வீட்டுக் கடன் வாங்கும் போது, வங்கிகள் பல நேரங்களில் ஹோம் லோன் இன்சூரன்ஸ் எடுக்கவும் பரிந்துரைக்கின்றன.
ஆனால் ஏற்கனவே போதுமான அளவு டெர்ம் இன்சூரன்ஸ் வைத்திருப்பவர்கள், இன்னொரு இன்சூரன்ஸ் தேவையா என்ற கேள்வியில் குழப்பமடைகிறார்கள்.
உண்மையில், இந்த இரண்டு காப்பீடுகளின் நோக்கமும் வெவ்வேறானது. உங்கள் குடும்பத்தின் நிதி பாதுகாப்பு, நிலுவையிலுள்ள வீட்டுக் கடன் மற்றும் எதிர்கால தேவைகளைப் பொறுத்தே சரியான முடிவை எடுக்க வேண்டும்.
டெர்ம் இன்சூரன்ஸ் மற்றும் ஹோம் லோன் இன்சூரன்ஸ் – வித்தியாசம் என்ன?
டெர்ம் இன்சூரன்ஸ் என்பது காப்பீடு பெற்ற நபர் உயிரிழந்தால், காப்பீட்டு தொகை முழுவதும் அவர் குறிப்பிட்டுள்ள நாமினிக்கு வழங்கப்படும். அந்தத் தொகையை குடும்பம் கடனை அடைக்கவோ, குழந்தைகளின் கல்விக்கோ, அன்றாட செலவுகளுக்கோ தங்களின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.
ஆனால் ஹோம் லோன் இன்சூரன்ஸ் என்பது குறிப்பாக வீட்டுக் கடனைப் பாதுகாக்கும் காப்பீடு. பாலிசிதாரர் உயிரிழந்தால், நிலுவையில் உள்ள வீட்டுக் கடன் தொகை நேரடியாக வங்கி அல்லது கடன் வழங்குநருக்கு செலுத்தப்படும். இதனால் குடும்பத்தினர் EMI சுமையின்றி வீட்டைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
ஏற்கனவே டெர்ம் இன்சூரன்ஸ் இருந்தால் போதாதா?
உதாரணமாக, உங்களிடம் ரூ.1 கோடி டெர்ம் இன்சூரன்ஸ் இருப்பதாகவும், ரூ.50 லட்சம் வீட்டுக் கடன் இருப்பதாகவும் வைத்துக்கொள்வோம். நீங்கள் உயிரிழந்தால், உங்கள் குடும்பம் அந்த ரூ.1 கோடியில் இருந்து ரூ.50 லட்சத்தை கடன் அடைக்க பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால் அவர்களிடம் எதிர்கால தேவைகளுக்காக ரூ.50 லட்சம் மட்டுமே எஞ்சும்.
இதுபோன்ற சூழலில், தனியாக ஹோம் லோன் இன்சூரன்ஸ் இருந்தால், வீட்டுக் கடன் அதிலிருந்தே அடைக்கப்படும். டெர்ம் இன்சூரன்ஸ் தொகை முழுவதும் குடும்பத்தின் பிற நிதித் தேவைகளுக்குப் பயன்படும்.
இரண்டையும் வாங்க வேண்டுமா?
இது அனைவருக்கும் ஒரே மாதிரியான பதில் கொண்ட கேள்வி அல்ல. உங்களிடம் போதுமான அளவு டெர்ம் இன்சூரன்ஸ் இருப்பதுடன், அது வீட்டுக் கடன் மற்றும் குடும்பத்தின் நீண்டகால செலவுகள் அனைத்தையும் சமாளிக்கும் அளவுக்கு இருந்தால், தனியாக ஹோம் லோன் இன்சூரன்ஸ் அவசியமாக இருக்க வேண்டியதில்லை.
ஆனால் வீட்டுக் கடன் தொகை அதிகமாக இருந்தாலோ, குடும்பத்தின் எதிர்கால நிதித் தேவைகள் பெரிதாக இருந்தாலோ, இரண்டு காப்பீடுகளையும் வைத்திருப்பது கூடுதல் பாதுகாப்பை வழங்கும். பாலிசி வாங்குவதற்கு முன் அதன் பிரீமியம், காப்பீட்டு காலம், குறையும் காப்பீட்டு (Reducing Cover) அம்சம் மற்றும் நிபந்தனைகளை ஒப்பிட்டு முடிவு செய்வது நல்லது.
