ADVERTISEMENT

செவாலியர் தோட்டா தரணி – சில சாதனைகள்!

Published On:

| By Minnambalam Desk

சத்யஜித்ரே, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ஐஸ்வர்யா ராய், ஷாருக் கான், அசிம் பிரேம்ஜி , கெளரி பார்வதி பாய், சஷி தரூர், ராகுல் மிஸ்ரா , ரிச்சா சந்தா வரிசையில் பதினோராவது இந்தியராக, பிரான்சின் செவாலியர் விருது பெறுகிறார் தோட்டா தரணி (இந்த விருதை வாங்கிய முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன்தான்)

நாகமல்லி என்ற தெலுங்குப் படத்தில் செட் டிசைனராகத் தனது பணியைத் துவங்கிய தோட்டா தரணி ‘சொம்மோ கடிதி சோக்கோ கடிதி ‘என்ற தெலுங்குப் படத்தின் மூலம் கலை இயக்குனர் ஆனார். இரண்டாவது படம் கமல்ஹாசனின் நூறாவது படமான ராஜபார்வை. நாலாவது படம் மணிரத்னத்தின் முதல் படமான பல்லவி அனுபல்லவி (கன்னடம்).

ADVERTISEMENT

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிப் படங்கள் மட்டுமின்றி பிரெஞ்சு, இத்தாலியப் படங்களுக்கும் கலை இயக்குநராகப் பணியாற்றியவர் தரணி. மும்பை அமெரிக்க வீதிகளை எல்லாம் சென்னையில் செட்டாகப் போட்டு வியக்க வைத்தவர். ‘நாயகன்’ படத்துக்காகப் போட்ட மும்பை தாராவி செட், காதலர் தினம் பட மும்பை நெட் சென்டர் செட். ஜீன்ஸ் படத்தில் சில காட்சிகளில் வரும் அமெரிக்க வீதிகள் எல்லாம் சென்னையில் போடப்பட்ட செட்கள் . இந்தியனில் வரும் சுதந்திரப் போராட்டக்கள பின்னணி செட்கள், . பொன்னியின் செல்வன் செட்களை மறக்க முடியுமா? சிவாஜியின் வாஜி வாஜி பாடல் செட் ஒரு கனவுலகம்.

தசாவதாரம் படத்தின் செட்கள் சிறப்பானவை . நாயகன் , இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றவர் . உண்மையை விட இயல்பான செட்களுக்கு சொந்தக்காரர் .

ADVERTISEMENT

‘லா மேசான்’ (La Maison) என்ற ‘கஃபே–நூலக’த்தை வரும் 13 ஆம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ திறந்து வைக்கிறார்.

சென்னை மற்றும் புதுச்சேரி பிரான்ஸ் துணைத் தூதர் எத்தியென் ரோலான்-பியாக், அலையன்ஸ் பிரான்சைஸ் தலைவர் டி.கே.துர்கா பிரசாத், இயக்குனர் டாக்டர் பாட்ரிசியா தேரி–ஹார்ட் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். அந்த நிகழ்வில் தோட்டாதரணிக்கு செவாலியர் விருது வழங்கப்பட இருக்கிறது.

ADVERTISEMENT

அதே இடத்தில் நவம்பர் 14-ம் தேதி வரை ‘எனது சினிமா குறிப்புகளில் இருந்து’ என்ற தலைப்பில் தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடந்து கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது உலகத் தமிழ் மாநாட்டுக்காக எடுக்கப்பட்ட இலக்கியச் சோலை என்ற தமிழ் இலக்கியம் குறித்த திரைப்படத்துக்காக புலமைப்பித்தன் எழுத்தில், ஆர் வி உதயகுமார் இயக்கிய இலக்கியச் சோலை என்ற படத்துக்கான படப்பிடிப்பில் கரிகால் சோழன் அரண்மனை செட்டில் நிறைய மீன் வடிவங்களை செதுக்கி வைத்திருந்தார் .

மீன் என்பது பாண்டியர் சின்னம். புலி தான் சோழர்கள் சின்னம். கடைசி நேரத்தில் தவறு கண்டு பிடிக்கப்பட்டு சொன்னபோது , பதறிப் போய் இரண்டே மணி நேரத்தில் அத்தனை மீன் வடிவங்களையும் புலி வடிவங்களாக மாற்றிக் கொடுத்தார் .

அந்த தீவிர உழைப்பும் அவரது திறமையும்தான் இன்று அவரை செவாலியர் ஆக்கி இருக்கிறது .

தரணி முழுக்க அறியப்படுவார் தோட்டா தரணி

  • ராஜ திருமகன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share