தனுஷ் தனது குடும்பத்தில் தன் பிள்ளைகள் சினிமாவுக்கு கொண்டு வருவதற்கு முன்பே ஹீரோவாக ஆக்க ஆசைப்பட்டது தனது அக்கா டாக்டர் விமலகீதாவின் மகனான பவிஷ் நாராயணைதான்.
அவரை ஹீரோவாகப் போட்டு தனுஷ் தயாரித்து இயக்கிய படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’.
அக்கா மகனுக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதால் அந்தப் படத்தில் கேமராவுக்கு முன்னால் தனுஷ் தலையைக் காட்டவே இல்லை .
பவிஷ் அப்படியே சின்ன வயசு தனுஷை உரித்து வைத்தது போல இருப்பார். அது கூட தனுஷ் நடிக்காததற்குக் காரணமாக இருக்கலாம் .
ஆனால் அவ்வளவு முயற்சி போட்டு தனுஷ் இயக்கிய படம் வெற்றி பெறவில்லை.
எனினும் தனுஷ் அப்படியே விட்டு விடுவாரா? தாய் மாமனாச்சே !
பவிஷ் இப்போது , “Love Oh Love” என்ற படத்தில் நடிக்கிறார்.. இன்றைய காதலின் இனிமை, குழப்பம் மற்றும் உணர்வுகளை கொண்டாடும் புதிய வகை காதல் பொழுதுபோக்கு படமாக உருவாகிறதாம் (நிலவுக்கு என் மேல் என்னடி கோபமும் அப்படிதானே இருந்தது?)
தெலுங்கு யூ டியூபர் நாக துர்கா, இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.
இயக்குனர் லக்ஷ்மனின் போகன், பூமி படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்குகிறார் .
”நகைச்சுவை, எமோஷனல் மற்றும் புதுமையான கதை சொல்லலின் கலவையுடன் கலந்த மனதை வருடும் காதல் பயணமாக படம் இருக்கும் என்கிறார் .
அக்காள் மகனுக்கான தனுஷின் அன்புக் கனவுகள் இந்தப் படத்தின் மூலம் நிறைவேறட்டும்.
- ராஜ திருமகன்
