சட்டமன்றத்தில் விஜய் பதில் சொல்லவில்லை. படிக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு காட்டமாக விமர்சித்துள்ளார்.
முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் பேசும் போது மிசா குறித்தும், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் பேசியது கண்டனங்களை குவித்தது.
இந்தநிலையில் முதல்வர் விஜய்யையும் தவெக அரசையும் கண்டித்து இன்று (செப்டம்பர் 12) தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்னாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதல் முதல்வர் விஜய்க்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, ”இன்றைக்குச் சட்டமன்றம் சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது. மக்கள் பிரச்சனை பேசாத ஒரு சட்டமன்றமாக இன்றைக்கு மாறியிருப்பதை நீங்களே அனைவரும் தொலைக்காட்சியிலே நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தச் சட்டமன்றத்திற்கு என்று ஒரு மாண்பு உண்டு, ஒரு மரபு உண்டு.
இன்னும் சொல்லப்போனால் ஜனநாயக நெறியைப் பற்றிப் பேசுவதுதான் சட்டமன்றம். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் கேள்விதான் கேட்பார்கள். பதில் சொல்ல வேண்டியது ஆளுங்கட்சியினுடைய பொறுப்பு.
அப்படி கேள்வி கேட்டால் முதலமைச்சர் பதிலே சொல்வதில்லை. அவர் படிப்பார்… படிப்பார்… பதில் சொல்லத் தெரியாது. ஏனென்றால் அவருடைய சினிமா திரைப்பட வாழ்க்கையிலே அடுத்தவர் எழுதிக் கொடுக்கிற டயலாக்கை அப்படியே பேசி பழக்கப்பட்டுவிட்ட காரணத்தினால், நாட்டுப் பிரச்சனை அவருக்குத் தெரியவில்லை, ஆனால் படிக்கிறார்.
நாங்களெல்லாம் கலைஞருடைய சட்டமன்றத்திலே பணியாற்றியிருக்கிறோம். ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறபொழுது சட்டமன்றத்திலே பணியாற்றியிருக்கிறோம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சட்டமன்றத்திலே பணியாற்றியிருக்கிறோம். ஏன், அம்மையார் ஜெயலலிதா இருக்கும் போது சட்டமன்றத்திலே பணியாற்றியிருக்கிறோம்.
ஒரு எதிர்க்கட்சிக்காரர் கேள்வி கேட்டால் அதற்கு மாண்போடு பதில் சொல்வார்கள், அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கிறபோது நாங்கள் பத்தாண்டு காலம் எதிர்க்கட்சியில் உட்கார்ந்து கேள்வி கேட்டிருக்கிறோம்.
சட்டமன்றத்திலே ஒரு மாண்பு இருந்தது, ஒரு பண்பு இருந்தது. கேட்கிற கேள்விக்கு அமைச்சர்கள் பதில் சொல்வார்கள். இன்னும் சொல்லப்போனால் அமைச்சருக்குப் பதில் தெரியவில்லை என்று சொன்னால் முதலமைச்சர் பதில் சொல்வார்.
இப்படி இல்லப்பா இந்த சட்டமன்றம்… முதலமைச்சரைக் கேள்வி கேட்டால் அவருக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.. 4 மந்திரிகள் எழுந்திருக்கிறார்கள். அந்த பதிலும் முறையாக இல்லை. உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
முதலமைச்சருக்கு என்று இருக்கிற துறை எது? நகராட்சித் துறை, காவல்துறை..
காவல்துறை மானியம் வருகிறபொழுது இன்றைக்கு நம்முடைய எதிர்க்கட்சித் தலைவராய் இருக்கிற, ஏன் இந்த திராவிட இயக்கத்தை இன்னும் 50 ஆண்டு காலத்திற்கு அழைத்துச் செல்ல இருக்கிற நம்முடைய உதயநிதி ஸ்டாலின் கேள்விகளை எழுப்பினார்.
