ADVERTISEMENT

என்றும் அம்மாவின் நினைவில்!.. மலரும் நினைவுகளைப் பகிர்ந்த மாஜி சபாநாயகர் தனபால்

Published On:

| By Pandeeswari Gurusamy

Dhanapal

முன்னாள் சபாநாயகர் தனபால் கடந்த 1988-ம் ஆண்டு சென்னையில் தனக்கு ஏற்பட்ட சிறு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டபோது, ஜெயலலிதா தனக்கு உதவியதை நினைவு கூர்ந்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் அவிநாசி தனித் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், முன்னாள் சபாநாயகரும் அதிமுக எம்எல்ஏவுமான தனபால் கடும் அதிருப்தியில் உள்ளார். இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் களமிறங்க இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஜூனியர் விகடனுக்கு பேட்டி அளித்த தனபால், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சிக்கு எதிராக 18 எம்எல்ஏக்கள் போர்கொடி தூக்கினர். அப்போது சபாநாயகர் பொறுப்பில் இருந்த நான், எதிர்ப்பாளர்களை பேரவையிலிருந்து தகுதி நீக்கம் செய்து இந்த ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுத்தேன். இப்படி பல சந்தர்ப்பங்களில் கட்சிக்கு உதவியாக இருந்து காப்பாற்றிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் தற்போது கட்சியில் எனக்கு மரியாதை இல்லை” என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

முன்னதாக, அவரது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெகவில் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி இணைந்த நிலையில், “எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவிற்கு உழைத்த என் தந்தைக்கு மரியாதை இல்லை. கடந்த 2025 ஜூலை மாதம் அப்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அதிமுக தலைமையோ அல்லது மற்ற முக்கிய தலைவர்களோ நேரில் வந்து பார்க்கவில்லை” என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், தனபால் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஜெயலலிதாவுடன் இருந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், “1988-ம் ஆண்டு சென்னையில் எனக்கு ஒரு சிறு விபத்து ஏற்பட்டு, கால் முறிவு ஏற்பட்டது. விபரம் அறிந்த மாண்புமிகு அம்மா, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, எனக்கு முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share