Assembly Election 2026 : தமிழகத்தில் இன்று இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Published On:

| By Pandeeswari Gurusamy

election commission

தமிழகத்தில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து இன்று(ஏப்ரல் 9) இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி கடந்த மார்ச் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. மார்ச் 30-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், ஏப்ரல் 6-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

ADVERTISEMENT

அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 7,599 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 7-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் 5,072 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. முறையாக பூர்த்தி செய்யப்படாத 2,464 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முக்கிய வேட்பாளர் மற்றும் அவரது மாற்று வேட்பாளர் ஆகிய இருவரின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால், தவெக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 233 ஆகக் குறைந்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. இன்று மாலையே சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கப்பட உள்ளது.

மேலும், நாளை முதல் அந்தந்த தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் அச்சிடும் பணிகள் தொடங்க உள்ளன. நாளை முதல் பூத் ஸ்லிப் வழங்கப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் தயாராகி வருகின்றன.

ADVERTISEMENT

இதில் 5,938 வாக்குச் சாவடிகள் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share