தனது ஆத்மார்த்தமான இசையால் உலக தமிழர்களின் முக்கிய அடையாளமாக மாறியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. தன்னுடைய 82வது வயதிலும் அசாத்தியான முயற்சிகளை வெற்றிகரமாக நிறைவேற்றி சாதனை படைத்து வருகிறார். ilaiyaraaja turned his struggle into knowledge
கடந்த மார்ச் மாதம் அவர் லண்டனில் வேலியண்ட் என பெயரிடப்பட்ட தனது முதல் சிம்பொனி அரங்கேற்றம் செய்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டுகளை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நியூஸ் 18 செய்தித் தொலைக்காட்சி ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு அளித்த பேட்டியில் தனது சாதனைகளுக்கு பின்னால் இருக்கும் அதீத முயற்சி, அதில் ஏற்பட்ட வலிகள் குறித்து விரிவாக பேசியுள்ளார் இளையராஜா.

எனக்கும் பாரதிராஜாவுக்கும் போட்டி!
அவர் பேசுகையில், “ஆரம்பத்தில் பென்சில் ஓவியம் வரைவதில் எனக்கு ஆர்வம் உண்டு. ஆனால் இசைக்கு வந்த பிறகு எல்லாம் போய்விட்டது. பென்சில் ஓவியம் வரைவதில் எனக்கும் பாரதிராஜாவுக்கும் போட்டி வரும். அவரும் நன்றாக வரைவார்.
பென்சில் ஓவியத்தை விட்டதற்கு காரணம் இருக்கிறது. நிறைய ஓவியங்களை வரைந்தால் அபசகுனமென்று எனது அண்ணனோ அல்லது அம்மாவோ சொல்லிவிட்டார்கள். அப்போது முதல் ஓவியம் வரைவதை நிறுத்தி விட்டேன்” என்றார்.
அப்படியென்றால் ஒரு துறையில் மட்டுமே கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்கிற முடிவுக்கு வந்துள்ளீர்கள் அப்படித்தானே?” என கார்த்திகை செல்வன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு இளையராஜா, “ஆமாம். அதுதான் உண்மை. எல்லாருக்கும் பாடம் தான். எல்லாவற்றிலும் திறமைசாலியாக இருப்பவர்களும் உள்ளார்கள். அதற்குத்தான் சதாவதானி, அஷ்டாவதானி என்று பெயர் வைத்துள்ளார்களே” என்றார்.

விடாமுயற்சியில் வந்த வெண்பா!
இசையமைப்பாளரோடு சேர்த்து ‘எழுத்தாளர் இளையராஜா’ என்று பாராட்டும் அளவுக்கு நீங்கள் தொடர்ச்சியாக படைப்புகளை உருவாக்கி வருகிறீர்கள். ரமண மாலை, வெண்பா அழகாக எழுதுகிறீர்கள். கவிஞர் வாலி ஒருமுறை எனக்கு வெண்பா சொல்லிக் கொடுத்ததே இளையராஜா தான் என்று கூறியுள்ளார். இவையெல்லாம் உங்கள் தேடலாக இருந்ததா? என்ற கேள்விக்கு,
அதற்கு இளையராஜா, “எனது தேடல் இசையாக தான் இருந்தது. 2000 ஆம் ஆண்டின் போது தான் வெண்பாவை எழுதிப் பார்க்கலாமா? என்று நான் முயற்சி செய்தேன். அப்போது நான் நினைப்பதை எழுதினால் அது இலக்கணத்திற்குள் வரவில்லை; இலக்கணத்திற்குள் வருவதாக இருந்தால் அதில் நான் நினைப்பது வருவது கிடையாது. இப்படி ஒரு சங்கடத்தில் மாட்டிக் கொண்டேன்.
ஒரு கட்டத்தில் வெண்பா வரவில்லை என்று அந்த முயற்சியை கைவிட்டேன். 3 நாட்கள் கழித்து எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மீண்டும் வெண்பாவை எழுத முயற்சித்தேன். தொடக்கத்தில் மிக எளிதாக எனக்கு அது வரவில்லை. விடாமல் முயற்சி செய்ததால் காலப்போக்கில் வெண்பா சரளமாக எழுத வந்தது. பிறகு கவிஞர்களுடன் அது பற்றி ஆலோசனை கேட்கும் போது வெண்பா இன்னும் மெருகேறியது.

புதிய முயற்சிகளுக்கான காரணம்!
சிம்பொனி இன்று சர்வேதச அளவில் அரங்கேறியுள்ளது என்பது நான் அறிந்தவற்றை ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் காரணம். திருக்குறளை எழுதும்போது அது திருக்குறள் என்று திருவள்ளுவருக்கு தெரியாது.
ஒவ்வொரு முறையும் தெரியாததை தான் தேடிக் கொண்டிருக்கிறோம். தெரியாததை தேடும் போது உயர்ந்ததை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் வரும். இசையில் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை ஜனங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இந்த புதிய முயற்சிகளுக்கு காரணம்” என இளையராஜா தெரிவித்தார்.