அவர் என்ன கேட்டார் என்றால், இன்றைக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகமாக இருக்கிறது. புள்ளி விவரத்தோடு சொல்ல வேண்டும் என்று சொன்னால், இந்த 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது. அதில் 200 கொலை நடந்திருக்கிறது. 116 நாளில் 200 கொலை நடந்திருக்கிறது. 8 காவல் மரணங்கள் நடந்திருக்கிறது. சாதி அடிப்படையில் 10 ஆணவக் கொலைகள் நடந்திருக்கிறது என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் என்ன பதில் சொன்னார்கள் தெரியுமா? நாங்கள் இன்னும் ஆறு மாதம் கூட ஆளவில்லை, இப்படி கேள்வி கேட்கிறீர்களா? என்று கேட்கிறார்கள். தினமும் நடக்கிற கொலையை, கொள்ளையைப் பற்றி காவல்துறை மானியத்திலே கேள்வி கேட்காமல் ஆறு மாதம் வரைக்கும் காத்திருக்க முடியுமா?
தமிழ்நாட்டிலே உள்ளாட்சித் துறையில் எந்தப் பணிகளும் இந்த 116 நாளில் நடக்கவில்லை. குடிநீர் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள், எந்த மாநகராட்சியிலோ, எந்த நகராட்சியிலோ, எந்த பேரூராட்சியிலோ பணிகள் நடைபெறவில்லை. இதுபற்றி ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் கேள்வி கேட்டால், பதில் இல்லை.
அதிகாரிகளை கேட்டால் “மேலிடம்” என்று சொல்லுகிறார்கள். இரவில் மின்சாரம் வரவில்லை என்று கேட்டாலும் ”மேலிடம்” என்று சொல்கிறார்கள். அந்த மேலிடம் யார்?
எனவே, நகராட்சிப் பொறுப்பு வகிக்கிற முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டுமா, வேண்டாமா? அதற்குப் பதிலாக அங்கே கல்வித்துறை மந்திரி என்று ஒருத்தர், பட்டிமன்றப் பேச்சாளர்… அவர் எழுந்து பதில் சொல்கிறார்.
பதிலாவது பொருத்தமாக இருந்ததா? ஆறு மாதம் அவகாசம் கொடுங்கள் என்கிறார்.
என்ன, குடிக்கிற தண்ணீருக்கு, எரிகிற லைட்டுக்கு, அடிக்கிற நாற்றத்திற்கு ஆறு மாதமா? இப்படிப்பட்ட ஒரு சட்டமன்றம்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நீதிமன்றத்திலே ஒரு வழக்கு இருக்கிறது, அந்த வழக்கு சம்பந்தப்பட்ட அபிடவிட்டை எடுத்துப் படிக்கிறார். நான்தான் எழுந்து சொன்னேன், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நீங்கள் எனக்குக் கொடுத்த புஸ்தகத்தில் 92-வது விதி என்ன சொல்லுகிறது தெரியுமா? கோர்ட்டில் இருக்கிற வழக்கைப் பற்றிச் சட்டமன்றத்தில் பேசக்கூடாது என்று இருக்கிறது” – முதலமைச்சர் படிக்கிறார், இது நியாயம்தானா என்று கேட்டேன்.
கோர்ட்டுக்குப் போன கேஸை நியாயமா அநியாயமா என்று முடிவு செய்ய வேண்டியது நீதிபதி, அதை அங்கே பேசக்கூடாது. ஆனால் பேசினார்… இல்லை, படித்தார்.

அதற்கு அடுத்தது ஒன்று சொன்னார்… சர்க்காரியா கமிஷன். என் தலைவர் கலைஞரைப் பற்றியும், மத்திய அமைச்சராக இருந்த மாறனைப் பற்றியும் குறிப்பிட்டார். உடனே எழுந்தேன். “இந்த சர்க்காரியா கமிஷன் ஏற்கனவே முடிந்துவிட்டது, முடிந்துவிட்ட சர்க்காரியா கமிஷன் பற்றிப் பேசக்கூடாது” என்று நான் குறிப்பிட்டேன். அவர் பேசிக்கொண்டிருந்தார்.
சர்க்காரியா கமிஷனில் என்ன தீர்ப்பு வந்தது தெரியுமா? திமுக ஆட்சி மீது 28 குற்றச்சாட்டு சொல்லப்பட்டது, 28 குற்றச்சாட்டுக்கும் எந்த ஆதாரமும் முகத்திரமும் இல்லை, எனவே அதைத் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று வந்தது.
