திருச்சி சட்டக் கல்லூரி முதல்வருக்கு சட்டப்படி தகுதி இல்லையா?

Published On:

| By Minnambalam Desk

trichy

திருச்சி சட்டக் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் உரிய கல்வித் தகுதியின்றி அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி காஜாமலை பகுதியில் அரசு சட்டக்கல்லூரி அமைந்துள்ளது.  இது, சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரியாகும்.

ADVERTISEMENT

இந்த கல்லூரியின் முதல்வராக தற்போது ராஜேஸ்வரன் செயல்பட்டு வருகிறார். இவர், எம்.எல்., பிஎச்.டி.(சட்டம்) படித்திருப்பதாக திருச்சி சட்டக் கல்லூரி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், சரியான கல்வி தகுதி இல்லாமல் இவர் பணியமர்த்தப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ADVERTISEMENT

சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிய யுஜிசி மற்றும் பிசிஐ விதிகளை நிர்ணயித்துள்ளது, அதன்படி அரசு சட்டக் கல்லூரிகளில் விரிவுரையாளர் நியமனத்திற்கு, எம்.எல். அல்லது அதற்கு இணையான சட்ட முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமான விதியாக இருந்து வருகிறது.

அதன்பிறகு, பணி முதுநிலை அடிப்படையில் தகுதி வாய்ந்த விரிவுரையாளர், இணை பேராசிரியராக பணி உயர்வு பெற்று, பின்னர் முதுநிலை அடிப்படையில் சட்டக் கல்லூரியின் முதல்வராக பணியில் அமர்த்தப்படுவார்.

ADVERTISEMENT

ஆனால், திருச்சி சட்டக் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் அங்கீகரிக்கப்பட்ட முதுகலை சட்டப் பட்டம் பெறாமலேயே, தவறான தகவல்களைக் கொடுத்து விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து, தற்போது முதல்வராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார் என்று தகவல்கள் வருகின்றன.

இதுகுறித்து வழக்கறிஞர்கள்  தரப்பில் விசாரித்தபோது, “ ராஜேஸ்வரன் பெற்றுள்ளதாக கூறப்படும் முதுகலை சட்ட படிப்பான “Master of Labour Laws & Labour Welfare (MLL & LW” சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட சட்ட முதுகலைப் பட்டமோ அல்லது அதற்குச் சமமானதோ அல்ல. அந்த படிப்பு ஒரு பட்டய படிப்பு தான் . ஆகவே அவர் 1998ல் விரிவுரையாளராக பணியில் சேரும் போதே தவறான தகவல் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளதாக தெரிகிறது.

தகுதியான முதுகலை சட்ட பட்டம் பெறாமலேயே விரிவுரையாளர் பணிக்கு சேர்ந்தது மட்டுமல்லாமல் தற்சமயம் அரசு சட்ட கல்லூரியில் முதல்வராகவும் பணி செய்து வருகிறார்.

1994-1996 காலகட்டத்தில், மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள தனியார் கல்லூரியான Symbiosis Society’s Law College யில் இந்த படிப்பு படித்து பட்டய பட்டம் பெற்றுள்ளார்.

அவர் படித்ததாக கூறப்படும் பட்டம் தொழிலாளர் தொடர்பான ஒரு மேலாண்மை பாடமே (management course) தவிர அது சட்ட முதுகலை பட்டம் இல்லை.

இந்தப் பாடப் பிரிவு, சட்டம் பயின்ற பட்டதாரிகளுக்கு மட்டுமே என்ற கட்டுப்பாடு கொண்டதல்ல.

எந்த துறையில் இளங்கலை பட்டம் படித்திருந்தாலும் (ஆர்ட்ஸ் @ சயின்ஸ்) இந்த Master of Labour Laws & Labour Welfare (MLL & LW)” என்ற முதுகலை பட்டய படிப்பை படிக்கலாம். இது சட்ட முதுகலை பட்ட படிப்பு என ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. சட்ட முதுகலை பட்டம் என்பதனை படிக்க வேண்டுமாயின் இளங்கலை சட்ட படிப்பில் கண்டிப்பாக பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது விரிவுரையாளர் பதவிக்கு அடிப்படை தகுதியாகும்.

ஆனால் ராஜேஸ்வரன் பட்டய படிப்பை முதுகலை படிப்பு போல் காட்டி நியமனம் பெற்றிருக்கிறார். இது சாதாரண குற்றமல்ல, அரசை ஏமாற்றும் வகையில் செய்த மோசடியாகும்.

சட்ட மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, இந்த விவகாரம் தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்த வேண்டும்.

துறை சார்ந்த முதல் கட்ட நடவடிக்கையில் ராஜேஸ்வரன் தகுதியற்ற முதுகலை சட்ட பட்டம் பெற்று பணியில் சேர்ந்துள்ளது உறுதிபடுத்தப் பட்டால் அவரை உடனடியாக திருச்சி அரசு சட்டக்கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து நீக்கி,  அவர் தவறான தகவல் கொடுத்து மோசடியாக பணியில் சேர்ந்த குற்றம் குறித்து உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுபற்றி நாம்  சட்டக் கல்வி இயக்குநர்( DLS -FAC) கவுரி ரமேஷை தொடர்புகொண்டு கேட்டபோது,  ‘இது அரசு அதிகாரி சார்ந்த விஷயம் என்பதால் தகவல் பகிரக் கூடாது’ என பதிலளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share