பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ-ன் (IDBI) 60.72% பங்குகளை ரூ.52,878 கோடிக்கு கனடாவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விற்பனையில் மத்திய அரசுடன் பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யும் தனது பெரும்பாலான பங்குகளை விற்க இருப்பதால், எல்.ஐ.சி.யின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் நேற்று (அக்டோபர் 14) வெளியிட்ட அறிக்கை:
ஐடிபிஐ வங்கி இந்திய ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் வங்கியாகும். மோசமான நிதி நிலைமை காரணமாக, இந்த வங்கிக்கு தொடர்ந்து மூலதனம் வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. தொடக்கத்தில் மத்திய அரசும், பின்னர் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி.யும் (LIC) வங்கிக்குத் தேவையான மூலதனத்தை வழங்கின.
வாராக் கடன்கள் மற்றும் வங்கிக்கு ஏற்பட்ட இழப்புகளைக் கருத்தில் கொண்டு, 2017-ம் ஆண்டு மே 5-ந் தேதி ஐடிபிஐ வங்கியை உடனடித் திருத்த நடவடிக்கைக்கான கட்டமைப்பின் கீழ் ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது. இதன் மூலம் வங்கியின் செயல்பாடுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பின்னர் வங்கியின் நிதி நிலைமை மேம்பட்டதால், சில நிபந்தனைகள் மற்றும் தொடர் கண்காணிப்புக்கு உட்பட்டு, 2021-ம் ஆண்டு மார்ச் 10-ந் தேதி அந்தக் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நீக்கியது.
இந்தப் பின்னணியில்தான் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
இதன்படி, ஐடிபிஐ வங்கியின் மொத்தப் பங்குகளில் 60.72% பங்குகள் தனியார் நிறுவனத்துக்கு விற்கப்படுகின்றன.
இதில் மத்திய அரசுக்குச் சொந்தமான 30.48% பங்குகளும், எல்.ஐ.சி.க்குச் சொந்தமான 30.24% பங்குகளும் அடங்கும்.
இந்தப் பங்குகளை ரூ.52,878.08 கோடிக்கு வாங்க கனடாவைச் சேர்ந்த ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் (Canada Inc. (parent entity M/s Fairfax Financial Holdings Ltd.) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒரு பங்கின் விலை ரூ.81 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயாதீன மதிப்பீட்டு நிறுவனங்கள் கணக்கிட்ட சராசரி மதிப்பான ரூ.75.99-ஐ விட இந்த விலை அதிகமாக இருப்பதால், விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை முடிவடைந்த பிறகு மத்திய அரசிடம் 15% பங்குகளும், எல்.ஐ.சி.யிடம் 19% பங்குகளும் எஞ்சியிருக்கும்.
மேலும், மத்திய அரசிடம் எஞ்சியிருக்கும் 15% பங்குகளையும் பங்குச் சந்தை மூலம் விற்பனை செய்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி. தனது மீதமுள்ள பங்குகள் தொடர்பாக விதிமுறைகளுக்கு உட்பட்டு முடிவெடுக்கலாம்.
வங்கியின் பங்குகளை வாங்கும் நிறுவனம் ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்தால், இந்திய நிதித்துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடாக இது அமையும். இவ்வாறு மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுப்பராயன் எம்.பி. கடும் கண்டனம்
ஐடிபிஐ வங்கியின் பங்குகளை கனடா நிறுவனத்துக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. கே.சுப்பராயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுப்பராயன் எம்.பி. கூறியதாவது: இந்திய நாட்டின் நிதித்துறையின் முக்கிய சொத்தான ஐடிபிஐ வங்கியின் 60.72% பங்குகளை கனடாவைச் சேர்ந்த ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய மோடி அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இது மிகப்பெரிய தேசத் துரோகமாகும்.
பொதுமக்களின் சேமிப்புப் பணமான ரூ.200 லட்சம் கோடியைக் கொண்டுள்ள பொதுத்துறை வங்கிகளுக்கும் இனி பாதுகாப்பில்லை. பொதுத்துறை வங்கிகளையும் பெரும் முதலாளிகளுக்கு விற்பனை செய்வதற்கான முன்னறிவிப்பாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. எனவே, நாட்டு மக்கள் விழிப்புடன் இருந்து மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்துப் போராட வேண்டும் என்று சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

எல்.ஐ.சி.க்கு ஆபத்து?
ஐடிபிஐ வங்கியின் பங்கு விற்பனையில் மத்திய அரசைவிட எல்.ஐ.சி.யின் நிலைதான் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. ஏனெனில், ஐடிபிஐ வங்கி கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தபோது, அதைக் காப்பாற்றுவதற்காக பெருமளவு முதலீடு செய்தது எல்.ஐ.சி. நிறுவனம். 2019-ம் ஆண்டு ஐடிபிஐ வங்கியில் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கியதன் மூலம் அதன் முக்கியப் பங்குதாரராக எல்.ஐ.சி. மாறியது. தற்போது எல்.ஐ.சி. வைத்திருக்கும் 49.24% பங்குகளில் 30.24% பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அதன் பங்கு 19% ஆகக் குறையும்.
அதாவது, ஐடிபிஐ வங்கியை நிதி நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக முதலீடு செய்த எல்.ஐ.சி., தற்போது அந்த வங்கியின் பெரும்பான்மைப் பங்குதாரர் என்ற நிலையையும் நிர்வாகக் கட்டுப்பாட்டையும் இழக்கிறது.
அதே நேரத்தில், பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் எல்.ஐ.சி.க்கு பெரும் தொகை கிடைக்க உள்ளது. எனவே, இந்த விற்பனையால் எல்.ஐ.சி.க்கு நேரடியாக நிதி இழப்பு ஏற்படும் என்று கூற முடியாது.
ஆனால், பொதுமக்களின் காப்பீட்டுப் பணத்தை முதலீடு செய்யும் எல்.ஐ.சி. நிறுவனம், ஐடிபிஐ வங்கியை மீட்க எவ்வளவு முதலீடு செய்தது? தற்போது பங்குகளை விற்பதன் மூலம் எவ்வளவு பணம் கிடைக்கிறது? இந்த முதலீட்டில் உண்மையில் லாபமா, நஷ்டமா? என்ற கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மேலும், ஐடிபிஐ வங்கியில் எல்.ஐ.சி.க்கு எஞ்சியிருக்கும் 19% பங்குகளின் எதிர்கால மதிப்பு, புதிய தனியார் நிர்வாகத்தின் கீழ் வங்கியின் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பொறுத்தும் அமையும்.
ஆகையால் பொதுமக்களின் காப்பீட்டுப் பணத்தை முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி.க்கு இந்த விற்பனையால் கிடைக்கும் உண்மையான பலன் என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