நான் கேட்கிறேன், மாறனைப் பற்றிப் பேசலாமா? இந்த நாட்டுக்கே புகழ் சேர்த்தவர், இந்தியாவுடைய புகழைச் சேர்த்தவர் மாறன்.
அதைவிட இன்னொரு ரகசியத்தைச் சொல்கிறேன்… அவருடைய பிள்ளைகள், கலாநிதி மாறன் – சன் தொலைக்காட்சி பார்க்கிறீர்களே அதனுடைய முதலாளி – அவரிடம் பணம் வாங்கிக்கொண்டு, இந்த முதலமைச்சராக இருக்கிற விஜய், ‘சர்க்கார்’ என்று ஒரு படம், ‘பீஸ்ட்’ என்று ஒரு படம் நடித்தார். யார் முதலாளி? கலாநிதி மாறன் முதலாளி. அவரிடம் பணம் வாங்கி நடித்த இன்றைய முதலமைச்சராய் இருப்பவர், கொஞ்சமாவது நன்றி உணர்வு இருந்தால் அண்ணன் மாறனைப் பற்றி, அந்த குடும்பத்தைப் பற்றி பேசலாமா?.
இன்னொரு செய்தி உங்களுக்குச் சொல்கிறேன்… கேள்வி கேட்ட நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் கூட ஒரு முதலாளிதான். அவரிடம் பணம் வாங்கிக்கொண்டு ‘குருவி’ என்கிற படத்தில் நடித்தவர்தான் இன்றைக்குத் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருக்கிற விஜய். அவரிடம் பணம் வாங்கி, கைநீட்டி நடித்திருக்கப்பா… கொஞ்சமாவது அந்த நன்றி உணர்வு வேண்டாமா?
அடுத்தது, மிசாவில் அதிகமாகக் கொடுமைப்படுத்தப்பட்டவர் அண்ணன் மு.க. ஸ்டாலின் என்று குழந்தை பிள்ளைக்குக் கூட தெரியும்.
மிசா காலத்திற்குப் பின்னால் ஜெயிலில் என்ன நடந்தது என்று கேட்பதற்காக ஒரு கமிஷன் போட்டார்கள், அதற்கு ‘இஸ்மாயில் கமிஷன்’ என்று பெயர். அந்த இஸ்மாயில் கமிஷன் யார் யாரெல்லாம் ஜெயிலில் இருந்தார்கள், என்ன நடந்தது என்று விசாரித்தது. இதில்1977 ஜூலை மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் மு.க. ஸ்டாலின் ஆஜரான போது “உனக்கு என்னப்பா நடந்தது?” என்று கேட்கப்பட்டது.
இதற்கு அவர், ”என்னை அடித்தார்கள், சித்திரவதை செய்தார்கள், என்னை கீழே போட்டு பூட்ஸ் காலால் உதைத்தார்கள், என் கன்னத்திலே அறைந்தார்கள், எலும்பே நொருங்கிவிட்டது. என்னை உதைக்கிறபொழுது என் அறையில் இருந்த அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் சிட்டிபாபு அவர்கள் என் மீது வந்து படுத்துக்கொண்டார், என் உதையெல்லாம் அவர் வாங்கினார். அவர் சிறையிலேயே இறந்துவிட்டார். அவர் இல்லை என்று சொன்னால் நான் தப்பித்திருக்க முடியாது” என்று சொல்லுகிறார்.
எதிரி கூட பரிதாபப்படுவான்யா… இந்த முதலமைச்சருக்கு அவ்வளவு கல்நெஞ்சமா? ” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை, ஆட்சியாளர்களிடத்தில் எந்தப் பொறுப்பும் இல்லை, பொறுப்பாகவும் பதில் சொல்வதில்லை. இந்த இடம் பழிவாங்குகிற இடம் அல்ல, மக்கள் பிரச்சனை பேசுகிற இடம்தான் சட்டமன்றம்” என்றும் குறிப்பிட்டார்.
