முன்னாள் சபாநாயகர் தனபாலை சந்தித்து எல் முருகன் ஆசி பெற்றுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதில் முன்னாள் சபாநாயகர் தனபால் தொகுதியான அவிநாசி தொகுதியை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கியது.
இதனால் தனபால் கடும் அதிருப்தியில் இருந்தார்.
நான் சீட் கேட்டது உண்மைதான். ஆனால் எனக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அதிமுகவிலிருந்து என்னை வந்து யாரும் பார்க்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அவிநாசி தொகுதியில் 1984, 1989 ,1991, 2001, 2006, 2011 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வென்றுள்ளது.
குறிப்பாக 2016 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தனபால் 93, 366 வாக்குகள் பெற்று 30,674 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆனந்தனை தோற்கடித்தார்.
2021 தேர்தலிலும் அவரே போட்டியிட்டு 1,17,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் 2026 தேர்தலில் அவருக்கு அதிமுக சீட் கொடுக்காததால், கடும் அதிருப்தியில் இருந்த தனபாலை பாஜக வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இன்று (ஏப்ரல் 5) நேரில் சந்தித்துள்ளார். அப்போது தனபாலுக்கு பொன்னாடை போர்த்தி காலில் விழுந்து ஆசி பெற்றார்.
தனபாலை சந்தித்து வாழ்த்து பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என தனது எக்ஸ் பக்கத்தில் எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், 75000 வாக்குகள் வித்தியாசத்தில் அவிநாசியில் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.
