கொரோனா காரணமாக தமிழகத்தில் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடையை மீறி நடிகர்கள் விமல் மற்றும் சூரி கொடைக்கானலுக்குச் சென்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் தொடங்கிய நேரத்திலேயே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கொடைக்கானலில் சுற்றுலா. பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும் தடையை மீறி சிலர் அங்கு வந்து செல்வது அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் பிரபல நடிகர்கள் விமல் மற்றும் சூரி தடையை மீறி அங்கு சுற்றுலா சென்றது தெரியவந்துள்ளது. மேலும், நான்கு நாட்கள் அவர்கள் கொடைக்கானலில் தனியார் மாளிகை ஒன்றில் தங்கியிருந்து, கோடை விடுமுறையைக் கொண்டாடியதும், ஊரடங்கு தடையை மீறி பாதுகாக்கப்பட்ட ஏரியில் இருந்து மீன் பிடித்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், சர்ச்சையாக மாறியது. சென்னையிலிருந்த சூரியும், விமலும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் எடுத்து சென்றார்களா, தடைசெய்யப்பட்ட பேரிஜம் ஏரிக்குச் செல்ல அவர்களுக்கு அதிகாரிகள் யாரேனும் உதவினார்களா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் ஊரடங்கு தடையை மீறிய அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டவிரோதமாக வனப் பகுதிக்குள் நுழைய அவர்களுக்கு உதவிய அதிகாரிகளை உடனடியாக விசாரிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வனத் துறையினர், அவர்கள் இருவருக்கும் தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**,”
