வீட்டுக் கடன், கார் கடன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது முதலில் கவனிக்கப்படும் விஷயங்களில் ஒன்று CIBIL ஸ்கோர்.
ஒரு தவறிய EMI, தாமதமான கிரெடிட் கார்டு கட்டணம் அல்லது அதிகப்படியான கடன் பயன்பாடு போன்ற காரணங்களால் CIBIL ஸ்கோர் குறையலாம். ஆனால், ஒருமுறை ஸ்கோர் குறைந்துவிட்டால் அதை மீண்டும் உயர்த்த முடியாது என்பது தவறான எண்ணம்.
சரியான நிதி ஒழுக்கத்தைப் பின்பற்றினால், நல்ல CIBIL ஸ்கோரை மீண்டும் உருவாக்க முடியும்.
முதலில் நிலுவைத் தொகைகளை முழுமையாக செலுத்துங்கள்
கடன் அல்லது கிரெடிட் கார்டில் நிலுவையில் உள்ள தொகைகளை முடிந்தவரை விரைவாகச் செலுத்துவது மிகவும் முக்கியம். பல கடன்கள் இருந்தால், அவற்றை ஒரே கடனாக ஒருங்கிணைப்பது (Loan Consolidation) சிலருக்கு உதவியாக இருக்கலாம். இதனால் பல EMI தேதிகளை நிர்வகிக்கும் சிரமம் குறையும்.
கிரெடிட் கார்டை அளவோடு பயன்படுத்துங்கள்
கிரெடிட் கார்டின் முழு வரம்பையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறைந்த அளவிலான பயன்பாடு மற்றும் சரியான நேரத்தில் முழுத் தொகையையும் செலுத்தும் பழக்கம், உங்கள் கிரெடிட் சுயவிவரத்தை மேம்படுத்த உதவும்.
அதேபோல், தேவையில்லாமல் புதிய கிரெடிட் கார்டுகள் அல்லது கடன்களுக்கு அடிக்கடி விண்ணப்பிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
பல்வேறு வகை கடன்கள் இருந்தால் நல்லதா?
கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன் போன்ற Unsecured Loans மட்டுமல்லாமல், வீட்டுக் கடன் அல்லது வாகனக் கடன் போன்ற Secured Loans-ஐ சரியாகத் திருப்பிச் செலுத்திய வரலாறும் உங்கள் கிரெடிட் சுயவிவரத்தை வலுப்படுத்தும்.
இருப்பினும், ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்பதற்காக தேவையில்லாத கடன்களை வாங்குவது சரியான முடிவு அல்ல.
உங்கள் CIBIL அறிக்கையை அடிக்கடி சரிபாருங்கள்
உங்கள் CIBIL அறிக்கையில் தவறான தகவல்கள் அல்லது தவறாக பதிவு செய்யப்பட்ட கடன் விவரங்கள் உள்ளதா என்பதை அவ்வப்போது சரிபார்ப்பது நல்லது.
ஏதேனும் பிழைகள் இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி அல்லது கிரெடிட் பியூரோவிடம் புகார் அளித்து திருத்திக்கொள்ளலாம். இதுவும் உங்கள் ஸ்கோரை மேம்படுத்த உதவக்கூடும்.
பொறுமையும் நிதி ஒழுக்கமும் முக்கியம்
CIBIL ஸ்கோர் ஒரே நாளில் உயராது. தொடர்ந்து EMI-களை சரியான நேரத்தில் செலுத்துவது, கிரெடிட் கார்டு பில்களை முழுமையாகக் கட்டுவது, தேவையற்ற கடன்களைத் தவிர்ப்பது போன்ற நல்ல நிதிப் பழக்கங்களை கடைப்பிடித்தால், காலப்போக்கில் உங்கள் CIBIL ஸ்கோர் மேம்படும். நல்ல கிரெடிட் வரலாறு உருவான பிறகு, எதிர்காலத்தில் கடன் பெறுவதும் எளிதாக இருக்கும்.
