வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பதிவுக் கட்டணம்: இனி டாலருக்குப் பதிலாக ரூபாய்!

Published On:

| By Santhosh Raj Saravanan

Foreign Investors

சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி (SEBI) வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான பதிவு கட்டண விதிகள் தொடர்பாக ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இனி வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (Foreign Investors – FPIs) மற்றும் வெளிநாட்டு துணிகர மூலதன முதலீட்டாளர்கள் (FVCIs) பதிவு கட்டணத்தை டாலர்களுக்குப் பதிலாக இந்திய ரூபாயில் செலுத்த வேண்டும். புதிய நடைமுறைக்குத் தயாராவதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குப் போதுமான கால அவகாசம் அளிக்கும் வகையில், இந்த புதிய விதி 6 மாதங்களுக்குப் பிறகு அமலுக்கு வருகிறது.

டாலர்களுக்குப் பதிலாக ரூபாயில் கட்டணம்

செபி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தற்போது 1,000 டாலராக இருந்த பதிவு கட்டணம் 90,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில், வகை-I (Category-I) FPIகள் மற்றும் FVCIகளுக்கான 2,500 டாலர் பதிவு கட்டணம் இனி 2.3 லட்சம் ரூபாயாக இருக்கும். செபி பதிவு கட்டணத்தை மட்டும் மாற்றவில்லை; தாமதக் கட்டணம் மற்றும் தொடர்ச்சிக்கான கட்டணம் (continuation fee) ஆகியவற்றிலும் இதேபோன்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
எளிதாகும் பதிவு செயல்முறை

திருத்தப்பட்ட விதிகளின்படி, FPIகள் மற்றும் FVCIகளிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணங்களை பதிவுக்கான விண்ணப்பத்தைப் பெற்ற 5 வேலை நாட்களுக்குள் டெபாசிட்டரிகள் (depositories) செபியிடம் செலுத்த வேண்டும். கூடுதலாக, FPI பதிவுக்கான பொதுவான விண்ணப்பப் படிவத்தில் இப்போது பிறந்த தேதி அல்லது நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட தேதியைக் (date of incorporation) குறிப்பிடும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிட்ட அறிவிப்புக்கு இணங்கவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செபி தெரிவித்துள்ளது. 

செயல்பாட்டுச் சிக்கல்களைக் குறைக்கும்

செபி வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025-26 நிதியாண்டில் FPIகள் மற்றும் FVCIகளிடமிருந்து பதிவு, தொடர்ச்சி மற்றும் பிற கட்டணங்கள் (GST உட்பட) மூலம் 12.98 மில்லியன் டாலர் வசூலிக்கப்பட்டது. கட்டணங்களை ரூபாயில் நிர்ணயிப்பதன் மூலம் டாலர் அடிப்படையிலான தற்போதைய நடைமுறையில் உள்ள கையேடு கணக்கு பராமரிப்பு, விலைப்பட்டியல் தயாரித்தல், நிகழ்நேர கணக்குத் தகவல் இல்லாமை மற்றும் நிதி அறிக்கை தயாரிப்பதில் ஏற்படும் தாமதங்கள் போன்ற பல செயல்பாட்டுச் சிக்கல்கள் நீக்கப்படும் என்று செபி கூறுகிறது.

ADVERTISEMENT
Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share