ஜீயோ டாமின் ம Worlds Modern garbage Colonization
ஒரு காலத்தில் சற்றேறக்குறைய இவ்வுலகின் அனைத்து ஆசிய ஆப்பிரிக்க நாடுகளும் ஐரோப்பிய நாடுகளுக்கு அடிமைகளாய் இருந்தன. அக்காலத்தில் தமது காலனிய நாடுகளின் இயற்கை வளங்களையும் தொழிலாளர்களையும் சுரண்டி அந்த நாடுகள் தம்மை வளப்படுத்திக்கொண்டன.
காலப்போக்கில் எல்லா நாடுகளும் இந்த நேரடியான காலனிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைந்துவிட்டன. இன்று, எந்த நாடும் பிரிட்டனுக்கோ பிரான்சுக்கோ அடிமையாக இல்லையென்று நாம் சொல்லிக்கொள்கிறோம். ஆனால், உண்மையில், இந்த அடிமைத்தனம் இன்னும் வேறுவகையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. Worlds Modern garbage Colonization
பல நூற்றாண்டுகளாக காலனிய நாடுகளைச் சுரண்டிவந்த வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றபடியே இன்றைய உலகமயமான நவீனப் பொருளாதார அமைப்பானது திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் கிடைக்கும் மலிவான தொழிலாளர் படையையும், இயற்கை வளங்களையும் பயன்படுத்தித் தமக்குத் தேவையான சொகுசு நுகர்பொருட்களை வளர்ந்த நாடுகள் உற்பத்தி செய்து கொள்வதை இந்த உலகமயமான நவீனப் பொருளாதாரம் இலகுவானதாக மாற்றியிருக்கிறது. இதற்கு ஏற்ற வகையில் இந்த நாடுகளின் தற்சார்பை சிதைத்துத் தமக்கான சந்தையாக அவற்றை அவை மாற்றியிருக்கின்றன.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகள் வெறுமனே தமக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் சமையல்கூடமாக மட்டுமே மூன்றாம் உலக நாடுகளை வைத்திருக்கவில்லை. மாறாக, தாம் பயன்படுத்தித் தூக்கியெறியும் கழிவுகளைக் கொட்டும் கழிவறையாகவும்கூட இந்தியா போன்ற நாடுகளைப் பயன்படுத்திக்கொள்கின்றன. ஐரோப்பா சென்று வரும் நம்மவர்கள் அந்த நாடுகளின் சாலைகளின் தூய்மை குறித்து வானளாவப் புகழ்வது வாடிக்கை. ஆனால், எப்படி அந்தச் சாலைகள் அவ்வளவு தூய்மையாக இருக்கின்றன என்பதை ஆழமாக அறிய அவர்கள் முற்படுவதில்லை.
முதலாவதாக, பல நூற்றாண்டுகளாக காலனித்துவம் மற்றும் நவீனப் பொருளாதார அமைப்பால மூன்றாம் உலக நாடுகளிடமிருந்து சுரண்டிய செல்வ வளமானது அவற்றுக்கு பொதுசுகாதாரக் கட்டமைப்புகளில் அதிகம் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை அள்ளி வழங்கியிருக்கிறது.

இரண்டாவது விஷயம் மிகவும் முக்கியமானது. எப்படி கையாள முடியாத மருத்துவக் கழிவுகளை நம் அண்டை மாநிலமான கேரளம் தமிழ்நாட்டின் எல்லையோர கிராமங்களில் கொட்டுகிறதோ அதுபோலவே இந்த வளர்ந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் பல நூற்றாண்டுகளாகத் தம் கழிவுகளைக் கொட்டி வருகின்றன.
குறைந்தபட்சம் அண்டை மாநிலக் கழிவுகள் நம் மாநில எல்லைக்குள் நுழையும்போது அதுவொரு அத்துமீறல் என்றும் அநீதியென்றும் நாம் குமுறுகிறோம். அதற்கு எதிராகக் குரல் எழுப்புகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக இதுவொரு சட்டமீறலாக இருக்கிறது. இழிமுரணாக, மேற்கத்திய நாடுகளின் குப்பைகளை மூன்றாம் உலக நாடுகள் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கின்றன. மறுசுழற்சி என்ற பெயரில் இவற்றை விலைகொடுத்து இறக்குமதி செய்ய ஏராளமான நிறுவனங்கள் இங்கு தவம் கிடக்கின்றன.
