ADVERTISEMENT

மகளிர் உரிமை தொகைக்கு தடை போட விட்டுவிடுவேனா : வாக்குச்சாவடி பயிற்சி மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு!

Published On:

| By Kavi

2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் வெல்லும் வகையில் திமுகவினர் உழைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருப்பத்தூரில் இன்று (பிப்ரவரி 14)  ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பெயரில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு நடைபெற்றது. 

ADVERTISEMENT

அமைச்சருக்கு பாராட்டு

இதில் கலந்துகொண்டு திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின்,  “உங்கள் கான்ஃபிடன்ஸ் லெவலை பார்க்கும்போதே, அடுத்ததும் தி.மு.க. ஆட்சிதான் என்று, மக்கள் சொல்வது தெரிகிறது!

ADVERTISEMENT

அடுத்தடுத்து, நாம் அறிவிக்கும் திட்டங்களாலும், அடுத்து நடக்க இருக்கும் மதுரை, கோவை பயிற்சிக் கூட்டங்களாலும், இந்த எனர்ஜியும், உற்சாகமும், கூடிக்கொண்டே போகும். அதற்கு நான் கேரண்டி!

வடக்கு மண்டல BLA-2, BLC, BDA வாக்குச்சாவடி குழுவினருக்கான ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சி நிகழ்ச்சியையே மாநாட்டைப் போன்று ஏற்பாடு செய்து அசத்தியிருக்கும், வடக்கு மண்டலப் பொறுப்பாளர் – அமைச்சர் ‘எதிலும் வல்லவர்’ எ.வ.வேலுவுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்!

ADVERTISEMENT

டிரண்டே கருப்பு-சிவப்புதான்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியை நாம் பெற்றோம். அப்போது இருந்ததைவிட அதிகமான திட்டங்களை இப்போது நிறைவேற்றி கொடுத்திருக்கிறோம்! அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் தீர்த்து வைத்திருக்கிறோம்! அதனால், பெரிய வெற்றியை வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் மூலமாக நான் எதிர்பார்க்கிறேன்.

2019-இல் இருந்து நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தலிலும் நமக்கு, வெற்றி மேல் வெற்றிதான்! அதுவும் சாதாரண வெற்றி அல்ல; சதிகளை முறியடித்த சரித்திர வெற்றி! ஒவ்வொன்றும் எதிரிகளை கலங்கடிக்கும் வெற்றி! இந்தியா முழுவதும் எந்த டிரெண்ட் இருந்தாலும், தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட், Black and Red-தான் – கருப்பு-சிவப்புதான்!

2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான்! ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சிதான்! திராவிட மாடல் 2.0 ‘ஸ்டார்ட்’!

இதுவரை இல்லாத அளவிற்கு, தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு தொகுதியும் தி.மு.க.வின் கோட்டை என்று நாம் இந்த முறை நிரூபித்துக் காட்ட வேண்டும்! 2026-இல் தி.மு.க.வின் வெற்றி என்பது, இனி பல ஆண்டுகளுக்கு அரசியல் ஆய்வாளர்கள் வியந்து பேசும் வரலாற்று வெற்றியாக இருக்க வேண்டும்!

மினிமம் 350 வாக்குகள்

தமிழ்நாடு முழுவதும் 100 வாக்காளர்களுக்கு ஒரு உறுப்பினர் வீதம், ஒவ்வொரு பூத்திலும் சராசரியாக 10 வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களை நாம் நியமித்திருக்கிறோம்! தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை பூத் இருக்கிறது? 75 ஆயிரம் பூத்!

இவ்வாறு, ஒவ்வொரு பூத்திலும் நாம் செட் செய்திருக்கும் ‘மினிமம் டார்கெட்’, 350 வாக்குகள்! இந்த டார்கெட்டை நாம் அச்சீவ் செய்தாலே, 2 கோடியே 60 லட்சம் வாக்குகளுக்கு மேல் நாம் வாங்கிவிடுவோம். இந்தத் தேர்தலில், 2 கோடியே 50 லட்சம் வாக்குகளுக்குக் குறையாமல் நாம் வாங்கியே ஆக வேண்டும்! இதை நடத்திக் காட்டுவது உங்களின் பொறுப்பு! உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து தருவது என்னுடைய பொறுப்பு!

ரிப்பீட் மோடில் வாக்காளர்களை சந்தியுங்கள்

“2 கோடியே 50 லட்சமா?” அப்படி என்று நினைத்து யாரும் மலைக்க வேண்டாம்; யோசிக்க வேண்டாம். இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் தலா 40-50 வாக்குகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டால், அவ்வளவுதான்! சிம்ப்பிள்! ஒவ்வொருவரும் அவர்களுக்கு அசைன் செய்திருக்கும் 50 வாக்குகளை பெற்றுத் தந்தாலே போதும்! நம்முடைய டார்கெட்டை அச்சீவ் செய்து விடுவோம்! 200 தொகுதி நிச்சயம்! 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதுதான் நம்முடைய லட்சியம்! அதற்கு முதலில் அடுத்த 2 மாதம் ஓய்வை மறந்து உழைக்க வேண்டும்!

