இந்த கொரோனா வைரஸும், ஊரடங்கும் நம்மில் பலரது வாழ்க்கையையும் பல காலம் பின்னோக்கி அழைத்துச் சென்றுவிட்டது.
விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் எட்டிப்பிடித்த இடங்களை எல்லாம் இல்லாமல் ஆக்கிவிட்டது இந்த கொடும் நோய். வெற்றியின் விளிம்பில் இருந்தவர்கள் பலரையும் மீண்டும் ஆரம்பப்புள்ளிக்கே கொண்டு வந்துவிட்ட இந்த கொரோனா, சிலரை அதைவிட மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டது. வேலை இழந்து, வருமானம் இல்லாமல் பசியிலும், பட்டினியிலும் மக்கள் மடிந்து கொண்டிருக்கும் அவலத்தை தொடர்ந்து நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.
அந்த கொடுமையை உணர்த்தும் விதமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகப் பகிரப்பட்டு வருகிறது.
முற்றிலும் நரை விழுந்த முடியும், சுருங்கிய தோலுமாய் காட்சியளிக்கும் மூதாட்டி ஒருவர் இரு கைகளாலும் சிலம்பம் சுற்றி பிச்சை கேட்கும் பரிதாப காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. வாகனங்கள் பாய்ந்து செல்லும் வீதியின் ஓரத்தில் நின்று அந்த மூதாட்டி சிலம்பம் சுற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. தான் கற்ற வீரக்கலையை வீதிக்குக் கொண்டு வந்து மூதாட்டி ஒருவர் வயிற்றுப் பசிக்கு வழிதேடும் அவலம் அனைவரையும் கலங்க செய்வதாக உள்ளது.
அந்த பாட்டியின் அசாத்திய திறமைக்கு அனைவரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், நமது பாரம்பரியத்தைப் பறைசாற்றும் சிலம்பக்கலையில் தேர்ந்த வீராங்கனை ஒருவர், பசியாற்றப் பிச்சை எடுக்கும் அவலத்தை நினைத்து வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
