“நிச்சயமற்ற காதலும்… நிச்சயமான இன்சூரன்ஸும்! ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ விரிவான விமர்சனம்”

Published On:

| By Santhosh Raj Saravanan

lik movie review pradeep ranganathan vignesh shivan futuristic romcom 2026

“காதலையும் காப்பீடு செய்ய முடியும்” என்ற ஒரு விசித்திரமான, அதே சமயம் சுவாரசியமான கற்பனையோடு 2040-ம் ஆண்டுக்கு நம்மை அழைத்துச் சென்றிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்னேஷ் சிவன் – அனிருத் என்ற கூட்டணி இணைந்திருப்பதால், கோலிவுட் வட்டாரத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) மீதான எதிர்பார்ப்பு எகிறிக் கிடந்தது. அந்த எதிர்பார்ப்பை இந்த ‘ஃபியூச்சரிஸ்டிக்’ ரோம்காம் பூர்த்தி செய்ததா? அலசுவோம்.

புதிய களம், பழைய சவால்

திரைப்படத்தின் கதை 2040-ம் ஆண்டின் பின்னணியில் நகர்கிறது. டெக்னாலஜி நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவிலும் நுழைந்துவிட்ட காலம் அது. அங்கே நீங்கள் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பது போலவே, உங்கள் காதலையும் இன்சூரன்ஸ் செய்துகொள்ளலாம். இதற்கென ஒரு பிரத்யேக அல்காரிதம் உள்ளது. அது உங்கள் துணையுடனான பொருத்தம், உங்கள் காதலின் வெற்றி வாய்ப்பு ஆகியவற்றை முன்கூட்டியே கணக்கிட்டுச் சொல்லும்.

ADVERTISEMENT

ஒரு படைப்பாளியாக விக்னேஷ் சிவன் தொட்டிருக்கும் இந்தக் களம் மிகவும் பாராட்டுக்குரியது. குறிப்பாக முதல் பாதியில், அந்தச் செயற்கையான உலகத்தை அவர் கட்டமைத்துள்ள விதம் ரசிக்க வைக்கிறது. வண்ணமயமான காட்சிகள், ஃபியூச்சரிஸ்டிக் உலகம் என ஒரு வண்ணக் காகிதக் கனவை அவர் கண்முன்னே நிறுத்தியுள்ளார்.

பிரதீப் – எஸ்.ஜே. சூர்யா: திரையில் ஒரு ‘வைப்’

படத்தின் மிகப்பெரிய பலமே அதன் நட்சத்திரப் பட்டாளம் தான்.

ADVERTISEMENT

‘வைப் வாசி’ என்ற கதாபாத்திரத்தில் பிரதீப் தனது டிரேட்மார்க் 2K கிட்ஸ் பாணியில் பின்னியெடுத்துள்ளார். அவரது உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பு எதார்த்தமாக அமைந்து, படத்தை 2K கிட்ஸ் எளிதில் கனெக்ட் செய்துள்ளது. எஸ்.ஜே. சூர்யா வழக்கம்போல தனது அசுரத்தனமான நடிப்பால் திரையரங்கை அதிர வைக்கிறார். இவருக்கும் பிரதீப்பிற்குமான மோதல் காட்சிகள் படத்தின் உச்சகட்டம். சீமான் & யோகி பாபு அரசியல் நையாண்டி மற்றும் கச்சிதமான நகைச்சுவை மூலம் கதையோட்டத்திற்கு அங்கங்கே பலம் சேர்க்கிறார்கள். குறிப்பாக சீமானின் ‘தூய தமிழ்’ பிரயோகங்கள் தியேட்டரில் 2K கிட்ஸ்க்கு புதுமை.

ஜொலிக்கும் தொழில்நுட்பம்

அனிருத்தின் இசை படத்திற்கான ஆக்சிஜென். ஏற்கனவே ஹிட் அடித்த ‘தீமா’, ‘எனக்கென யாருமில்லையே’ போன்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை காட்சிகளின் பலத்தை கூட்டுவதாக உள்ளது. ரவி வர்மனின் ஒளிப்பதிவு 2040-ம் ஆண்டின் சென்னையை மிகவும் அழகாகவும், நவீனமாகவும் காட்டியுள்ளது. விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளும் ஒரு சர்வதேசத் தரத்திற்க்கான சிறந்த முயற்சி.

ADVERTISEMENT
இரண்டாம் பாதியில் சறுக்கியது ஏன்?

படம் முதல் பாதியில் காட்டிய அதே வேகத்தை இரண்டாம் பாதியில் தக்கவைக்கத் தவறிவிட்டது என்பதே கசப்பான உண்மை.

பலவீனமான திரைக்கதை

ஒரு அழகான ‘லவ் இன்சூரன்ஸ்’ கான்செப்டை எடுத்துக்கொண்டு, இறுதியில் அதை ஒரு வழக்கமான ‘ஈகோ’ சண்டையாக மாற்றியது ஏமாற்றம் அளிக்கிறது.

எமோஷனல் கனெக்ட்

பிரதீப் – கிருத்தி ஷெட்டி இடையே காதல் காட்சிகள் அழகாக இருந்தாலும், அவற்றில் இருக்க வேண்டிய ஆழமான எமோஷனல் கனெக்ட் (Emotional Connection) மிஸ்ஸிங். ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.

உறுதியற்ற உலகம்

2040 என்ற போதிலும் ரோபோக்கள், ஹாலோகிராம் என்று மட்டும் காட்டி ‘வேர்ல்ட் பில்டிங்’ என்று செய்தது படத்தின் தரத்தைக் குறைக்கின்றன.

“காப்பீடு கைகொடுத்ததா?”

மொத்தத்தில் ‘LIK’ திரைப்படம், பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் ஒரு ஜொலிக்கும் காகிதக் கனவு போன்றது. விக்னேஷ் சிவனின் விசித்திரமான கற்பனைத் திறன், பிரதீப்பின் எனர்ஜி ஆகியவை ஒருமுறை பார்க்கத் தூண்டுகின்றன. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் ஆழமும் எமோஷனல் கனெக்ட்டும் இருந்திருந்தால், இந்த ‘காதல் காப்பீடு’ ஒரு மெகா ஹிட் பாலிசியாக மாறியிருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share