம் எப்படி ஜாதிய வன்மத்தில் சிக்குகிறது, அதனால் அந்த கிராமம் எதிர்கொண்ட விளைவுகள் என்னென்ன என்பதை சுற்றி இந்த திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், மீண்டும் நடிகர் தனுஷூம், இயக்குனர் மாரிசெல்வராஜூம் இணையும் புதிய படத்திற்கான அறிவிப்பு இன்று (ஏப்ரல் 9) வெளியாகியுள்ளது.
இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக எந்த படங்களையும் தயாரிக்காமல் இருந்து வந்த தனுஷ் தற்போது மீண்டும் பட தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். இயக்குநர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தை இயக்கியுள்ள நிலையில், தற்போது குழந்தைகளை மையமாக வைத்து ’வாழை’ என்ற படத்தை இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
