நீதிமன்ற அவமதிப்பு… முன்னாள், இன்னாள் தலைமை செயலாளர்கள் ஆஜராக உத்தரவு!

Published On:

| By Kavi

former and current Chief Secretaries ordered to appear

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் இன்னாள் தலைமை செயலாளர்கள் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூன் 20) உத்தரவிட்டுள்ளது. former and current Chief Secretaries ordered to appear

சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணை வேலை தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில், “பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க, கால நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும். கருணை அடிப்படையில் வேலை கேட்போரின் மாநில அளவிலான பட்டியலை தயாரிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதா என மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும்” என்று 2023 செப்டம்பரில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரிய வழக்கு கடந்த ஜூன் 8ஆம் தேதி நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 2023ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதை கேட்ட நீதிபதி, 2023ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே 2023ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரை தமிழகத்தில் தலைமைச் செயலாளராக பணிபுரிந்தவர்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

மாநில நிர்வாகத்தின் தலைமை பதவியை வகிக்கும் தலைமைச் செயலாளரே, நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்றால், அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் எப்படி அமல்படுத்துவார்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி,  “2023 செப்டம்பர் மாதத்துக்குப் பின், இதுவரை தமிழகத்தில் தலைமைச் செயலாளர்களாக பதவி வகித்தவர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இது சம்பந்தமாக ஜூன் 20ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்” என்று நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் முன் இன்று (ஜூன் 20) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்புக்கு கால நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கவும், கருணை அடிப்படையில் வேலை கோருவோரின் மாநில அளவிலான பட்டியல் தயாரிப்பது தொடர்பாகவும் கடந்த ஜூன் 11ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது” என்று தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் நகலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி, உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பின் தான், குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை கடந்த ஜூன் 11ஆம் தேதி வரை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று குறிப்பிட்ட நீதிபதி, “நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கும் முன் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும்.

எனவே, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரை தலைமைச் செயலாளர்களாக பதவி வகித்தவர்கள், ஜூலை 21 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்” எனவும் உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையை ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். former and current Chief Secretaries ordered to appear

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share