தேர்தலுக்குள் நீங்கள் ஒவ்வொருவரும் – 100 வாக்காளர்களை, குறைந்தது 5 முறையாவது நேரில் சந்திக்க வேண்டும். இதை ஏன் சொல்கிறேன் தெரியுமா? என்னதான் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என்று புதுப்புது ஊடகங்கள் வந்தாலும், நேரில் சந்தித்து மக்களிடம் பணிவாக வாக்கு கேட்கும் பிரச்சாரத்திற்கு எதுவும் ஈடாகாது! அதனால்தான் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன்! பரம்பரை பரம்பரையாக தி.மு.க.விற்கு வாக்களிக்கும் குடும்பமாக இருந்தாலும் சரி, இதுவரை நமக்கு வாக்களிக்காத குடும்பமாக இருந்தாலும் சரி, பிரச்சாரத்தின் கடைசி நிமிடம் வரை மக்களைச் சந்தித்து, சாதனைகளைச் சொல்லி, வாக்குறுதிகளைச் சொல்லி, வாக்கு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்! இதை நீங்க ‘ரிப்பீட் மோட்’-இல் செய்ய வேண்டும்! அப்போதுதான் நம்முடைய வெற்றியும் ‘ரிப்பீட்’ ஆகும்!

200 தொகுதிகளுக்கு மேல் பெற வேண்டும்

2021-இல் இருந்ததைவிட, தமிழ்நாடு முழுவதும் நமக்கான வரவேற்பும், ஆதரவும் இப்போது கூடியிருக்கிறது. 2021 தேர்தலில் ‘இதையெல்லாம் செய்வோம்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தோம்! இப்போது, சொன்னதையும் தாண்டி செய்து கொண்டிருக்கிறோம். அதனால், கெத்தாக மக்கள் முன் நிற்கிறோம்! அதனால், மெத்தனமாக இருக்காமல் களத்தில் தொடர்ந்து உழைத்தால், சென்ற முறை அடைந்ததை விட பெரிய வெற்றி, 100 சதவிகிதம் சாத்தியம்! 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வாங்கிய வாக்குகளை சட்டமன்றத் தொகுதிவாரியாகப் பார்த்தாலே, தெளிவாகத் தெரியும். நிச்சயமாக 2026-இலும் 200 தொகுதிகளுக்கு மேல் நாம்தான் வெல்லப் போகிறோம்! அதற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்.

உங்கள் அனைவருக்கும் ஆளுக்கு 100 வாக்காளர்களை ‘அசைன்’ செய்துவிட்டோம்! தேர்தல் அன்றைக்கு பூத்துக்கு வந்து அவர்கள் நமக்கு வாக்களிக்கும் வரை, அவர்களை நீங்கள் அணுகிக் கொண்டே இருக்க வேண்டும்! எப்படி? பணிவாக… கனிவாக… மரியாதையாக… நட்பாக… அணுக வேண்டும்! அதுமட்டுமல்ல, வாக்குப்பதிவு முடிந்து மெஷினில் சீல் வைத்து, எடுத்துக் கொண்டு போகும் வரை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வீடு வீடாகச் செல்லுங்கள்! சகஜமாக – உரிமையுடன் பிரச்சாரம் செய்யுங்கள். அவர்களிடம் நம்முடைய சாதனைகளை பொறுமையாக விளக்கிச் சொல்லுங்கள்! அவர்களே அதை உணர்ந்து, நமக்கு வரவேற்பு அளிப்பார்கள்! நண்பர்களின் டீக்கடையில் உட்கார்ந்து எவ்வாறு டிஸ்கஸ் செய்வோமோ – அரட்டை அடிப்போமோ, அது போன்று ஃப்ரண்ட்லியாகப் பேசுங்கள். நம்முடைய கழக ஆட்சி மீண்டும் வந்தால்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடரும், தமிழ்நாட்டின் சுயமரியாதை காப்பாற்றப்படும் என்று அவர்கள் மனதில் பதிய வையுங்கள்.

