நீதிமன்றத்தில் மின்னம்பலம் வீடியோ ஆதாரம்… பறிபோன பன்னீர் மகன் பதவி!

தமிழகம்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் பணம் வழங்கி ஊழலில் அதிமுக ஈடுபட்டதற்கான ஆதாரமாக மின்னம்பலத்தின் வீடியோ இருந்தது என்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அருண் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம்‌ ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில்‌, தேனி தொகுதியில்‌ அதிமுக சார்பில்‌ ஓ.பி.ரவீந்திரநாத்‌ போட்டியிட்டு தனக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ்‌ வேட்பாளர்‌ ஈ.வி.கே.எஸ்‌. இளங்கோவனை விட 76,319 வாக்குகள்‌ அதிகம்‌ பெற்று வெற்றி பெற்றார்‌.

வேட்புமனுவில் முறைகேடு

இந்நிலையில் ஓ.பி.ரவீந்திரநாத்‌ வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்‌ கோரி அந்த தொகுதி வாக்காளர்‌ மிலானி சென்னை உயர்‌ நீதிமன்றத்தில்‌ வழக்கு தொடர்ந்தார்‌.

அந்த மனுவில் “தேனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வேட்புமனுவில் தன் பெயரிலான கடன்களையும், பங்குகளையும் மறைத்து சொத்துமதிப்பை குறைத்து குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம்‌ கொடுத்து ரவீந்திரநாத்‌ தேர்தலில்‌ வெற்றி பெற்றார்‌. பணப்‌ பட்டுவாடா அதிகம்‌ நடப்பதாக வேலூர்‌ தொகுதி தேர்தல்‌ தள்ளிவைக்கப்பட்டது. ஆனால்‌ தேனி தொகுதியிலும்‌ அதிக பணப்பட்டுவாடா நடந்தும்‌ தேர்தல்‌ தள்ளிவைக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்‌.

மின்னம்பலம் வீடியோ ஆதாரம்

இதுகுறித்து நமது மின்னம்பலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ”தேனியில் ஓட்டுக்குப் பணம்: தலித் சமூகத்தினருக்கு ரூ. 1500; மற்ற சமூகத்தினருக்கு ரூ. 1000!” என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டிருந்தோம்.  

இந்த வீடியோவும் மனுதாரர் தரப்பில் ஆதாரமாக உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் கடந்த சில வருடங்களாக நடந்து வரும் இந்த வழக்கில் ஓ.பி.ரவீந்திரநாத்தின்‌ வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம்‌ நேற்று (ஜூலை 6) அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு நகலின் 122ஆம் பக்கத்தில் ADDITIONAL ISSUE NO.[2] என்ற தலைப்பில் நமது மின்னம்பலத்தின் வீடியோ குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதில் “ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மனுதாரர் சமர்பித்த வீடியோ கிளிப்பிங் Whatsapp மற்றும் YouTube சமூகவலைதளங்களில் அதிகளவில் பரவியது. அதனை நீதிமன்றம் ஆடியோவுடன் பார்த்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு எதிரான தீர்ப்பில் மனுதாரர் சமர்பித்த மின்னம்பலத்தின் வீடியோ முக்கிய பங்கை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ரவீந்திரநாத்துக்கு எதிராக மிலானி சார்பில் வாதாடிய வழக்கறிஞர்‌ வி.அருண்‌ நமது மின்னம்பலம் யூடியூப் தளத்தில் இன்று பேட்டி அளித்துள்ளார்.

FIR பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அதில் அவர் பேசுகையில், “வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது ஊழல் என்றே கருதப்படுகிறது. தேனியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அதில் போடிநாயக்கனூரும் ஒன்று. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது அந்த தொகுதியில் வாக்காளர்களுக்கு சரியாக பணம் கொடுக்கப்படுகிறதா என்பதை அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு காட்ட வேண்டும் என்று அந்த வீடியோவை எடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட அந்த வீடியோவில், வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு சவீதா அருண்பிரசாத் என்பவர் மக்களுக்கு ரூ.1000 கொடுத்து அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு கூறுகிறார்.

இந்த வீடியோ தேர்தல் சமயத்தில் வெளியாக அதிகளவில் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தகவல் தேர்தல் ஆணையத்திற்கு தெரியவந்ததை அடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலரை தொடர்பு கொண்டு காவல்நிலையத்தில் FIR பதிவு செய்து வழக்கை நடத்துமாறு உத்தரவிடுகின்றனர்.

விஏஓ அளித்த புகாரின் பேரில் எப்.ஐ.ஆரில், ”குறிப்பிட்ட நபரின் பெயர் மற்றும் அவரது கணவரின் பெயரை சொல்லி, மேலநாதபுரத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பணம் கொடுத்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புகாருடன் சமூகவலைதளத்தில் பரவிய வீடியோவையும், சி.டி.யில் பதிவு செய்து போலீசாரிடம் ஒப்படைத்தார் வி.ஏ.ஓ.

ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பாலும் மறுக்க முடியவில்லை!

ஆனால் அந்த வீடியோ மின்னம்பலம் தளத்தின் யூடியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. அதனை தான் வீடியோ காம்பக்ட் டிஸ்க் எனப்படும் விசிடியில் பதிவு செய்து நீதிமன்றத்தில் அதற்குறிய ஆவணங்களை பெற்று சமர்ப்பித்தோம். நீதிமன்றமும் அதனை ஆடியோவுடன் பார்த்தது.

https://www.youtube.com/watch?v=bKEuFGawXHQ

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எல்லா ஆவணங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால் இந்த வழக்கில் மின்னம்பலம் வெளியிட்ட அந்த வீடியோ ஊழல் செய்ததற்கான முக்கிய ஆதாரமாக கருதப்பட்டது.

உண்மையாக நடந்தேறிய இந்த சம்பவத்தை ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பாலும் மறுக்க முடியவில்லை” என்று வழக்கறிஞர் அருண் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

த்ரெட்ஸ் பாலோவர்ஸ்: கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்

பிரதமர் தலையீடு: ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்ற கேப்டன்!

minnamabalam video ejects opr from his mp post
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *