ஆன்லைன் உணவு விநியோகத் தளமான ஸ்விக்கி (Swiggy) தனது சங்க விதிகளில் (Articles of Association) திருத்தம் செய்வதற்குத் தேவையான பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறுவதில் தோல்வியடைந்துள்ளது. இந்தத் திருத்தமானது நிறுவனத்தை ‘இந்தியருக்குச் சொந்தமான மற்றும் இந்தியரால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனம்’ என அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
மே 21, வியாழக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில், சங்க விதிகளில் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுக்கு 72.36% பங்குதாரர்களின் வாக்குகள் கிடைத்ததாகவும், இது தேவையான குறைந்தபட்ச வரம்பை விட 2.65% குறைவாக இருப்பதாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, முதலீட்டாளர்கள் ஸ்விக்கின் பங்குகளைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
மே 21 அன்று ஸ்விக்கின் பங்குகள் 2.18% அல்லது ரூ. 5.60 சரிந்து, ஒரு பங்கு ரூ. 250.75 என்ற விலையில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்றும் ஸ்விக்கின் பங்குகள் சரிவைச் சந்தித்து வருகின்றன. சந்தை தொடங்கிய பிறகு ஸ்விக்கின் பங்குகள் சுமார் 0.5% அல்லது ரூ. 1க்கும் அதிகமாகச் சரிந்து, சுமார் ரூ. 250 என்ற அளவில் வர்த்தகமாகி வருகின்றன. கடந்த ஒரு மாத காலத்தில் ஸ்விக்கின் பங்குகள் 2.07% அல்லது ரூ. 5.30 சரிவைக் கண்டுள்ளன.
கடந்த ஒரு மாத காலத்தில் அதன் பங்குகள் 11.47% அல்லது ரூ. 32.50 சரிந்துள்ளன. ஓராண்டு காலத்தில் பங்குகள் 20.41% அல்லது ரூ. 64.30 சரிவைக் கண்டுள்ளன. நிறுவனத்தின் சங்க விதிகளில் திருத்தம் செய்யவும், ரெனன் டி காஸ்ட்ரோ ஆல்வ்ஸ் பின்டோ என்பவரை நிர்வாகம் சாராத, சுயாதீனம் அல்லாத பரிந்துரைக்கப்பட்ட இயக்குநராக நியமிக்கவும், அஞ்சல் வாக்குச்சீட்டு மற்றும் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு (e-voting) வாயிலாகப் பங்குதாரர்களின் ஒப்புதலை நிறுவனம் கோரியிருந்தது.
முன்னதாக ஸ்விக்கி நிறுவனம் 2025-26 நிதியாண்டின் கடைசி காலாண்டான மார்ச் காலாண்டிற்கான தனது நிதி முடிவுகளை அறிவித்தது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ. 800 கோடியாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த மதிப்புரூ. 1,081 கோடியாக இருந்தது. நான்காம் காலாண்டு முடிவுகளின்படி, ஸ்விக்கின் வருவாய் 44.7 சதவீதம் அதிகரித்து ரூ. 6,383 கோடியை எட்டியுள்ளது.
