மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலால் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா வீடுகள் மற்றும் வாகனங்களுக்கான நகர எரிவாயு விநியோகத்தைப் பாதுகாத்துள்ளதாக வுட் மெக்கன்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக உரத் தொழிற்சாலைகள், சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் தொழிற்துறைகளுக்கான எரிவாயு விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும், இறக்குமதி விலை உயர்வும் எரிவாயு தேவை குறைந்திருப்பதும் இந்தியாவுக்குச் சவாலாக மாறியுள்ளன.
தெற்காசியாவில் சரியும் எரிவாயு தேவை!
2026-ம் ஆண்டில் தெற்காசிய நாடுகளின் LNG தேவை 60 லட்சம் டன் அளவுக்குக் குறையும் என வுட் மெக்கன்சி கணித்துள்ளது. இதற்கு முன்பு, நடப்பாண்டில் 27 லட்சம் டன் அளவுக்கு, அதாவது 7 சதவீதம் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எரிவாயுப் போக்குவரத்தில் ஏற்பட்ட பாதிப்பும், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கிடைக்கும் விநியோகம் தடைபட்டிருப்பதும் இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.
இந்தியாவின் விநியோகக் கட்டுப்பாட்டு நடவடிக்கை!
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நகர எரிவாயு விநியோகத்தைப் பாதிக்காமல் இருக்க, உர உற்பத்தி நிறுவனங்கள், சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான விநியோகத்தை இந்தியா குறைத்தது. இதனால் வீடுகளுக்கான சமையல் எரிவாயு மற்றும் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு விநியோகத்தைத் தொடர்ந்து பராமரிக்க முடிந்தது.
அரசின் மானிய உதவிகளும் உர உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்க உதவின. மே மாதத்தில் 25.19 லட்சம் டன்னும், ஜூன் மாதத்தில் 25.37 லட்சம் டன்னும் யூரியா உற்பத்தி செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
விண்ணைத் தொடும் LNG இறக்குமதி விலை!
விநியோகத்தைப் பாதுகாத்தாலும், விலை உயர்விலிருந்து இந்தியா தப்பவில்லை. மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஒரு மில்லியன் பிரிட்டிஷ் வெப்ப அலகுக்கு (mmBtu) 16.8 முதல் 18.8 அமெரிக்க டாலர் வரை இருந்த LNG ஒப்பந்த விலை, செப்டம்பர் மாதத்தில் 26.4 டாலராக உயர்ந்தது.
இதனால், 2026-ம் ஆண்டில் இந்தியாவின் எரிவாயு தேவை சுமார் 15 லட்சம் டன் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு அதிக நெருக்கடி!
கத்தார் எரிவாயு இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் இந்த நெருக்கடியால் கூடுதல் பாதிப்பைச் சந்தித்துள்ளன. மாற்று விநியோகத்தைப் பெறுவதில் ஏற்பட்ட சிரமம், அதிக விலை, மின்வெட்டு மற்றும் தொழில்துறைப் பாதிப்புகள் அந்நாடுகளின் சவால்களை அதிகரித்துள்ளன.
எதிர்காலத்தில் இத்தகைய நெருக்கடிகளைச் சமாளிக்க, எரிவாயு இறக்குமதிக்கான மாற்று நாடுகளைத் தேர்வு செய்வதும், விலை நிர்ணய முறைகளில் நெகிழ்வுத்தன்மையை உருவாக்குவதும், விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும் அவசியம் என வுட் மெக்கன்சி சுட்டிக்காட்டியுள்ளது.
