ஆளில்லா விமானங்கள், AI தொழில்நுட்பம், விண்வெளி பயணம் என உலகம் அறிவியலின் அடுத்தடுத்த உச்சங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.. ஆனாலும் இன்னமும் ‘கலாசாரம்’ ‘பண்பாடு’ என்ற பெயரில் இன்றைய வாழ்வியலுக்கு முரணான ஒரே ஜாதிக்குள் அதுவும் ஒரே குலம் அல்லது உட்பிரிவுக்குள் திருமணம் என்பது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. இப்படியான ஒரு சம்பவம்தான் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது. ‘Hatti’ Tribes
இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் வசிக்கும் ஹட்டி இனத்தைச் சேர்ந்த மக்களை மத்திய அரசு 4 ஆண்டுகளுக்கு முன்னர்தான் பழங்குடிகள் இனப் பட்டியலில் இணைத்தது. இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலங்களில் 450 கிராமங்களில் சுமார் 4 லட்சம் ஹட்டி இன மக்கள் வசிக்கின்றனர்.
பழங்குடி இன மக்களையும் பொதுவாழ்வியல் உலகம் எட்டிவிட்ட போதும் அவர்களது ‘பழமைவாத’ அல்லது ‘அறிவியலுக்கு முந்தைய கால’ பழக்க வழக்கங்கள் விடுபடாமலேயே நீடிக்கின்றன. மத்திய இந்தியாவின் பீகார், ஜார்க்கண்ட், ஒடிஷா பழங்குடிகளிடமும் வினோத பழக்க வழக்கங்கள், பண்பாடு என்ற பெயரில் காலந்தோறும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல, ஹட்டி இனப் பழங்குடிகளின் திருமண முறை விசித்திரமானது. ஹட்டி இனத்தைச் சேர்ந்தவர்களின் குடும்ப சொத்துகளைப் பாதுகாக்க, குடும்ப உறவுகளை வலுப்படுத்த இவர்கள் எப்படி திருமணம் செய்கின்றனர் தெரியுமா?
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2-க்கும் மேற்பட்ட ஆண்களை ஒரு பெண் திருமணம் செய்து கொள்வது என்பதுதான். இதுதான் ஹட்டி பழங்குடிகளின் வாழ்வியல்.
ஹட்டி பழங்குடியைச் சேர்ந்த சுனிதா சவுகான் என்ற இளம் பெண், ஒரே குடும்பத்தின் சகோதரர்களான பிரதீப், கபில் ஆகியோரை ஊர் கூடி திருமணம் செய்து கொண்டுள்ளார். இத்தனைக்கும் பிரதீப் ஒரு அரசு ஊழியர்.. அதுவும் மத்திய அரசுப் பணியாளர். இவரது சகோதரர் கபில், வெளிநாட்டில் பணிபுரிகிறவர்.
சரி இதனை சட்டம் அனுமதிக்கிறதா?
இந்திய அரசியல் சட்டமானது, கணவன்- மனைவி உறவை அங்கீகரிக்கிறது; இதற்கு அப்பால், கணவனோ மனைவியோ உயிருடன் இருக்கும் போது இன்னொரு திருமணம் செய்ய அனுமதிக்கவில்லை. ஆனால் ஹட்டி பழங்குடிகளின் இத்தகைய திருமணங்களுக்கு இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்த திருமணத்தின் மூலம் எங்கள் இனத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்கிறோம் என பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர் ‘புதுமண தம்பதிகள்’!
