Central cheating tamilnadu in cess tax
“மன் கீ பாத் – மனதின் குரலுக்கு ஓர் இந்திய குடிமகனின் 108 கேள்விகள்” என்ற தலைப்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் எழுதி மின்னம்பலம் பதிப்பகம் பதிப்பித்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று ( மார்ச் 10) நாகர்கோவில் நகரம் எடலாக்குடியில் நடந்தது.
மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட, முதல் பிரதியை மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் பேசிய ஜெயரஞ்சன் சில முக்கியமான உண்மைகளையும் வெளியிட்டார்.
“நாமெல்லாம் உண்மையை பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் பாஜகவினர் உண்மைக்கு அப்பாற்பட்ட ஓர் உலகத்தில் இருக்கிறார்கள். நீங்கள் சொல்வது உண்மை என்றால், நாங்கள் சொல்வதும் உண்மைதான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மைக்கு எதிரானவற்றை பேசுவதையே ஸ்டார்ட்டர்ஜியாக வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்வதற்கு இந்த புத்தகம் தேவையாக இருக்கிறது. ஆனால், இந்த புத்தகம் மட்டுமே போதுமானது அல்ல. அவர்களின் பொய்க்கு எதிராக நாம் உண்மையை சொல்வதற்குள் அவர்களின் பொய் ஊர் முழுவதும் சுற்றி வந்துவிடுகிறது.
கடந்த யுபிஏ அரசாங்கத்தில் மாநிலங்களுக்கு 2 லட்சம் கோடி கொடுத்தார்கள். இப்போது 8 லட்சம் கோடி கொடுக்கிறோம் என்று நம்பரை சொல்கிறார்கள். ஆனால், பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த பட்ஜெட் தொகை என்ன? இன்றைய பட்ஜெட் தொகை எவ்வளவு அதிகம்? நம் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்று கேட்டால், அவர்கள் நம்பரை சொல்கிறார்கள். இதையெல்லாம் நாம் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
செஸ் என்பது குறிப்பிட்ட காரணத்துக்காக குறிப்பிட்ட காலத்துக்காக மட்டும் வசூலித்துக் கொள்ளும் வரி. கல்விக்காக, உள் கட்டமைப்புக்காக இதை செய்தார்கள். பொதுவாக செஸ் என்பது 5% தான் இருக்கும். ஆனால், இந்த படுபாதகர்கள் ஆட்சியில் இப்போது செஸ் வரி 28% போடுகிறார்கள்.
மொத்த வரி வருவாயில் செஸ் வரியை எடுத்து வைத்துக் கொண்டு மீதி இருக்கும் வரியில்தான் மாநிலங்களுக்கு பங்கு கொடுக்கிறார்கள். இதை நாம் மக்களிடம் எடுத்துச் சென்று புரிய வைக்க வேண்டும்.
செஸ் வரியின் மூலமாக மட்டும் ஒன்றிய அரசு கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை தமிழக அரசிடம் இருந்து 40 ஆயிரம் கோடி ரூபாயை ஏமாற்றி மடைமாற்றியிருக்கிறார்கள்.
இதனால் மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்களில் பெரும் நெருக்கடி ஏற்படுகிறது. காலை உணவுத் திட்டத்துக்கு நமக்கு 500 கோடி ரூபாய் ஆகிறது. ஒருவேளை செஸ் வரியால் மடைமாற்றப்பட்ட அந்த 40 ஆயிரம் கோடி ரூபாய் நமக்கு கிடைத்திருக்குமானால் நாம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு ஆயிரம் ரூபாய்க்கு பதில் 2 ஆயிரமாக கூட கொடுக்கலாம். அனைவருக்கும் கூட கொடுக்கலாம். இதுபோல் அவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தி துரோகம் செய்கிறார்கள். மாநில அரசையும் செயல்பட விடாமல் முடக்க முயற்சி செய்கிறார்கள்.
சமுதாய அடுக்கை எடுத்துப் பார்த்தால் தலித்துக்கு கீழேதான் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அவர்களை கை தூக்கி விடுவதற்காக யுபிஏ அரசில் மைனாரிட்டி ஸ்காலர்ஷிப் கொண்டுவந்தார்கள். பள்ளி முதல் பி.ஹெச்.டி வரை அது கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த ஆட்சியில் ஒரே ஒரு ஆர்டரில் அதை ஒழித்துவிட்டார்கள். இஸ்லாமியர்கள் எந்த நிலையில் இருக்கிறீர்களோ அதே நிலையில் இருங்கள், படித்து முன்னேறாதீர்கள் என்பதுதான் அதற்கு அர்த்தம். இதுபற்றி கேள்வி எழுப்பினால் எந்த நிலையும் இல்லை.
நாம் கடந்த 75 வருடங்களாக கட்டியெழுப்பிய அமைப்புகளை கடந்த 10 வருடங்களில் நொறுக்கித் தள்ளிவிட்டார்கள். ஒரு மன்னர் இருந்தால் எப்படி நடக்குமோ அப்படித்தான் இப்போது நடக்கிறது.
சிஏஜி அமைப்பு தணிக்கை செய்து ஒவ்வொரு துறை வாரியாக ஆய்வு செய்து அறிக்கைகள் கொடுத்து வருகிறார்கள். 2ஜி விவகாரத்தில் சிஏஜி அனுமானத்தின் பேரிலான இழப்பு என்று சொன்னபோது உச்ச நீதிமன்றம் தானாகவே எடுத்துக் கொண்டு விசாரித்தது. ஆனால் சிஏஜி இப்போது பல அறிக்கைகள் வெளியிட்டும் அமைப்புகள் என்ன செய்கின்றன?
மோடி என்ற தனி மனிதர் ஆர்.எஸ்.எஸ்.சைத் தாண்டி ஒரு சர்வாதிகாரியாக நடந்துகொண்டிருக்கிறார். அதற்கு அவர்கள் எந்த லெவலுக்கும் போவார்கள். தினம் தினம் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
அவர்களை எதிர்கொள்ள நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அறிவாயுதம். அதற்கு இந்த புத்தகம் பயனுள்ளதாக இருக்கும். இந்த புத்தகம் கன்னியாகுமரி மட்டுமல்ல தமிழகம் முழுக்க சென்று சேர வேண்டும். இதை தேர்தல் உத்தியாக பயன்படுத்த வேண்டும். காலம் அனுமதித்தால் இதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க வேண்டும், இதை வீடியோ வடிவிலும் யூட்யூப்பில் வெளியிட வேண்டும். தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று உரையாற்றினார் முனைவர் ஜெயரஞ்சன்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் பத்திரங்கள் வழக்கு: எஸ்பிஐ கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!
‘இனிமே அது கெடையாது’ வாடிக்கையாளர்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த நிறுவனம்!
Central cheating tamilnadu in cess tax