மேலை நாடுகளின் மின்னணுக் கழிவுகள், நெகிழிக் கழிவுகள், காகிதக் கழிவுகள், மின்கலங்கள், காலாவதியான கப்பல்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் என ஒவ்வொரு ஆண்டும் பலகோடி மெட்ரிக் டன் நச்சுக் குப்பைகளை இந்தியா போன்ற நாடுகள் இறக்குமதி செய்கின்றன. இந்தக் கழிவுகளை நம்பியிருக்கும் பெரிய – சிறிய நிறுவனங்களும் அதன் விளிம்புநிலைத் தொழிலாளர்களுக்கும் இது வாழ்வாதாரமாகவும் அதே வேளையில் அவர்களுக்குக் கொடூரமான நோய்களைப் பரிசளித்து நம் மண்ணையும் பாழ்படுத்தும் சாபக்கேடாகவும் இந்த குப்பைகள் திகழ்கின்றன.
உலக அளவில் இப்படி ஒரு நாட்டின் குப்பைகள் இன்னொரு நாட்டில் கொட்டப்படுவதைத் தடுக்க ‘பேசல்’ (Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal) என்ற உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த உடன்படிக்கையின் ஓட்டைகளைப் பயன்படுத்தி சர்வ சாதரணமாக எல்லா வகையான நச்சுக் கழிவுகளும் நாடுகளுக்கிடையே தூக்கிச் செல்லப்படுகின்றன.
இந்தியாவும் கழிவுகள் இறக்குமதியும்
நாடுகளுக்கிடையே என்று சொன்னாலும்கூட எப்போதும் இவை வளர்ந்த நாடுகளிலிருந்து மூன்றாம் உலக நாடுகளுக்கே பயணிக்கின்றன. இவற்றில் எல்லா வகையான நச்சுக் கழிவுகளையும் பெற்றுக்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இங்கிருக்கும் நெகிழிக் கழிவுகளையே நம்மால் கையாள முடியாத சூழலில், சமீபத்தில் நெகிழிக் கழிவுகளின் இறக்குமதியை எளிதாக்க ஒன்றிய அரசு சில சட்டத்திருத்தங்களையும் கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நச்சுக் கழிவுகளின் இறக்குமதி வரிசையில், இந்தியா இறக்குமதி செய்யும் குப்பைகளில் ஒன்றாக வாகனங்களில் பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்படும் டயர்கள் இடம்பெற்றிருப்பது சமீபத்தில் தெரிய வந்திருக்கிறது. கடந்த வாரத்தில் இந்த அதிர்ச்சி செய்தியை பிபிசி ஊடகம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
அது, ஒவ்வொரு ஆண்டும் யுனைட்டட் கிங்டம் நாடுகளிலிருந்து பல இலட்சம் டயர்கள் கப்பல்களில் ஏற்றப்பட்டு எரித்து அழிக்கப்படுவதற்காக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவதாகத் தெரிவிக்கிறது. பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணித்து இந்தியாவை அடையும் இந்த கழிவுகள் சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாகச் செயல்படும் பைராலிசிஸ் நிலையங்களில் எரிக்கப்படுகின்றது என்கிறது அந்த செய்தி. Worlds Modern garbage Colonization
‘பைராலிசிஸ்’ எனப்படுவது நெகிழியை உயர்வெப்பத்தில் எரி எண்ணையாக மாற்றும் மிக அதிக சூழல் மாசுபாட்டை உருவாக்கும் ஒரு தொழில்நுட்பமாகும். Worlds Modern garbage colony

இவ்வுலகினில் பெருமளவில் தவறாகக் கையாளப்படும் வார்த்தைகளில் ஒன்று ‘மறுசுழற்சி’. எந்தப் பொருளாக இருந்தாலும் சரியாக மறுசுழற்சி செய்துவிட முடியுமென்று நாம் நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், நம்முடைய நுகர்பொருட்களில் சாதாரண ஒரு சாக்லேட் பொதியும் நெகிழித் தாளிலிருந்து ஏராளமான பொருட்கள் மறுசுழற்சி செய்ய இயலாதவை. அதுமட்டுமின்றி இவற்றில் பெரும்பாலானவை அபாயகரமானவையும்கூட. அப்படியான நச்சுக்கழிவுகளின் ஒன்றுதான் டயர்கள். Worlds Modern garbage Colonization
உலகம் முழுதும் தனி நபர் வாகனப் போக்குவரத்து கண்மூடித்தனமாகப் பெருகிவரும் நிலையில் டயர்கள் தவிர்க்க முடியாத கழிவுகளாகப் பெருகிவருகின்றன. டயர்களில் செம்பு, ஈயம், துத்தநாகம் உள்ளிட்ட கனவுலோக நச்சுக்களும், நுண்ணெகிழித் துகள்களும், பாலிசிசிலிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன் மற்றும் தாலேட்டுகள் உள்ளிட்டப் பல நச்சு கரிம வேதிப் பொருட்களும் வேறுபல சிந்தெட்டிக் வேதிப்பொருட்களும் கலந்திருக்கின்றன. இவை, டயர்கள் கழிவாக எஞ்சும்போது மட்டுமின்றி பயன்பாட்டிலும் (வாகனங்கள் சாலைகளில் பயணிக்கும்போது ஏற்படும் உராய்வின்போது) ஏராளமான நச்சுக்களை காற்றிலும் தரையிலும் கசியச் செய்கின்றன. இவற்றை எரிப்பதன்மூலமாக உருவாகும் சாம்பல் உள்ளிட்ட விளைபொருட்களும் புகையும் கடும் நச்சுத்தன்மை கொண்டவை.
