’ஒரு படம் சூப்பரா இருக்குற மாதிரி அதுவா அமையும்’. இதனைப் பல இயக்குனர்கள் தங்களது திரைப்படங்கள் குறித்த பேட்டிகளில் கூறியிருக்கின்றனர். அந்த வரிசையில் ஒருவராக, எப்போதும் தான் பங்குபெறும் நேர்காணல்களில் அதனைக் குறிப்பிடுபவராக இருந்திருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி. ‘பையா’ பற்றிச் சொல்லும்போதெல்லாம் மேற்கண்ட வார்த்தைகளை அவர் மறக்காமல் சொல்லிவிடுவார். lingusamy karthi paiyaa hits 15 years
’பையா’ திரையனுபவம்! lingusamy karthi paiyaa hits 15 years
சாக்லேட் பாய் என்று சொல்லும்படியாக ஒரு நாயகன். சிண்ட்ரல்லா மாதிரியான ஒரு நாயகி. தினசரி வாழ்வின் கஷ்ட நஷ்டங்கள் எதுவுமே பாதிக்காது எனும்படியாக இருக்கும் அவர்களில் ஒருவரை அல்லது இருவரையுமே ஒரு பிரச்சனை பாதிக்கும். அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டு கடந்து வருவதோடு, அவர்கள் காதலிக்கவும் தொடங்குவார்கள். அப்படித்தான் அந்த படத்தின் முடிவு இருக்கும். ‘பையா’ படம் திரையனுபவமும் இதற்குக் குறைந்தது அல்ல.

இந்தப் படத்தின் கதை என்ன என்று விளக்க வேண்டிய தேவையில்லை. தற்செயலாகச் சந்திக்கும் ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் நாயகன், அவரை மீண்டும் சந்திக்க முடியாதா என்று ஏங்குகிறார். ஒருநாள் அவர் ஓட்டிச் செல்லும் காரில் அதே பெண் ‘லிப்ட்’ கேட்கிறார். விமானநிலையம், ரயில்நிலையம் என்று அலைந்து திரிந்து பயணம் மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் அவரைப் பெங்களூருவில் இருந்து மும்பைக்கு மேற்கு கடற்கரை சாலை வழியாக அழைத்துச் செல்கிறார் நாயகன். அந்தப் பயணத்தின்போது ஒருவரையொருவர் புரிந்துகொள்வதுதான் கதை.
ஆனால், இதில் மசாலா எங்கே இருக்கிறது? அந்த இடத்தில் வில்லன்கள் வர வேண்டுமானால், ஏதேனும் ஒரு முரண் இருந்தாக வேண்டுமே? அங்குதான் இயக்குனர் லிங்குசாமியின் திறமை பளிச்சிடும்.
ரன், சண்டக்கோழி படங்களைப் போலவே ‘பையா’விலும் திருப்புமுனை காட்சியொன்று உண்டு. வில்லன் கூட்டம் நாயகனைத்தான் குறி வைத்து துரத்துகிறது என்று பார்வையாளர்களான நாம் நினைக்கையில், ‘இல்லை அவர்கள் நாயகியைத்தான் குறி வைக்கின்றனர்’ என்று நம் தலையைத் தட்டுவார் லிங்குசாமி. இதிலும் அதனை அச்சுப்பிசகாமல் செய்திருப்பார். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

படத்தின் சிறப்பம்சங்கள்! lingusamy karthi paiyaa hits 15 years
‘பையா’ படத்தில் கதை என்ற வஸ்து பெயரளவுக்குத்தான் உண்டு. மற்றபடி, படம் முழுக்க காதல் தான் வழிந்தோடியிருக்கும். அதுவும் கூட நாயகனின் ஒருதலைக் காதலாகத்தான் காட்டப்பட்டிருக்கும்.
நாயகன், நாயகி முதல் பெரும்பாலான கதாபாத்திரங்கள் நிஜ வாழ்வுக்கு நெருக்கமானதாக இருக்காது. நிறையவே சினிமாத்தனத்துடன் அவற்றின் செயல்பாடுகள் இருக்கும்.
அப்படியிருந்தும் அப்பாத்திரங்களை நம் மனதோடு ஒட்ட வைத்தது எது? நம் கனவுகளோடு, நாம் கண்டிராத ஒரு வாழ்வனுபவத்தோடு அவை பொருந்தி நின்றன. அதுவே ‘பையா’ போன்ற படங்களை ரசிகர்கள் கொண்டாடக் காரணம். அதனை நன்கு புரிந்துகொண்டு அழகழகான உடைகளில் நாயகன் கார்த்தியையும் நாயகி தமன்னாவையும் ‘தேவலோகத்தைச் சேர்ந்தவர்களாக’ காட்டியிருப்பார்.

பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் படங்களில் ‘அழுக்கு மனிதனாக’ (இன்றைய ஜென்ஸீ தலைமுறை பாஷையில் ‘ரக்டு பாய்’) தெரிந்த கார்த்தியை இதில் ஆண்கள் உடைகளுக்கான ‘மாடல்’ போல நடமாட விட்டிருப்பார் லிங்குசாமி. தமன்னாவும் அப்படித்தான் திரையில் தெரிவார்.
காதல் படங்களில் தென்படும் நாயகனை ‘சாக்லேட் பாய்’ என்று சொல்வதே வழக்கம். அஜித், மாதவன், அரவிந்த்சாமி என்று பலரும் அப்படியிருந்துதான் ‘லவ்வபிள் மேன்’ ஆக ரசிகர்கள், ரசிகைகள் மனதில் உருமாறினார்கள். ஆனால், அறிமுகமாகும்போதே ‘மேன்’ ஆக தோற்றம் தந்தவர் என்று சக திரைக்கலைஞர்களே கிண்டலடிக்கும் வகையில் ‘பையா’வில் இருந்தார் கார்த்தி. ஆனால், அதுவே அவரது கேரியரில் ‘ப்ளஸ்’ ஆகவும் ஆனது. lingusamy karthi paiyaa hits 15 years
‘ரொம்பவே அர்ப்பணிப்புமிக்க ஆர்ட்டிஸ்ட்’ என்ற பெயரைத் திரையுலகில் தமன்னா பெறக் காரணமானது ‘பையா’. இந்த படத்திற்குப் பிறகு பல வெற்றிப் படங்களில் அவர் இடம்பிடித்தார்.
மீண்டும் ‘சிறுத்தை’, ‘தோழா’வில் இந்த ஜோடி ஒன்றாகத் திரையில் காட்சியளித்தது.
இது போக கார்த்தியின் நட்புக்கூட்டமாக சோனியா தீப்தி, ஓமர் லத்தீப், ஜெகன், வில்லனாக மிலிந்த் சோமன் என்று நாம் அதுவரை பார்த்திராத ‘காஸ்ட்டிங்’ இப்படத்தில் இடம்பெற்றிருந்தது.
‘பையா’வின் ப்ளஸ் என்ன என்று இப்போது யோசித்துப் பார்க்கும்போது நிறைய விஷயங்கள் தெரிகின்றன. அவற்றுள் முதன்மையானது, யுவன் சங்கர் ராஜாவின் இசை. lingusamy karthi paiyaa hits 15 years

அவர் தந்த ‘காதல் சொல்ல நேரமில்லை’, ’சுத்துதே சுத்துதே பூமி’, ‘ஏதோ ஒன்று’, ‘பூங்காற்றே பூங்காற்றே’, ‘துளி துளி மழையாய் வந்தாளே’, ‘அடடா மழைடா அடைமழைடா’ என்று அனைத்து பாடல்களும் ’ப்ளாக்பஸ்டர்’ ஹிட் ரகம். நா.முத்துகுமாரின் அர்த்தமுள்ள, ஈர்ப்புள்ள பாடல் வரிகள் அவற்றை மீண்டும் மீண்டும் ரசிக்க வைத்தது. யுவனின் ஹிட் ஆல்பங்களை வரிசைப்படுத்தினால் ‘பையா’வை நம்மால் தவிர்க்க முடியாது. அது மட்டுமல்லாமல், பின்னணி இசையிலும் மிரட்டியிருப்பார். lingusamy karthi paiyaa hits 15 years
இது போக மதியின் வண்ணமயமான ஒளிப்பதிவு, ஆண்டனியின் செறிவான படத்தொகுப்பு, ராஜீவனின் கலை வடிவமைப்பு, பிரியா மணிகண்டனின் ஆடை வடிவமைப்பு, கீதா குரப்பாவின் ஆடியோகிராஃபி, கனல் கண்ணனின் ஸ்டண்ட் கொரியோகிராஃபி, பிருந்தா சாரதியின் எளிமையான, ஆற்றல்மிகு வசனங்கள் என்று பல விஷயங்கள் இப்படத்தில் இருந்தன.
‘பயணம் சார்ந்த படங்கள்’ எனும் வகைமை நம்மூரில் அவ்வளவு பிரபலமில்லை. அதனை ஒரு தடையாகக் கருதாமல், அதையே ஒரு ‘ப்ளஸ்’ ஆகக் கொண்டு ‘பையா’வைத் தந்தார் லிங்குசாமி. முதல்முறை அதனைக் காணும்போது உறுத்தலாகத் தெரிந்த விஷயங்கள் இப்போது அப்படித் தெரிவதில்லை. அந்த மாற்றம்தான், ‘பையா’ போன்ற படங்களின் சிறப்பு.
திருநெல்வேலி ராம் தியேட்டரில் இப்படத்தைப் பார்க்க டிக்கெட் கவுண்டர் அருகே வரிசையில் நின்றபோது, ‘இந்த படத்துல லவ்வர்ஸுக்கு வில்லன்களே கிடையாது தெரியுமா’ என்று பதின்ம வயதுச் சிறுவன் என்னைப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தான். அந்த எண்ணம் அவனைக் கனவுலகில் மிதக்க வைத்ததை உணர முடிந்தது. அதில் திளைக்கவே அவன் இரண்டாவது அல்லது மூன்றாவது முறை அதனைப் பார்க்க வந்ததாகச் சொன்ன நினைவு. இப்போது அந்த பையன் நிச்சயம் முப்பதுகளில் இருப்பார். அப்போது போலவே ‘பையா’வை ரசித்துக் கொண்டாடுவார் என்று நம்புகிறேன்.
இந்த படம் வெளியாகி பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும், இப்படத்தைப் பார்த்த தலைமுறைக்கு ‘இது எப்போதும் மிகப் பிடித்தமானதாக’ இருக்கும். இப்படத்தில் வரும் காட்சிகளின் ஸ்டில்கள் ’ghibli’ ட்ரெண்டை ஒட்டி அவ்வகையில் சமூகவலைதளங்களில் இப்போது உலவுகின்றன. அவை உயிர்ப்போடு நம் கண்களுக்குத் தெரிகின்றன என்பது அதைத்தான் உணர்த்துகிறது..
ஒரு சிறப்பான திரைப்படம் என்பது நம் வாழ்வைப் பிரதிபலிக்காவிடில், நம் கனவுகளுக்கு வெகு நெருக்கமானதாக இருக்க வேண்டும். ‘பையா’ அந்த ரகத்தைச் சேர்ந்தது..! lingusamy karthi paiyaa hits 15 years