விமர்சனம்: Look Back!

Published On:

| By Kavi

Look Back movie review

உதயசங்கரன் பாடகலிங்கம்

பொறாமை கொடியது எனும் பாடம்!

ஜப்பானிய ‘அனிமே’ படங்களின் சிறப்புகளில் முக்கியமானது, மனித உணர்வுகளுக்கு அவற்றில் கொடுக்கப்படும் முக்கியத்துவம். அவற்றின் உள்ளடக்கத்தில் இருக்கும் வன்முறை சிந்தனைகளை மீறி, அது நம்மைக் கவர்ந்திழுக்கும். வரையப்பட்ட உருவங்களின் ஊடே, மனித மனங்களின் அசைவுகளைக் காண முடியும்.

அந்த வகையில், சட்டென்ற ஈர்ப்பைத் தந்தது ‘லுக் பேக்’ எனும் ஜப்பானிய ‘அனிமே’ படத்தின் விளம்பரம். ட்ரெய்லர் பார்த்தபிறகு, அது இன்னும் அதிகமானது. அனைத்தையும் விட மிக முக்கியமான விஷயம், இப்படம் சுமார் 58 நிமிடங்களே திரையில் ஓடுகிறது என்பதுவே.

சரி, ‘லுக் பேக்’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டது?

பொறாமை எதற்கு..?

ஆரம்பப் பள்ளியில் படித்துவரும் அயுமு பியூஜினோ எனும் சிறுமி, பள்ளிக்கான மாத இதழில் அனிமே வரைந்து வருகிறார். சக மாணவ மாணவியர் அவரைப் பாராட்டும் வகையில், அவரது வரைதிறன் இருக்கிறது.

ஒருநாள், ‘அடுத்த மாதம் முதல் க்யோமோடோ எனும் சிறுமி அதனை வரையட்டுமே’ என்கிறார் அந்த இதழ் தயாரிப்பில் ஈடுபடும் ஆசிரியர். தன்னைவிட யாரால் சிறப்பாக வரைந்துவிட முடியும் என்கிற எண்ணத்தில், ‘சரி’ என்று பதிலளிக்கிறார் பியூஜினோ.

அடுத்த மாதம் அந்த இதழ் வெளியாகும்போது, பியூஜினோவின் எண்ணம் தவிடுபொடியாகிறது. க்யோமோடோவின் வரைகலை திறனில் இருக்கும் மேதமை பள்ளியில் பேசுபொருளாகிறது.

பியூஜினோவுக்கு அது அவமானமாகத் தெரிகிறது. அன்று முதல் தொடர்ந்து பல நாட்கள் விதவிதமாக வரைவதை மட்டுமே தனது இலக்காகக் கொண்டிருக்கிறார். பெற்றோர், சகோதரி, தோழிகள் என்று பலரும் அவரது செய்கை கண்டு வருத்தப்படுகின்றனர். திகட்டும் அளவுக்கு வரைந்து முடித்தபிறகு, ’இனி வரையக் கூடாது’ என்று பியூஜினோ முடிவெடுக்கிறார். அதையடுத்து, ரொம்பவே மகிழ்ச்சியாகத் தோழிகளுடன் பள்ளியில் பொழுதைக் கழிக்கிறார்.

ஆரம்பப் பள்ளியில் இருந்து அடுத்த நிலைக்குச் செல்லும் பியூஜினோவை அழைக்கிறார் அந்த இதழ் தயாரிப்பில் ஈடுபடும் ஆசிரியர். ’இந்த சான்றிதழை க்யோமோடோவிடம் கொடுத்துவிடுகிறாயா’ என்று கேட்கிறார்.

ஆசிரியர் பேச்சை மறுக்க முடியாமல், க்யோமோடோ வீட்டுக்குச் செல்கிறார் பியூஜினோ. அவரது வீடு திறந்திருக்கிறது. உள்ளே வரைதிறன் பற்றிய பல புத்தகங்கள், நோட்டுகள் இறைந்து கிடக்கின்றன. அவற்றைப் பார்ப்பவர், அனிமே வரையும் தாளை எடுத்து க்யோமோடோவை வரைகிறார். வரைந்து முடித்ததும், அந்த தாள் அவரது கையிலிருந்து நழுவி ஒரு அறைக்குள் செல்கிறது.

அதனைக் கண்டதும், வீட்டை விட்டு வெளியே வருகிறார் பியூஜினோ. அவரை அழைத்தவாறு, பின்னாலேயே துரத்தி வருகிறார் க்யோமோடோ. ‘நான் உங்களது ரசிகை’ என்கிறார். அந்த வார்த்தை அவரைத் தடுத்து நிறுத்துகிறது.

வீட்டை விட்டு வெளியே வந்து பள்ளிக்குச் செல்லவே பயப்படுபவர் க்யோமோடோ. அவருக்கு பியூஜினோவின் அனிமே மட்டுமே ஒரே விருப்பமாக இருக்கிறது. அதனை அறிந்ததும், பியூஜினோ மனதில் இருக்கும் பொறாமை இன்னொரு வடிவமெடுக்கிறது. க்யோமோடோ உடன் இணக்கமாக முடிவு செய்கிறார்.

பிறகு, பியூஜினோவும் க்யோமோடோவும் தோழிகள் ஆகின்றனர். இருவரும் இணைந்து பல அனிமே போட்டிகளில் பங்கேற்கின்றனர். கதை, கதாபாத்திரங்களை பியூஜினோ முடிவு செய்ய, பின்னணியை வடிவமைக்கிறார் க்யோமோடோ. அவர்களது படைப்புகள் பல இடங்களில் பரிசுகளை அள்ளுகின்றன.

