செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை வரும் பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாக செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார்.
நேற்று மதியம் இம்மனு விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம் ஆஜரானார்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வாதாடிய வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம், ”செந்தில் பாலாஜிக்கு எதிராக டிஜிட்டல் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து ஹெச்பி ஹார்ட்டிஸ்க் கைப்பற்றப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சீகேட் ஹார்ட்டிஸ்க் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சீகேட் ஹார்ட்டிஸ்க் எங்கிருந்து வந்தது, இது கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் எங்கே?” என்று கேள்வி எழுப்பினார்.
“செந்தில் பாலாஜியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவ், ஹார்டு டிஸ்கில் இருந்த கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. புதிய கோப்புகள் அதில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பறிமுதலுக்கு பிறகு அந்த மின்னணு சாதனங்களில் 67 பதிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் சோதனைக்கு பின் பென் டிரைவ் குறித்த அறிக்கையில் 284 கோப்புகள் இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. அந்த பென்டிரைவ் குறித்த மற்றொரு அறிக்கையில் 472 கோப்புகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஆதாரங்கள் திருத்தப்பட்டது குறித்து தற்போது நிரூபிக்க முடியவில்லை என்பதற்காக, விசாரணை முடியும் வரை செந்தில் பாலாஜி சிறையில் இருக்க வேண்டுமா?
பணத்தை வசூலித்து செந்தில் பாலாஜி தனது உதவியாளர் சண்முகத்திடம் வழங்கியதாக கூறுகிறார்கள். ஆனால் சண்முகம் உதவியாளரே கிடையாது. எந்தவித சட்டவிரோத பணப்பறிமாற்றமும் நடைபெறவில்லை.
2013- 2022 வரை செந்தில் பாலாஜி வங்கிக் கணக்கில் 1.34 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அது மோசடி செய்து பெறப்பட்ட பணம் என்றும் குற்றம்சாட்டுகிறார்கள். அந்த பணத்திற்கு வருமான வரித்துறையிடம் முறையாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
அதோடு பொருளாதார ரீதியான வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் மறுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றமும் கூறியிருக்கிறது. ஆனால் 240 நாட்களாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது.
அவர் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார், புலன் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடுவார் என்றால் யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது.
இவருடைய தம்பி தலைமறைவாக இருக்கிறார் என்பதற்காக இவருக்கு ஜாமீன் மறுக்க முடியாது” என்று வாதிட்டார்.
தொடர்ந்து அமலாக்கத் துறை வாதங்களுக்காக வழக்கு பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத் துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி வாதாடினார்.
“விசாரணைக்கு ஒத்துழைக்காத செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. செந்தில் பாலாஜி குற்றம்சாட்டுவது போல் எந்த ஆவணங்களும் திருத்தப்படவில்லை. அவர் மொத்தம் 67 கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்துள்ளார்.
ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னர்தான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜாமீன் கொடுத்தால் அவர் சாட்சிகளை கலைப்பார். அதனால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது ” என்று அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் வீடியோ கான்பிரன்ஸில் ஆஜரானார்.
அப்போது அவர் பேசியது கேட்காததால் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அவரை மொபைல் போனில் அழையுங்கள், அவருடன் போன் மூலம் பேசலாம். தொழில்நுட்பத்தை ஏன் பயன்படுத்தக்கூடாது என்று கூறினார்.
இதையடுத்து போன் மூலம் பேசினார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
அமலாக்கத் துறை வாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் பிப்ரவரி 19ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
அன்றைய தினம் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் ஆஜராகி அமலாக்கத் துறை வாதத்துக்கு பதிலளிக்கவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
GOAT, தளபதி 69 படங்களுக்கு விஜயின் ‘சம்பளம்’ இதுதான்?
காஷ்மீரில் தனித்து போட்டி : இந்தியா கூட்டணிக்கு மேலும் ஒரு பின்னடைவு!