“அரசியலுக்குப் போய் போட்டியிட்டு ஜெயித்து, அதிகாரத்துக்குப் போய் ஆட்சி பிடிக்க ஆசைப்படுகிறார்கள் சில சினிமாக்காரர்கள். ஆசைப்படட்டும் . ஆனால் ஒரு நல்ல அரசியல்வாதி – மக்களை ஆள விரும்பும் அரசியல்வாதி -முதலில் தான் எங்கே இருந்து வந்தோமோ ‘அந்த இடம் சரியாக இருக்கிறதா?’ என்று பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா ஆயிரத்தெட்டு பிரச்சினைகளில் தள்ளாடுகிறது . படத் தொழில் நஷ்டத்தில் போய்க் கொண்டு இருக்கிறது. நல்ல படங்கள் வருவது இல்லை. வந்தாலும் நல்ல படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது இல்லை. தவிர பல்வேறு அமைப்புகளிடம் பல்வேறு சண்டைகள் தீர்க்க முடியாத பிரச்சினைகள் .
சினிமாவில் இருந்து அரசியலுக்குப் போய் இருக்கும் பிரபலங்கள், உங்களுக்கு அடையாளம் தந்த மக்களிடம் உங்களைப் பிரபலமாக்கிய இந்த சினிமாத் தொழிலுக்கு எந்த வகையில் உதவியாக இருக்கிறீர்கள்? தமிழ் சினிமாவில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து, அதை தொடர்ந்து சிறப்பாக இயங்க வைக்க என்ன செய்தீர்கள் அல்லது செய்யப் போகிறீர்கள்?
உங்களை உருவாக்கும் துறையின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே ஒரு துரும்பும் எடுத்துப் போடாத நீங்கள் எப்படி நாளை ஆட்சிக்கு வந்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகிறீர்கள்? தீர்ப்பீர்கள் என்று எப்படி நம்புவது ?” என்று கேட்கிறார் சேரன். ரொம்ப நியாயமான கேள்வி .
”அவரு விஜய்யை சொல்றாரு..” என்று ஒரு தரப்பு சொல்ல, ”ஏன் உதயநிதி அந்த லிஸ்டில் இல்லையா?” என்கிறது விஜய் தரப்பு. ”சீமானும் கூட ”என்கிறார்கள் சிலர் . சந்தடி சாக்கில் சரத்குமார் பெயரும் லிஸ்டில் சேர்கிறது . ஆனால் சுயநலமும் யதார்த்தமும் வேறாக இருக்கிறது .
தமிழக முதல்வர்கள் வரலாற்றில் பக்தவச்சலத்துக்குப் பிறகு சினிமாவால் பிரபலம் அடையாமல் ஐந்து ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமிதான் . இப்போது இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
(இரண்டு மாதங்கள் மட்டுமே முதல்வராக இருந்த நெடுஞ்செழியன் , இரண்டு மாதம் , ஏழு மாதம், ஒன்பது மாதம் என்று மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வதும் சேர்த்துக் கொள்ளாததும் உங்கள் விருப்பம் )
அண்ணா, கலைஞர், போன்றவர்கள் ஒரே நேரத்தில் சினிமா, அரசியல் இரண்டிலும் புகழ் பெற்றவர்கள் . சினிமாவில் துவங்கி அதில் பிரபலமானபோதே அரசியலிலும் நேரடியாக களம் இறங்கி வெற்றிகரமாக இயங்கியவர் எம்.ஜி.ஆர். (தனது சினிமாக் காலம் முடிந்த பிறகே அரசியலுக்கு வந்தார் ஜெயலலிதா)
பொதுவாகவே சினிமா செல்வாக்கு இல்லாத ஒருவர் அரசியலில் முதல்வர் பதவி வரை உயர்வது என்பது நம்ம ஊரில் மலையைக் கிள்ளி எலியைப் பிடிக்கிற வேலைதான். எனவே அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் பொதுவாகவே, இந்த சினிமா செல்வாக்கு மூலம் அரசியலுக்கு வருபவர்கள் மீது, அப்படி ஒரு கோபம் இருக்கும் ! இவர்கள் இருக்கும் கட்சியின் முந்தைய தலைவர்கள் சினிமா செல்வாக்குக் கொண்டவர்கள் என்றால் கூட, இந்த கோபம் குறையாது.
‘சினிமாத் தொழில் நன்றாக இருந்தால்தானே இந்த சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருவார்கள். எனவே சினிமாத் தொழிலே நொடித்துப் போனால் எவன் வருவான் பாப்போம் ‘ என்பது இவர்கள் எண்ணமாக இருக்கும். எனவே இவர்கள் சினிமாத் தொழில் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். எனவே ஒரு சான்ஸ் அவுட்.
அதே போல சினிமாவில் ஜெயித்து அரசியலுக்கு வந்தவர்களும், ‘ நம்ம மாதிரியே வேற எவனும் வந்து நம்ம நாற்காலியைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறான். எனவே இதற்கு மேல் தமிழ் சினிமா நன்றாக இருக்கக் கூடாது’ என்று நினைக்கிறார்கள் .
(அப்படி தமிழ் சினிமா நசிந்து போனால் பிக்பாஸ் பிரபலங்களும் டி வி சீரியல் ஆட்களும் கன்னா பின்னா யூ டியூபர்களும் அரசியலுக்கு வருவார்கள் என்பது, பாவம் அரசியல்வாதிகளுக்குப் புரியவில்லை.) ஆக இரண்டாவது சான்சும் அவுட்டோ அவுட்.
‘ஆந்திராவிலும் இதே கதைதான். ஆனால் அங்கே இப்படி இல்லையே ?’ என்று சொல்லலாம் . ஆந்திராவில் என் டி ஆர் மட்டுமே அப்படி ஜெயித்தார் . (பவன் கல்யாண் விவகாரம் எல்லாம் வேறு) அங்கே சினிமாக்காரர்கள் பலர் படு தோல்வியை சந்தித்தார்கள். இங்கே பலர் எம்எலஏ , எம்பி , ராஜ்யசபா எம்பி எல்லாம் ஆனார்கள்; ஆகிறார்கள். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்தார். ஆனால் ஆந்திராவில் தோல்வி சதவீதம்தான் அதிகம்.
தவிர தெலுங்கு சினிமா தெலுங்கர்கள் சினிமாவாக இருக்கிறது . எனவே தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் . தமிழ் சினிமா தமிழர்கள் சினிமாவாக இல்லை. இங்கே தானும் ஆட மாட்டார்கள். சதையும் ஆடாது
சொல்ல மறந்த கதை எடுத்த சேரனின் கேள்விக்கு சம்மந்தப்பட்டவர்கள் சொல்ல மறுக்கும் பதில் இதுதான்
– ராஜ திருமகன்.