அந்த பணத்தைக் கொண்டு, பியூஜினோவும் க்யோமோடோவும் ஊர் சுற்றுகின்றனர். சில ஆண்டுகள் கழித்து, வரைகலை தொடர்பாகப் பல்கலைக்கழகமொன்றில் படிக்கப் போவதாகச் சொல்கிறார் க்யோமோடோ. அதேநேரத்தில், ஒரு நிறுவனத்தில் தொடர்ச்சியாக ‘அனிமே’ வரையும் வேலைக்கு ஒப்பந்தமாகிறார் பியூஜினோ.

க்யோமோடோ தன்னோடு பயணிக்கவில்லை என்று அறிந்ததும், அவரது மனம் வருத்தமடையும்படி பேசி அனுப்புகிறார். சில மாதங்கள் கழித்து, க்யோமோடோ பயிலும் பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் செய்திகள் வருகின்றன. அதனை அறிந்ததும், அப்பல்கலைக்கழகத்திற்கு போன் செய்கிறார் பியூஜினோ. அப்போது, க்யோமோடோ கொலையானது அவருக்குத் தெரிய வருகிறது.

அது, பியூஜினோவுக்குள் ஒரு குற்றவுணர்ச்சியை உருவாக்குகிறது. தான் என்ன செய்திருந்தால் க்யோமோடோவின் மரணத்தைத் தடுத்திருக்கலாம் என்று யோசிக்கிறார். அப்போது, சிறு வயதில் தான் வரைந்த ‘அனிமே’ நினைவுக்கு வருகிறது. அதில், அவர் க்யோமோடோவின் எதிர்காலத்தை நசுக்குவது போன்று வரைந்தது மனக்கண்ணில் தெரிகிறது.

தன்னுடைய பொறாமைதான் நடந்த குற்றத்திற்குக் காரணம் என்று பியூஜினோ யோசிக்கிறார். அதன்பிறகு அவர் என்ன செய்தார் என்று நீள்கிறது ‘லுக் பேக்’.

’எதற்கு பொறாமை’ என்று 2கே கிட்ஸ்களுக்கு பாடம் எடுக்கும் வகையில் எடுக்கிறது இப்படம். அதுவே இதன் யுஎஸ்பி.

நல்லதொரு பாடம்!

Look Back movie review
‘அனிமே’ பதின்ம வயதினர் பார்க்கிற படைப்புகளில் முக்கியமானதாக விளங்குகின்றன. அந்த வகையில் பதின்ம வயதினரின் மனவோட்டத்தையும் அதன் வளர்ச்சியையும் சொல்கிறது ‘லுக் பேக்’. கூடவே, இதில் இருக்கும் சில காட்சிகள் பேண்டஸி, ட்ராமா, த்ரில்லர் வகைமையைப் பிரதிபலிக்கின்றன.

2021ஆம் ஆண்டு டட்சுகி பியூஜிமோடோ எழுதிய அனிமே தொடரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட படம் இது. கியோடகா ஓஷியாமா இதனை எழுதி இயக்கியிருக்கிறார். பாத்திர வடிவமைப்பில் ஈடுபட்டதோடு, ‘ஸ்டூடியோ துரியன்’ சார்பில் அவரே இதனை உருவாக்கியிருக்கிறார்.

அனைத்து வண்ணங்களையும் திரையில் தெளித்து, நகரும் ஓவியங்களைப் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தருகிறது ‘லுக் பேக்’.
ஹருகா நகமுரா இதற்கு இசையமைத்திருக்கிறார். சில காட்சித் திருப்பங்கள் சட்டென்று பிடிபடவும், அடுத்த காட்சியை நோக்கி மனம் விரையவும் வழிவகுக்கிறது இசை.

பதின்ம வயதினர் இடையே ‘பொறாமை வேண்டாம்’ என்ற பாடத்தைப் புகட்டுகிறது ‘லுக் பேக்’. கூடவே, அது நமது படைப்பாக்கத் திறனை பாழ்படுத்திவிடும் என்கிறது.

நம் எழுத்தில், ஓவியத்தில், இதர கலை வெளிப்பாட்டில் வன்முறை எண்ணம் தெரிவதென்பது சாதாரண விஷயமல்ல. அதன் பின்னணியில் பெரும்பாலும் பொறாமை மட்டுமே இருப்பதாகச் சொல்கிறது இப்படம். பொறாமையைத் தவிர்ப்பதன் மூலமாக, ஒரு படைப்பாளி எதனைப் பெறுகிறார் என்றும் சொல்கிறது.

அப்படிப்பட்ட மனிதர்கள் அரிதினும் அரிது என்று அலுத்துக்கொள்பவர்களுக்கு இப்படம் பிடிக்காது. ‘இப்படியொரு படமா’ என்று வியப்பவர்கள் இதனைக் கொண்டாடுவார்கள். மற்றவர்கள் ஒருமுறை பார்த்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் தங்கள் பணிகளைக் கவனிக்கச் சென்றுவிடுவார்கள். நீங்கள் எந்த ரகம்..?!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விக்கிரவாண்டி மாநாடு : ஊர் திரும்ப முடியாமல் சாலை ஓரங்களில் உறங்கிய மக்கள்!

வேலைவாய்ப்பு : பெல் நிறுவனத்தில் பணி!

பாதாள சாக்கடையில் மூழ்கியவரைக் காப்பாற்ற சென்ற இளைஞரும் பலி!

ஹெல்த் டிப்ஸ்: உணவில் புளியை அதிகம் சேர்த்துக்கொள்வது ஆபத்தா?

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஃபைனான்சியல் அனலிஸ்ட் படிப்பு: சேருவது எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share