தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட எஸ்.பி.ஐ வங்கிக்கு கால அவகாசம் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று (மார்ச் 11) உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தேர்தல் பத்திரங்களை சட்ட விரோதம் என்று அறிவித்து ரத்து செய்தது உச்சநீதிமன்றம். மார்ச் 6- ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்கள் குறித்த அனைத்து விவரங்களையும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை இப்போது வெளியிட இயலாது என்றும், அவற்றை வெளியிடுவதற்கு ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வேண்டும் என்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில், எஸ்பிஐ வங்கி மீது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த இரண்டு வழக்குகளும், தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
எஸ்.பி.ஐ வங்கி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஹர்ஷ் சால்வ் ஆஜராகி, “அனைத்து விவரங்களும் அந்தந்த கிளை வங்கிகளில் இருந்து மும்பை தலைமை அலுவலகத்திற்கு சீலிட்ட கவரில் அனுப்பப்படும். அதன்பின்னர் தரவுகள் சரிபார்க்கப்படும். எனவே, தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட மூன்று வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நாளைக்குள் (மார்ச் 12) தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மார்ச் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணைய இணையதள பக்கத்தில் விவரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு எஸ்பிஐ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாஸ் காட்டிய கிறிஸ்டோபர் நோலன்: ஆஸ்கர் விருது முழு விவரம் இதோ!