இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது : உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Kavi

இசைஞானி இளையராஜா தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்க கோரி தாக்கல் செய்த வழக்கில்,  யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் வணிக ஆதாயத்திற்காக அவரது பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

9 மொழிகளில் 1,450 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 8000 பாடங்களுக்கும் மேல் இசையமைத்தவர் இளையராஜா.

ADVERTISEMENT

 1,500 பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார், சுமார் 1,000 பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் அவரது பின்னணி இசை 1.5 லட்சம் நிமிடங்களைத் தாண்டியுள்ளது.

இந்தசூழலில் தனது இசையையும், படைப்பையும் அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு எதிராக நீதிமன்றங்களில் இளையராஜா வழக்குத் தொடர்ந்து வருகிறார்.

ADVERTISEMENT

அந்தவகையில் உயர் நீதிமன்றத்தில் இளையராஜா தாக்கல் செய்த மனுவில், “சமூக வலைதளங்களில் தன்னை அடையாளப்படுத்தும் வகையில் தனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என எதையும் பயன்படுத்தக் கூடாது. சமூக வலைதளங்களில் ஏற்கெனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும்.

அனுமதியின்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த மனு இன்று (நவம்பர் 21) விசாரணைக்கு வந்தபோது இளையராஜா சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி வாதாடினார். “’இளையராஜா’ என்ற பெயரும், ‘இசைஞானி’ என்ற பட்டமும் கிட்டத்தட்ட பதிவு செய்யப்படாத வர்த்தக முத்திரைகளாக மாறிவிட்டதாகவும், எனவே, மூன்றாம் தரப்பினர் தனது வெளிப்படையான அனுமதியின்றி வணிக ஆதாயத்திற்காக அவற்றைப் பயன்படுத்த முடியாது என்றும்” வாதங்களை முன்வைத்தார்.

“தனது ஆளுமையை அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்துவது தனது தனிப்பட்ட உரிமைகளை மீறுவதாக மட்டுமல்லாமல், இந்திய கலாச்சாரத்திற்கு தான் அளித்த பங்களிப்புகளுக்கு அவமானமாகவும் பார்க்கப்பட வேண்டும்” என்றும் இளையராஜா சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

“இளையராஜாவின் பெயர், குரல், தனித்துவமான இசை நிகழ்ச்சி பாணி, அவரது பாடல்கள் மற்றும் பிற இசைப் படைப்புகள், அவரது புகைப்படம், இசைஞானி, இசை மேஸ்ட்ரோ, ராக தேவன், ராஜா, ராஜா சார் போன்ற அவரை அழைக்கும் பெயர்கள்/பட்டங்கள் மற்றும் அவரது ஆளுமையுடன் தொடர்புடைய பிற அம்சங்கள் பாதுகாக்கத்தக்கவை.

தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்தும், ஏஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு மாற்றியும் பயன்படுத்தி வணிகரீதியில் வருவாய் ஈட்டுகின்றனர்” என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், இளையராஜா பெயரை பயன்படுத்துவதால் அவருக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது என கேள்வி எழுப்பினார்.

இதற்கு இளையராஜா சார்பில், குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது முகத்தை மாற்றியமைத்து நடனமாடும் வீடியோக்கள், மீம்ஸ்கள், ரீல்ஸ்கள் போன்றவற்றை உருவாக்கி வருவாய் ஈட்டுகின்றனர். இது அவரது தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் செயல். சில நேரங்களில் அவதூறான கருத்துக்களும் பதிவிடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி செந்தில் குமார், “இளையராஜாவின் பெயர், புகைப்படங்கள், காமிக் அல்லது அனிமேஷன் உருவங்கள், AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள், குரல் அல்லது அவரை அடையாளப்படுத்தும் எந்த அம்சத்தையும் அவரது அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட அவரது புகைப்படங்கள் மற்றும் AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை உடனடியாக நீக்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share