அவகேடோ பழத்தில் நல்ல கொழுப்புகள், நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் இருப்பதால் பலரும் தங்கள் உணவில் இதைச் சேர்த்துக்கொள்கின்றனர். ஆனால், மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது அவகேடோ விலை அதிகம் என்பதால், வாங்கிய பழம் சீக்கிரமே கருப்பாகி வீணாகும்போது வருத்தமாக இருக்கும்.
குறிப்பாக, பாதிப் பழத்தைப் பயன்படுத்திவிட்டு மீதியைச் சேமிக்கும்போது அதன் நிறமும் தரமும் மாறிவிடலாம். இதைத் தவிர்க்க வீட்டிலேயே பின்பற்றக்கூடிய சில எளிய வழிகள் உள்ளன.
காயாக இருக்கும் பழங்களை எப்படிச் சேமிப்பது?
அவகேடோ இன்னும் பழுக்காமல் உறுதியாக இருந்தால், அறை வெப்பநிலையில் வைத்துப் பழுக்கச் செய்யலாம். பழம் பழுத்ததும் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது, அது மேலும் விரைவாகக் கனிவதைக் குறைக்க உதவும்.
எலுமிச்சைச் சாறு உதவுமா?
வெட்டிய அவகேடோவின் மேற்பரப்பில் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றைத் தடவலாம். இதில் உள்ள அமிலத்தன்மை, காற்றுடன் வினைபுரிவதால் ஏற்படும் பழுப்பு நிற மாற்றத்தைக் குறைக்க உதவும்.
வெட்டிய பகுதியை ஆலிவ் எண்ணெயால் லேசாகப் பூசுவதும் ஒரு வழிமுறையாகக் கூறப்படுகிறது. இருப்பினும், காற்று படாமல் மூடி, குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதே முக்கியம்.
காற்றுப் புகாத டப்பாவில் வைக்கவும்
மீதமுள்ள அவகேடோவை காற்றுப் புகாத டப்பாவில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கலாம். பழத்தின் வெட்டிய பகுதியில் கொட்டை இருந்தால், அதை அப்படியே வைத்திருக்கலாம். ஆனால், கொட்டை இருக்கும் பகுதி மட்டுமே காற்றிலிருந்து ஓரளவு பாதுகாக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நீண்ட நாட்கள் பயன்படுத்த என்ன செய்யலாம்?
அவகேடோ பழத்தின் சதையை மசித்து, காற்றுப் புகாத உறைவிப்பான் பையில் வைத்து உறையவைக்கலாம். பின்னர் ஸ்மூத்தி உள்ளிட்ட உணவுகளில் பயன்படுத்த முடியும்.
வெட்டிய பழத்தை அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைக்க வேண்டாம். முழுப் பழத்தையும் தண்ணீரில் மூழ்கவைத்து சேமிப்பதைத் தவிர்ப்பது நல்லது; இதனால் உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஆபத்துகள் ஏற்படலாம்.
சரியான சேமிப்பு முறைகளைப் பின்பற்றினால் அவகேடோ வீணாவதைக் குறைத்து, அதன் தரத்தையும் சுவையையும் சிறப்பாகப் பாதுகாக்கலாம்.