குறிப்பாக, மாணவர்கள், இளைஞர்களிடம் அவர்களுக்காக நாம் செய்து கொண்டு வரும் திட்டங்களை எடுத்துச் சொல்லுங்கள்! நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண், லேப்டாப் திட்டம் அனைத்தையும் நினைவூட்டுங்கள்! தனியார் தொழிற்சாலைகள் மூலம் மட்டுமே 38 லட்சம் வேலைவாய்ப்புகளை அவர்களுக்காக உறுதி செய்திருக்கிறோம் என்று புரிய வையுங்கள்! இரண்டாம் நிலை நகரங்களிலும் டைடல் பார்க், சின்ன சின்ன மாவட்டங்களிலும் சிப்காட், எல்காட் பூங்கா திறந்திருக்கிறோம் என்று லிஸ்ட்-ஐ எடுத்து காட்டுங்கள்!

D.M.K. Brand

இதற்காக உங்களுக்குத் தேவைப்படும் தகவல்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை, உங்கள் அனைவருக்கும் வழங்கியிருக்கிறோம். அதில், நம்முடைய ஐந்தாண்டு சாதனைகளை விளக்கி, சட்டப்பேரவையில் நான் பேசிய ‘ஸ்பீச்’ தெளிவாக இருக்கிறது. அதை முழுவதுமாக படித்து, அதில் உள்ள திட்டங்களை ஒன்று விடாமல் மனப்பாடமே செய்துவிடுங்கள்.

நம்முடைய ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு குடும்பமும் நிச்சயமாக ஏதாவதொரு வகையில் பயன்பெறும்படி நம்முடைய திட்டங்கள் அமைந்திருக்கிறது. அவை அனைத்தும் அவர்கள் வீட்டின் ஒரு அங்கமாக இருப்பது போன்று நோட்டீஸ் அடித்துக் கொடுங்கள்! அடுத்த 2 மாதம் எந்தப் பக்கம் திரும்பினாலும், எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும், அங்கு D.M.K. Brand-தான் தெரிய வேண்டும்! மறந்துவிடாதீர்கள். தெருமுனைக் கூட்டங்கள், திண்ணைப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். இளைஞர்கள் மற்றும் மகளிரை கழகத்தை நோக்கி அதிக அளவில் ஈர்க்க வேண்டும்! ஏன் என்றால், அவர்களுக்காகத்தான் இந்த 5 ஆண்டுகளில் நிறைய செய்திருக்கிறோம்! ஒவ்வொரு தனி மனிதரின் கோரிக்கையையும், எண்ணத்தையும் நம்முடைய திட்டங்கள் மூலமாக செயல்படுத்திக் கொடுத்திருக்கிறோம்” என்று கூறி திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டார்.

சதி முறியடிப்பு…

மேலும் அவர், “மக்கள்நலத் திட்டங்கள் எந்தத் தடையும் இல்லாமல் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் அட்வான்ஸாக செயல்படுவதுதான், இப்போது, “Talk of the நேஷன்!”

நேற்று காலை விடிந்ததும், ஒரு கோடியே 31 லட்சம் பெண்கள் முகத்திலும் ஒருசேர புன்னகையை கொண்டு வந்திருக்கிறோமே! அவர்கள் காலையில் கேட்ட முதல் ரிங்டோனே, ஐந்தாயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, அவர்கள் அக்கவுண்ட்-இல் வந்ததற்கான மெசேஜ் டோன்தான்! ஏன், இந்த மாதம் ஐந்தாயிரம் கொடுக்கிறோம் என்று தெளிவாக விளக்கி நேற்று காலையே நான் வீடியோவும் வெளியிட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மகளிர் உரிமைத்தொகையை தடுக்க நினைத்த சதியை முறியடித்திருக்கிறோம்! நீங்கள் நிச்சயம் அந்தச் செய்தியைப் பார்த்திருப்பீர்கள்…

பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவரை வைத்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்து, தேர்தல் நெருக்கத்தில், மக்கள் நலத்திட்டங்களை நிறுத்த வேண்டும் என்று திட்டம் போட்டார்கள்! அதாவது, ஒன்றிய பா.ஜ.க. அரசைப் பொறுத்தவரைக்கும், அவர்களும் மக்களுக்கு நல்லது செய்யமாட்டார்களாம்; நல்லது செய்கிறவர்களையும் செய்ய விடமாட்டார்களாம்.

அதிமுக அல்ல பாஜக கிளை கழகம்

தமிழ்நாட்டு மகளிருக்கு நான் கொடுத்த உறுதிமொழிதான், உரிமைத் தொகை! அதற்கு தடை போட நான் விட்டுவிடுவேனா? அதனால்தான், மக்களுக்கு சர்பிரைஸ் கொடுத்து, மக்கள் விரோதிகளுக்கு ஷாக் கொடுத்தோம்! இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஸ்டைல்!

