வரும் மக்களவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி ஜம்மு காஷ்மீரில் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா இன்று (பிப்ரவரி 15) உறுதியாக தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கும் பாஜகவை வரும் மக்களவை தேர்தலில் வீழ்த்த, காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ எனும் பெயரில் கூட்டணி அமைக்கப்பட்டது.
ஆனால் மேற்கு வங்கத்தில் திருணமூல் காங்கிரஸ் கட்சியும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியும் வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர்கள் திட்டவட்டமாக அறிவித்தனர்.
இது இந்தியா கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் என்டிஏவில் இணைந்தது பேரிடியாக அமைந்ததது.
இந்த நிலையில், வரவிருக்கும் தேர்தல்களில் தேசிய மாநாடு கட்சி ஜம்மு காஷ்மீரில் அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடும் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா இன்று கூறியுள்ளது இந்தியா கூட்டணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில்,
“இந்தியா கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தேசிய மாநாட்டு கட்சி தனது சொந்த பலத்தில் தனித்துப் போட்டியிடும் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதில் இருவேறு கருத்துகள் கிடையாது” என்று ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் தேசிய மாநாட்டின் கட்சியின் பல முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜம்மு & காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஃபரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியிருந்தது.
இதனை அடிப்படையாக வைத்து பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் தேசிய மாநாடு மீண்டும் திரும்ப இணைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஃபரூக் மறுப்பு தெரிவிக்காமல் கடந்து சென்றது சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
முன்னதாக அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக தேசிய மாநாடு கட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திமுக விருப்ப மனு விநியோகம் எப்போது?
பாஜகவில் குவிந்த 5 ஆயிரம் கோடி..ரகசிய தேர்தல் பத்திரங்கள்..செக் வைத்த உச்சநீதிமன்றம்!