நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் இருந்து புதிய பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் 45 ஆவது பிறந்தநாள் இன்று(ஜூலை 23). அதனை முன்னிட்டு ரசிகர்களும், திரை நட்சத்திரங்களும் அவருக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த நாளை சிறப்பிக்கும் விதமாக சிறப்பு போஸ்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்தாக இன்று (ஜூலை 23) காலை 10 மணிக்கு, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் இருந்து ‘காட்டு பயலே’ எனும் பாடலின் ஒரு நிமிட வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
‘ரவுடி பேபி’ பாடலை பாடிய பாடகி தீ, ‘காட்டு பயலே’ பாடலைப் பாடியுள்ளார். படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடலின் லிரிக்கல் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் பாடல் வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்பாடலுக்கான வரிகளை ஸ்னேகன் எழுதியுள்ளார்.
இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.
இந்தப்படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மோகன் பாபு, பரேஷ் ராவல், கருணாஸ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டவர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கொரோனா பிரச்னைகள் முடிவுக்கு வந்து மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படும் போது படத்தின் ரிலீஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**,”
