இரு சக்கர வாகனங்களுக்கும் இனி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் செய்திக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார். fasttag toll fee for two wheelers
தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகள் உட்பட நாடு முழுவதும் 1100க்கும் அதிகமான சுங்கச்சாவடிகள் உள்ளன. இங்கு இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை தவிர வாடகை டாக்ஸி முதல் பேருந்துகள், கன ரக வாகனங்கள் வரை அனைத்துக்கும் சுங்க்கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 4000 கோடி ரூபாய் முதல் 4500 கோடி ருபாய் வரை இந்திய அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
அதேசமயம் சாலை பராமரிப்பு இல்லாமல் சுங்கக் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றன. இதுதொடர்பாக மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்குகளும் உள்ளன.
இப்படியொரு சூழலில் சுங்க கட்டணம் தொடர்பாக அரசாங்கம் புதிய முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வந்தன.
அதன்படி இருசக்கர வாகனம் வைத்துள்ளவர்கள் ஃபாஸ்டேக் வாங்குவது கட்டாயமாக்கப்படும் . ஜூலை 15 முதல் இந்த திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்த உள்ளதாக தகவல் வந்தது. இதையடுத்து வாகன ஒட்டிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியையும் டேக் செய்து சமூக வலைதளங்கள் மூலம் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கம் மூலம் விளக்கமளித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “சில ஊடகங்கள் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிப்பது குறித்து தவறான செய்திகளைப் பரப்புகின்றன. அத்தகைய முடிவு எதுவும் மத்திய அரசால் முன்மொழியப்படவில்லை. இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்தில் முழுமையான விலக்கு தொடரும்.
உண்மை தெரியாமல் தவறான செய்திகளைப் பரப்பி பரபரப்பை ஏற்படுத்துவது ஆரோக்கியமான பத்திரிகைக்கான அடையாளம் அல்ல. இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். fasttag toll fee for two wheelers
