IND vs ENG: தோனி சாதனையை விரட்டி விரட்டி முறியடித்த ரோகித்… ஜடேஜா அபார சதம்!

Published On:

| By christopher

Rohit breaks Dhoni's record

IND vs ENG 3rd Test : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா இருவரும் அடுத்தடுத்த சதம் அடித்து அசத்தியுள்ளனர்.

ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 15) காலை தொடங்கியது.

தடுமாறிய இந்தியா

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவும், ஜெய்ஸ்வாலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

கடந்த ஆட்டங்களில் ஜொலித்த ஜெய்ஸ்வால் இன்று மார்க்வுட் பந்துவீச்சில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சுப்மன் கில் டக் அவுட்  ஆக, பின்னர் ராஜத் படிதாரும் வெறும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் வெறும் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில் ரோகித் உடன் இணைந்தார் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் இந்தியாவை மீட்கும் முயற்சியில் நிதானமாக ரன்கள் சேர்த்தனர்.

ரோகித் சர்மா சாதனை!

இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 100+ ரன்களை கடந்த நிலையில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது 11வது டெஸ்ட் சதத்தை விளாசினார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்க முடியாமல் திணறி வந்த ரோகித் சர்மாவின் முதல் சதம் இதுவாகும்.

மேலும் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியை (78) பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா(80*) 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதே போன்று சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய கேப்டன் என்ற வரிசையிலும் தோனியை (211) பின்னுக்கு தள்ளி ரோகித் (212*) முன்னேறியுள்ளார்.

சர்ப்ராஸ் கான் அதிரடி!

தொடர்ந்து விளையாடிய அவர் 131 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சர்ப்ராஸ் கான் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய அவர் அறிமுக டெஸ்டில் அரைசதம் கடந்து அசத்தினார்.

எனினும் ஜடேஜாவின் தவறான முடிவால் 62 ரன்களில் ரன் அவுட் ஆகி ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

ஜடேஜா 6வது சதம்!

எனினும் நிதானமாக ஆடி வந்த ஜடேஜா சிறிது நேரத்தில் தனது 6வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் 3,000 ரன்களையும் ஜடேஜா கடந்துள்ளார்.

Rohit breaks Dhoni's record

முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட்  3 விக்கெட்டுகளையும், டாம் ஹார்ட்லி 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

Video : இதயங்களை வென்ற சர்ஃப்ராஸ்… வறுத்தெடுக்கப்படும் ஜடேஜா

காஷ்மீரில் தனித்து போட்டி : இந்தியா கூட்டணிக்கு மேலும் ஒரு பின்னடைவு!

GOAT, தளபதி 69 படங்களுக்கு விஜயின் ‘சம்பளம்’ இதுதான்?

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு : பிப்ரவரி 19க்கு ஒத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share