காரசாரமான உணவுகளை விரும்புவோருக்கு இணையாக, புளி தூக்கலான உணவுகளை விரும்புவோரும் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ‘புளியே ஆகாது… புளி அதிகமான ரத்தம் சுண்டிடும்…’ என அதைத் தவிர்ப்போரையும் பார்க்கலாம்.
புளி சேர்த்துக்கொண்டால் ரத்தம் சுண்டிவிடும் என்ற நம்பிக்கையில் எந்த அளவு உண்மைத்தன்மை இருக்கிறது… புளியில் ஆரோக்கியத்துக்கான தன்மைகளே கிடையாதா? உணவில் புளியை அதிகம் சேர்த்துக்கொள்வது ஆபத்தா? இயற்கை மருத்துவர்கள் சொல்லும் விளக்கம் என்ன?
”சுவைகளில் புளிப்புக்கு மிக முக்கிய இடமுண்டு. அதனால் நம் உணவில் புளியின் உபயோகமும் தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது.
‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது புளி விஷயத்துக்கும் பொருந்தும். ‘புளி அதிகம் கரைக்க கரைக்க குழி அதிகம் தோண்டுகிறோம்’ என்ற சொலவடைகூட உண்டு. அந்தளவுக்கு புளியின் பயன்பாடு அளவுக்கு அதிகமாகும்போது அது நிச்சயம் ஆரோக்கிய கேட்டை ஏற்படுத்தும்.
100 கிராம் புளியில் 238 கலோரிகளும், 2.3 கிராம் புரதச்சத்தும், 62.5 கிராம் கார்போஹைட்ரேட்டும், 5.1 கிராம் நார்ச்சத்தும் இருக்கின்றன.
தவிர, இதில் ஃபோலேட், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் என ஆரோக்கியத்துக்கு அவசியமான அத்தனை விஷயங்களும் இருக்கின்றன. அந்த வகையில் தினமும் நம் சமையலில் சிறிதளவு புளி இடம்பெறுவது நல்லதுதான்.
புளியில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமுள்ளதால், நம் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. குறிப்பாக எல்டிஎல் (LDL) எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, ஹெச்டிஎல் (HDL) எனப்படும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. அதன் தொடர்ச்சியாக ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது.
குடிப்பழக்கம் உள்ளவர்களை மட்டுமே பாதித்துக் கொண்டிருந்த ‘ஃபேட்டி லிவர்’ (Fatty liver) எனப்படும் கல்லீரல் பாதிப்பு, சமீப காலமாக குடிப்பழக்கம் இல்லாதவர்களையும் அதிகம் பாதிப்பதைப் பார்க்கிறோம்.
கல்லீரல் ஆரோக்கியத்துக்கு முக்கியமான ‘ப்ரோசயானிடின்’ (Procyanidin) புளியில் அதிகமுள்ளது. இது செல் சிதைவைத் தடுத்து, கல்லீரல் பாதிப்படையாமல் காக்கிறது. புளிக்கு மல மிளக்கியாகச் செயல்படும் தன்மையும் உண்டு.
இந்த எல்லாமே புளியை அளவோடு சேர்த்துக்கொள்ளும் வரைதான்… அதுவே அளவு தாண்டும்போது, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையத் தொடங்கும். உடலில் நீர்ச்சத்து குறையவும் காரணமாகும்.
வயதானவர்களுக்கு எலும்புகள் தேய்மானம் ஏற்படவும் அதிக புளி பயன்பாடு முக்கிய காரணம். அதனால்தான் அவர்களுக்கு புளிப்பு குறைவான உணவுப்பழக்கம் வலியுறுத்தப்படும்.
எனவே, புளியை வெறும் சுவைக்கான விஷயமாக மட்டும் பார்த்து அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டாம். அளவோடு இருக்கும்வரை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவாக புளி இருப்பதை மறக்கவும் வேண்டாம்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்சிக்குத் தலைவர் அமைந்தால் பாயசம், தலைவரே கட்சி என்றால் பாசிசம்!
கிச்சன் கீர்த்தனா: மகிழம்பூ முறுக்கு!
விஜய் மாநாடு: உதயநிதி முதல் விஜய் சேதுபதி வரை… குவியும் வாழ்த்து!