எடப்பாடி பழனிசாமி அதிமுகவை லீமா ரோஸிடம் விற்றுவிட்டார் என அதிமுக முன்னாள் அமைச்சரும், லால்குடி தொகுதி தவெக வேட்பாளருமான கு.ப.கிருஷ்ணன் குற்றம் சாட்டி உள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தவெக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தீவிர தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “போட்டி திமுக – அதிமுகவிற்கு இடையில் தான் உள்ளதா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார். “நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள். நீங்கள் எப்படி கேட்டிருக்க வேண்டும் என்றால், ‘தவெகவுக்கு தான் போட்டி. திமுகவைத் தவிர எங்களுக்கு போட்டி எவரும் இல்லை. நாங்கள் தான் வெற்றி வேட்பாளர். திமுக பின்னால் இருந்து கொண்டிருக்கிறது. பிரகாசமான, ஒளிமயமான வெற்றியை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஆதியும் அந்தமும் எங்கள் தலைவர் மட்டும்தான்’ என்று கேட்டிருக்க வேண்டும். எங்கள் தலைவர் விஜய் திருச்சி கிழக்கிற்கு ஏற்கனவே வந்துள்ளார். மீண்டும் வருவார். மக்களைச் சந்திப்பார்” என்று தெரிவித்தார்.
லீமா ரோஸ் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, “மரியாதைக்குரிய அந்த அக்காவிற்கும் லால்குடிக்கும் என்ன சம்பந்தம்? ஒரு சட்டமன்ற உறுப்பினராக நான் உரிமையோடு வெங்காயக் கடைக்கு வந்துள்ளேன் என்றால், ஒரு வெங்காயத்தை எடுத்து உலர்த்தி விற்பதாக இருந்தால் எத்தனை நாட்களுக்கு அவர்கள் வைத்திருக்க முடியும்? ஒரு நாள் மழை பெய்தாலே அனைத்தும் போய்விடும். இது ஒரு அழுகும் பொருள். ஒரு விவசாயி என்ற முறையில் எனக்குத் தெரியும். லால்குடியில் நெல், கரும்பு, வாழை தான் இருக்கிறது. அந்த அக்காவிற்கு எத்தனை ரக நெல் இருக்கிறது என்று தெரியுமா? எப்போது விதைக்க வேண்டும் என்று தெரியுமா? ஒரு ஏக்கருக்கு விதைகள் எவ்வளவு விதைக்க வேண்டும் என்று தெரியுமா?” என்று கேட்டார்.
தொடர்ந்து, “எடப்பாடி அதிமுகவை மரியாதைக்குரிய லீமா ரோஸாவிடம் விற்றுவிட்டார். அவர் மீது ஒரு வழக்கு, இரண்டு வழக்கு அல்ல. அவர் மீது வழக்கு போடாத மாநிலமே கிடையாது. எல்லா மாநிலங்களிலும் வழக்கு போட்டு இருக்கிறார்கள். எடப்பாடிக்கு ஒன்றே ஒன்றை கேட்கிறேன். நாங்கள் எல்லோரும் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தான். என் பின்னால் பெரிய பெரிய தலைகள் உள்ளன.
இந்தியா முழுவதும் தம்முடைய லாட்டரி சீட் ஆதிக்கத்தை நடத்திய மார்ட்டினை இந்தியாவிலேயே கைது செய்து சிறையில் போட்டவர் ஜெயலலிதா என்பதை மறந்துவிடக் கூடாது. லாட்டரி சீட்டை தமிழ்நாட்டில் தடை செய்தார்கள். அப்படிப்பட்ட அந்த நபருடைய மனைவியை தன்னுடைய அதிமுக வேட்பாளராக போட்டிருக்கிறார் என்று சொன்னால், உண்மையிலேயே அவருக்கு அதிமுக மீது பற்று இருக்கிறதா? அம்மாவின் மீது பாசம் இருக்கிறதா? இவர் புரட்சித் தலைவரைப் பார்த்ததே கிடையாது. அது எங்களுக்கு தெரியும். இவர் 91க்குப் பிறகு தான் வந்தார். ஆனால் அவர் ‘நான் முன்னாடியே வந்துவிட்டேன்’ என்று கணக்கு சொல்லுவார். சேவல் என்பது 88இல் இருந்தது. நாங்கள் எல்லோரும் பச்சை குத்தியவர்கள். நாங்கள் எல்லாம் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு அம்மாவால் உருவாக்கப்பட்டவர்கள். அம்மாதான் மார்ட்டினை கைது செய்து சிறையில் அடைத்தார்.
அந்த மார்ட்டினுடைய மனைவியை அதிமுக வேட்பாளராக போட்டிருக்கிறார் என்று சொன்னால், அதிமுக இருக்கிறதா அல்லது விற்கப்பட்டுவிட்டதா என்பது உங்களுக்கே தெரியும்” என்று தெரிவித்தார்.
