ஜனவரி-மார்ச் காலாண்டில் எட்டு முக்கிய நகரங்களில் வீடு விற்பனை (Housing Sales) கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் குறைந்து 84,827 அலகுகளாக (Unit) உள்ளது. மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதலால் ஏற்பட்ட அதிக சொத்து விலைகள் மற்றும் சந்தை நிச்சயமற்ற தன்மையே இதற்கு முக்கியக் காரணமாகும். கடந்த ஆண்டு ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் வீட்டு விற்பனை 88,361 அலகுகளாக இருந்தது. மும்பை, டெல்லி-என்சிஆர் மற்றும் புனே ஆகிய நகரங்களில் குடியிருப்பு சொத்து விற்பனை குறைந்தாலும், மீதமுள்ள ஐந்து நகரங்களான பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் அதிகரித்துள்ளதாக நைட் ஃபிராங்க் அறிக்கை கூறுகிறது.
பல ஆண்டுகளாக நீடித்த வளர்ச்சிக்குப் பிறகு இவ்வாறு ஏற்பட்டுள்ளதால், இது மிகவும் முக்கியமானது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விரைவான வளர்ச்சிக்குப் பிறகு ஏற்படும் இயல்பான மந்தநிலையால் இந்தக் காலகட்டம் இருக்கலாம் என்றாலும், விலைகளின் தொடர்ச்சியான உயர்வு மற்றும் விற்பனை அளவுகளில் ஏற்படும் சரிவு ஆகியவை, சந்தையில் வாங்கும் சக்தி மற்றும் சொத்து நுகர்வு வேகம் ஆகியவை அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன என்பதைக் காட்டுகின்றன. புவிசார் அரசியல் சூழ்நிலையில் நிலவும் உறுதியற்ற தன்மையும் குடியிருப்புத் தேவையைக் குறைத்துள்ளது.
தரவுகளின்படி, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், மும்பையில் ஜனவரி-மார்ச் காலாண்டில் வீடு விற்பனை 7 சதவீதம் சரிந்து 23,185 அலகுகளாக உள்ளது. டெல்லி-என்சிஆரில் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 11 சதவீதம் சரிந்து 12,734 அலகுகளாக உள்ளது. புனேவில் ஆண்டு அடிப்படையில் 11 சதவீத சரிவு காணப்பட்டு, விற்பனை 12,711 அலகுகளாக இருந்தது.
மறுபுறம், பெங்களூருவில் ஜனவரி-மார்ச் காலாண்டில் குடியிருப்பு சொத்து விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 5 சதவீதம் அதிகரித்து 13,092 அலகுகளாக உயர்ந்துள்ளது. ஹைதராபாத்திலும் சொத்து விற்பனை அதிகரித்துள்ளது. அங்கு ஆண்டுக்கு ஆண்டு 1 சதவீதம் வளர்ச்சி பெற்று 9,541 வீடுகள் விற்பனையாகியுள்ளன. அதே சமயம், சென்னையில் இந்த அதிகரிப்பு 9 சதவீதத்தை எட்டியதோடு விற்பனை 4,763 அலகுகளாக உள்ளது.
அமதாபாத்தில் விற்பனை 2 சதவீதம் அதிகரித்து 4,758 அலகுகளாக உயர்ந்துள்ளது. றுதியாக, கொல்கத்தாவில் இந்த ஆண்டு ஜனவரி-மார்ச் காலாண்டில் வீடு விற்பனை 5 சதவீதம் அதிகரித்து 4,043 அலகுகளாக உயர்ந்துள்ளது. இது 2025ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த குறைந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.
நைட் ஃபிராங்க் தரவுகளின்படி, ஜனவரி-மார்ச் காலாண்டில் புதிய சொத்துக்களின் விநியோகமும் ஆண்டுக்கு ஆண்டு 2 சதவீதம் குறைந்து 94,855 அலகுகளாக உள்ளது.
