மத்திய அரசு தங்கத்தின் மீதான சுங்க வரியை இருமடங்கிற்கும் அதிகமாக உயர்த்தியதைத் தொடர்ந்து இந்தியாவின் தங்கம் இறக்குமதி (Gold Imports) 70 சதவீதம் வரை பெருமளவு குறைந்துள்ளது. அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வரி உயர்வு அமலுக்கு வந்த ஒரு மாதத்திற்குள்ளேயே, மாதத்திற்கு 75 முதல் 100 டன்களாக இருந்த வெளிநாட்டு தங்கம் இறக்குமதி 25 முதல் 30 டன்களாகக் குறைந்துள்ளது. இந்த முக்கிய முடிவு மொத்த விற்பனைச் சந்தை (bullion market) முதல் சாதாரண நுகர்வோர் வரை தங்கச் சந்தை முழுவதிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுங்க வரி 15 சதவீதமாக உயர்வு:
நம் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கவும், தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும் மே 13 முதல் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை அரசு 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. வரியில் ஏற்பட்டுள்ள இந்த குறிப்பிடத்தக்க உயர்வு, வெளிநாட்டிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதை மிகவும் செலவுமிக்கதாக மாற்றியுள்ளது. இதனால் இறக்குமதியாளர்களும் நகை வியாபாரிகளும் தங்கள் கொள்முதலைக் கடுமையாகக் குறைத்துக்கொண்டுள்ளனர்.
விலை உயர்வால் மேலும் பாதிப்பு:
எடையின் அடிப்படையில் இறக்குமதி 70 சதவீதம் குறைந்திருந்தாலும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்திருப்பதால் இறக்குமதி மதிப்பைப் பொறுத்தவரை அதிகரிப்பு காணப்படுகிறது. மே மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 34 சதவீதம் அதிகரித்து 3.41 பில்லியன் டாலராக இருந்தது. அதேவேளையில் ஏப்ரல்-மே காலகட்டத்தில் இது 60.14 சதவீதம் அதிகரித்து 9.04 பில்லியன் டாலராக உயர்ந்தது.
சுங்க வரி ஏன் உயர்த்தப்பட்டது?
சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் நாடாக இந்தியா உள்ளது. இங்கு குறிப்பாகத் திருமணங்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் நகைத் துறையில் தங்கத்திற்கான தேவை அதிகமாக உள்ளது. தங்கக் கொள்முதல் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பில் கணிசமான பகுதியை வெளியேற்றுவதாலும், இந்தியாவின் மொத்த இறக்குமதியில் தங்கம் 5 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டிருப்பதாலும், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில் தங்கம் மீதான கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
