வரும் மே 11-ஆம் தேதி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம் அருகே சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான இலச்சினை நேற்று (மே 5) வெளியிடப்பட்டது. ’இனமே எழு உரிமை பெறு’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், (செயல்) தலைவர் டாக்டர் அன்புமணியும் தினந்தோறும் கவனித்து வருகிறார்கள்.
டாக்டர் ராமதாஸ், மே 11 ஆம் தேதிக்காக காத்திருக்கிறேன் என்று தொண்டர்களுக்கு மடல் எழுதி வருகிறார். Full Moon Conference… PMK invites AIADMK
முன்னதாக இம்மாநாட்டில் அனைத்து சமுதாயத்தினரும் அனைத்து கட்சியினரும் கலந்துகொள்ளலாம் என்று அன்புமணி தெரிவித்திருந்தார்.
இந்த வகையில் பாமக – விசிக அரசியலில் எதிரெதிர் துருவமாக இருக்கும் நிலையில், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு பாமக நிர்வாகிகள் நேரில், வன்னியர் சங்க மாநாடு அழைப்பிதழை வழங்கியது அரசியலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அடுத்த முக்கிய நகர்வாக கரூர் பாமக மாவட்டச் செயலாளர் பாஸ்கரன், மே 5 ஆம் தேதி கரூர் அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கரை சந்தித்து மே 11 ஆம் தேதி நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கு அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தார். எம்.ஆர். விஜயபாஸ்கரும் மகிழ்ச்சியாக அழைப்பிதழை பெற்றுக் கொண்டிருக்கிறார்.
கரூர் மாவட்டத்தில் நடந்திருந்தாலும் அரசியல் வட்டாரத்தில் இது அடுத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் பாமகவின் மாவட்டச் செயலாளரான பாஸ்கரன், அக்கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாசுக்கு நீண்ட ஆண்டுகளாக மிகவும் நெருக்கமானவர். அவ்வப்போது தைலாபுரம் தோட்டத்துக்கு ராமதாஸ் அழைப்பின் பேரில் சென்று அவரை சந்தித்து வருபவர்.
இந்நிலையில், அதிமுகவின் மாவட்டச் செயலாளருக்கு அழைப்பு விடுத்ததும் டாக்டர் ராமதாஸின் அனுமதி பெற்றுதான் நடந்திருக்கிறது என்கிறார்கள் கரூர் பாமக வட்டாரங்களில்.
இதுகுறித்து நாம் பாமக மாவட்டச் செயலாளர் பாஸ்கரனிடமே பேசினோம்.
அவர், “மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் வரலாம் என்று ஏற்கனவே எங்கள் கட்சியின் ஐயாவும், சின்னய்யாவும் வெளிப்படையாக அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே அதிமுக நிர்வாகிகளையும் அழைத்தோம்” என்றார். Full Moon Conference… PMK invites AIADMK
மாவட்ட அளவில் இப்படி அழைப்பு விடுக்கும் சம்பவம் நடக்கும்போது மாநில அளவில் இது நடக்குமா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநாட்டின் தலைவர் அன்புமணி அழைப்பு விடுப்பாரா என்ற கேள்வியை இந்த கரூர் காட்சி ஏற்படுத்தியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்துவிட்ட நிலையில், பாமக அரசியல் ரீதியாக எந்தக் கூட்டணியில் இருக்கிறது என்ற கேள்விக்கு இடையில்தான், இந்த ’கரூர் அழைப்பு’ நிகழ்ந்திருக்கிறது.
