தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி மார்ச் 30ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்றைய தினமே முதல்வர் வேட்பாளர்களான தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய 8 நாட்கள், அதாவது இன்று (ஏப்ரல் 6) வரை தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கியது. ஆனால் இந்த 8 நாட்களில் 4 நாட்கள் விடுமுறை தினங்கள் ஆகும். அதனால் மீதமிருந்த 4 நாட்களில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
கடைசி நாளான இன்று அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக பொதுச்செயலாளார் பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சவுமியா அன்புமணி, எல்.முருகன்,
அமைச்சர்கள் எ.வ.வேலு, காந்தி, பனமாத்துப்பட்டி ராஜேந்திரன், சேகர்பாபு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் , கீதா ஜீவன் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம்,
காட்டுமன்னார்கோயில் வேட்பாளர் ஜோதிமணி, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி என ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுதாக்கல் மதியம் 3 மணியுடன் நிறைவடைந்துவிட்டது. அதன்படி இந்த 4 நாட்களில் 4574 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.
வேட்புமனுக்களை திரும்ப பெற வரும் 9ம் தேதி கடைசி நாளாகும்.
