கற்பனைக்கும் அப்பாற்பட்ட அதிர்ச்சியை அனுபவித்த ஹாலிவுட் நடிகர் ஜாக் நிக்கல்சன்

Published On:

| By Minnambalam Desk

அதீத பாசம் காட்டும் சகோதரியை ” அவர் என் சகோதரி அல்ல. என் அம்மா ..” என்று கூறுவது இயல்பு. ஆனால் சகோதரி உண்மையிலேயே அம்மாவாக இருந்தால் ?

விபரீதமாக எதுவும் யோசிப்பதற்கு முன்பு இதைப் படித்து முடித்து விடுவது மன நிலைக்கு நல்லது.

ADVERTISEMENT

நூற்றுக்கணக்கான படங்களில் ஹீரோ , வில்லன் என்று பல்வேறு விதமான கேரக்டர்களில் நடித்து இருபதாம் நூற்றாண்டின் சிறந்த ஹாலிவுட் ஆக்டர்களில் ஒருவர் என்று பெயர் வாங்கியதோடு முதன் முதலில் அறுபது மில்லியன் சம்பளம் வாங்கிய முதல் நடிகர் இவர்தான்

ஆனால் அவர் வாழ்வில் நடந்த ஒரு விஷயம் யாராலும் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத ஒன்று.

ADVERTISEMENT

கடந்த 1937-ம் ஆண்டு ஜூன் நிக்கல்சன் என்கிற திருமணம் ஆகாத 17 வயது இளம்பெண்ணுக்கு மகனாகப் பிறந்தார் ஜாக் நிக்கல்சன்.

திருமணமில்லா உறவில் குழந்தையை பெற்றெடுத்தது வெளியே தெரிந்தால் சமூகம் தவறாகப் பார்க்கும் என்ற அச்சத்தில் ஜூன் நிக்கல்சனின் பெற்றோர் (ஜாக் நிக்கல்சனின் உண்மையான தாத்தா, பாட்டி) ஜாக் நிக்கல்சனை தங்களுடைய சொந்த மகனாகவே வளர்த்தனர்.

ADVERTISEMENT

அதாவது, உண்மையான தாயார் ஜூன் நிக்கல்சனை, ஜாக் நிக்கல்சனின் மூத்த சகோதரி என்றே எல்லோரிடமும் கூறி வளர்த்தனர்.

ஜாக் நிக்கல்சனும் ‘ஜூன் நிக்கல்சன்தான் தன்னுடய மூத்த சகோதரி(நிஜத்தில் உண்மையான தாயார்) எனவும், அவருடைய பெற்றோர் தான் தன்னுடைய பெற்றோர் (நிஜத்தில் தாத்தா, பாட்டி) என நினைத்தும் வளர்ந்தார். அதாவது , தனது உண்மையான அம்மாவை சகோதரியாகவும், உண்மையான தாத்தா, பாட்டியை தனது அப்பா, அம்மா என நினைத்து வளர்ந்துள்ளார்.

ஜாக் நிக்கல்சன் பல படங்களில் நடித்து புகழ்பெற்று வந்தபோது, ‘Times’ பத்திரிகையை நிருபர் ஒருவர் ஜாக் நிக்கல்சன் பற்றி முழு தகவல்களையும் திரட்டி கட்டுரை எழுதும் முயற்சியில் ஈடுப்பட்டார்.

அப்போது அந்த நிருபருக்கு ஜாக்கின் உண்மையான தாயார் ஜூன் நிக்கல்சன் தான் என்கிற தகவல் கிடைத்தது

இந்நிலையில், 1974-ம் ஆண்டு 37 வயதான ஜாக் நிக்கல்சன் ஒரு பத்திரிகை சந்திப்பை ஏற்பாடு செய்தபோது, அங்கே வந்த அந்த நிருபர் இந்த ரகசியத்தை உடைத்தார்.

நிருபரின் தகவல்களை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜாக் நிக்கல்சன், தனது நெருங்கிய உறவினர்களிடம் ‘தனது உண்மையான தாய், தந்தை யார்’? என விசாரித்தார்.. காரணம் இந்த சம்பவத்துக்கு முன்பே ஜாக் நிக்கல்சனின் அம்மா ஜூன் நிக்கல்சன் மற்றும் தாத்தா, பாட்டி எல்லோரும் இறந்து விட்டனர்)

உறவினர்கள் கனத்த மனதோடு, ‘நிருபர் கூறிய தகவல்கள் உண்மை தான். உனக்கு மூத்த சகோதரியாக உன்னுடன் வளர்ந்த ஜூன் நிக்கல்சன் தான் உன்னை பெற்றெடுத்த உண்மையான தாயார். நீ பெற்றோர் என நினைத்தது உன்னுடைய உண்மையான தாத்தா, பாட்டி’ என்ற உண்மையை உடைத்தனர்.

இதை கேட்டு ஜாக் நிக்கல்சன் மனதளவில் உடைந்தே போனார்.

எனினும் மனம் தளராமல் தனது தந்தை யார் என்று ஜாக் நிக்கல்சன் தேடினார்.

ஜூன் நிக்கல்சன் 17 வயதில் ஒரு நடனக் கலைஞராக வேண்டும் என்கிற லட்சியத்துடன் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டபோது, அவருடன் இரண்டு ஆண் நடன கலைஞர்கள் நெருங்கி பழகியதாக தகவல் கிடைக்க, அவர்கள் இருவரையும் தேட, அவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதைக் கேட்டு ஜாக் நிக்கல்சன் நொறுங்கிப் போனார்.

உண்மையில் இந்த நிமிடம் வரை ஜாக் நிக்கல்சனின் தந்தை யார் என யாருக்குமே தெரியாது.

1974-ல் வெளிவந்த இந்த உண்மைகள் எல்லாம் அவரை மனதளவில் மிகவும் பாதித்திருந்தது. இந்த மனநிலைக்கு ஏற்றவாறே அவரது அடுத்த படமும் அமைந்தது.

1975-ம் ஆண்டு தொடக்கத்தில் ‘One Flew Over the Cuckoo’s Nest’ படம் ஷூட்டிங் தொடங்கப்பட்டு, இதே ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது.

படம் முழுவதும் ஒரு mental hospital-லில் நடைபெறுவதுதான் கதை. படம் ரிலீஸ் ஆனது. ஹாலிவுட்டே அதிரும் அளவுக்கு படம் மிகப் பெரிய ஹிட். இதை வைத்து மலையாளத்தில் தாளவட்டம் என்ற படம் வர , அதை முறைப்படி உரிமை வாங்கி தமிழில்எடுத்த – பிரபுவும், சரண்யாவும் நடித்த – ‘மனசுக்குள் மத்தாப்பு’ படமும் நூறு நாட்கள் ஓடியது .

ஒரு மாபெரும் கலைஞனின் வாழ்வில் எவ்வளவு பெரிய அதிர்ச்சி சோகம் !

  • ராஜ திருமகன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share