மறுசுழற்சி செய்ய முடியாத – எவ்வகையிலும் அழிக்க முடியாத இந்தக் கழிவுகள் இந்தியா போன்ற நாடுகளில் கொட்டப்படுவதை கவனப்படுத்தியிருப்பதன்மூலமாக பிபிசி பல விஷயங்களை நமக்கு மீண்டும் நினைவூட்டி எச்சரிக்கிறது. முதலாவதாக, காலனீய ஆதிக்கம் நவீன வகையில் ஒரு சுரண்டல் பொருளாதாரமாகவும் குப்பைக் காலனியமாகவும் (waste colonialism) வளர்ச்சியடைந்திருக்கிறது. இந்தியா போன்ற நாடுகள் என்னதான் பொருளாதாரத்தில் பெரும் வல்லமையுடன் திகழ்ந்தாலும் இந்த வளர்ந்த நாடுகளின் குப்பைத் தொட்டிகளாகவே நீடிக்கின்றன. Worlds Modern garbage Colonization
மேலும், இந்த செய்தியானது கையாள முடியாத நச்சுக் கழிவுகள் இவ்வுலகினில் தொடர்ந்து கண்மூடித்தனமாக உற்பத்தி செய்யப்படுவதையும் அவற்றின்மூலம் இலாபமீட்டும் நிறுவனங்கள் தங்கள் இலாபங்களைத் தக்க வைத்துக்கொள்வதையும் பாதிப்புகளை மட்டும் அரசாங்கங்களுக்கும் விளிம்புநிலை நாடுகளுக்கும் – சமூகங்களுக்கும் திசைதிருப்பி விடுவதையும் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது. சூழல் பார்வையில் நாடுகளுக்கிடையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் இவ்விஷயத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பதோடு அவை சூழல் நீதியோடு எப்படி நெருங்கியத் தொடர்புடையவையாக இருக்கின்றன என்பதையும் இது உணர்த்துகிறது.
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்! இதற்கு தீர்வு அல்லது மாற்று என்ன?
இது எளிதான பதில் பெறக்கூடிய கேள்வி அல்ல. நன்கு கட்டமைக்கப்பட்ட – விளிம்பு நிலை சமூகங்களுக்கும் எளிதில் எட்டக்கூடிய பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தை உருவாக்குவது, இந்த கண்மூடித்தனமான கழிவுகளின் உற்பத்தியைக் கணிசமாகக் குறைக்குமென்று தோன்றுகிறது. ஆனால், அந்தப் பொதுப்போக்குவரத்து தனி நபர் வாகன உற்பத்தியையும் நுகர்வையும் கட்டுப்படுத்துவதாயும் அமைய வேண்டும்.

வெறுமனே பேருந்துகளும் மெட்ரோ இரயில்களும் மட்டுமே தனிநபர் வாகனப் போக்குவரத்தைக் குறைத்துவிடாது. தனிநபர் வாகனங்களை மட்டுப்படுத்த வரிகள் அதிகரிப்பது சாலையோர வாகன நிறுத்தங்களைச் சட்ட விரோதமாக்குவது போன்ற கடுமையான நடவடிக்கைகளும் அவசியம். இன்னொருபுறம், உலகளாவிய குப்பை இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதும் அதற்கான சட்டங்களை வலிமைப்படுத்துவதும் அவசியம். Worlds Modern garbage Colonization
இவற்றிற்குத் தேவையான ‘அரசியல் துணிவு’ நாம் தேர்ந்தெடுத்திருக்கும் அரசாங்கங்களுக்கு இருக்கிறதா? இந்த அரசியல் துணிவுக்கான அழுத்தத்தைக் கொடுக்கும் அரசியல்படுத்தப்பட்ட குடிமைச் சமூகமாக நாம் இருக்கிறோமா? இந்த கேள்விகளுக்கான பதிலிலேயே நம் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. Worlds Modern garbage Colonization
கட்டுரையாளர் குறிப்பு Worlds Modern garbage Colonization

ஜீயோ டாமின் ம, பூவுலகின் நண்பர்கள் அமைப்பில் செயல்பாட்டாளராக இருக்கிறார். சுற்றுச்சூழல் குறித்து பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். காலநிலை மாற்றம், பசுமைக் கட்டுமானங்கள், நெகிழி, குப்பை மேலாண்மை போன்ற பல சூழல் தொடர்பான விஷயங்களில் பள்ளி கல்லூரிகளிலும் பொதுமக்களிடையேவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.