ஐபிஎல் (IPL 2026) கிரிக்கெட் தொடரில் இன்றைய (ஏப்ரல் 26) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியை சொந்த மண்ணான சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி (Gujarat Titans) தோற்கடித்தது சென்னை ரசிகர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
19-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த ஐபிஎல் திருவிழா இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இன்று மாலை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மாஜி சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
ரன்களைக் குவிக்க போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்தப் போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி வீரர்கள் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குஜராத் அணியின் ககிசோ ரபாடா சிறப்பாக பந்து வீசிசென்னை அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார்.
இதனையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.
‘அசால்ட்’ வெற்றி பெற்ற குஜராத்
குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரரான சாய் சுதர்சன், சென்னை பந்துவீச்சாளர்களைத் திணறடித்து 46 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார். அவருக்கு துணையாக சுப்மன் கில் 33 ரன்களும், ஜோஸ் பட்லர் 39 ரன்களும் (நாட் அவுட்) குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
குஜராத் அணி 16.4 ஓவர்களிலேயே வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 162 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சொந்த மண்ணில் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது.