ஓரவஞ்சனைக்கும் – வஞ்சகத்திற்கும் ஒரு முகம் இருந்தால், அதுதான், ஒன்றிய பா.ஜ.க. அரசு! இதுவரைக்கும், தமிழ்நாட்டிற்கு என்று ஏதாவது சிறப்புத் திட்டம் அறிவித்திருக்கிறார்களா? நானும் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கிறேன். முறையாக பதில் சொல்ல வேண்டிய பிரதமரோ – உள்துறை அமைச்சரோ வரவில்லை; அதற்கு பதில் சொல்ல முடியவில்லை! “அதுதான் இது; இதுதான் அது” என்று வழக்கமாக ஒதுக்கப்படும் நிதிகளைச் சொல்லியே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க. தலைமையில் இருந்தும் இதற்கு பதில் வரவில்லை… பா.ஜ.க.வின் கிளைச் செயலாளராக இருக்கும் பழனிசாமி அவரிடமிருந்தாவது பதில் வந்ததா? இப்போது அது பா.ஜ.க. கிளைக் கழகம் ஆகிவிட்டது!

தமிழ்நாட்டுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் பேசுவதற்கு துணிவில்லாமல் – முதுகெலும்பு இல்லாமல், கொத்தடிமைச் சேவகம் செய்துகொண்டு இருக்கும் பழனிசாமி, எனக்கு சவால் விட்டிருக்கிறார்.

ஈபிஎஸ் மீது தாக்கு

எந்த பழனிசாமி? இன்றைக்கும், ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு அடையாளமாக, சோஷியல் மீடியாவில் வலம் வந்துகொண்டு இருக்கும் வீடியோவிற்கு சொந்தக்காரரான பழனிசாமி!

பழனிசாமி அவர்களே… மாண்புமிகு பழனிசாமி அவர்களே… தவழ்ந்து தவழ்ந்து, ஊழல் குற்றவாளியான சசிகலா காலில் விழுந்து, பதவியைப் பெற்று, அவருடைய காலை வாரிவிட்டு, “நீ எனக்கு பதவி கொடுத்தியா” என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் கேட்டீர்களே? இல்லை என்று மறுக்க முடியுமா?

சட்டம் – ஒழுங்கு பற்றி பேசுவதற்கு உங்களுக்கு தார்மீக உரிமையாவது இருக்கிறதா? உங்கள் கட்சியின் உண்மையான பொதுச்செயலாளராக இருந்த, அம்மையார் ஜெயலலிதா அவர்களின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை – கொள்ளை, அதைத் தொடர்ந்து நடந்த மர்ம மரணங்கள், இதையெல்லாம் மறக்கடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

பொல்லாத ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி என்பதற்கு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளே சாட்சியாக ஆறாத வடுவாக இருக்கிறதே?

ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று அமைதியாக ஊர்வலம் சென்ற, அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சொல்லிவிட்டு, டி.வி.யைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று நாடகம் போட்டது, மக்கள் மறந்து விட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?

சாத்தான்குளம் காவல் நிலையத்தில், அப்பாவும் மகனும் அடித்து கொல்லப்பட்டப்போது, அவர்கள் உடல்நலமில்லாமல் இறந்ததாக, கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் சொன்னீர்களே… உங்களுடைய அந்த கல்மனதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைத்தீர்களா?

ஊழலின் ஊற்றுக்கண்ணான அ.தி.மு.க.வின் பாராம்பரியத்தை காப்பாற்ற, உறவினர்களுக்கு டெண்டர்களை அள்ளிக் கொடுத்துவிட்டு, வழக்கு வந்தவுடனே, தமிழ்நாடு முழுவதும் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள் என்று சப்பைக்கட்டு கட்டினீர்களே… மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?

உங்கள் மேல் ஊழல் வழக்கு இருக்கிறதே என்று கேட்டபோது, “யார் மேலதான் ஊழல் வழக்கு இல்ல” என்று அசரடிக்கும் பதில் சொன்ன உங்கள் திறமையை என்ன என்று சொல்வது?

உழவர்களுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை மனச்சாட்சி இல்லாமல் ஆதரித்து, போராடிய விவசாயிகள் மேலேயே அவதூறு பரப்பினீர்களே… “பச்சைத்துண்டு போட்டு பச்சைத்துரோகம் செய்த பழனிசாமி” என்று சொல்லி, உங்களைப் புறக்கணித்த விவசாயிகள், அதை மறந்திருப்பார்கள் என்று நினைத்தீர்களா?

சிறுபான்மை மக்களுக்கு எதிரான பா.ஜ.க.வின் சட்டங்களை ஆதரித்ததுடன் – அந்த மக்களை அடக்குமுறைக்கு ஆளாக்குனீர்களே, அந்தக் காயம் ஆறிவிட்டது என்று நினைக்கிறீர்களா?

சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின் vs டப்பா எஞ்சின்

குட்கா வழக்கில் அ.தி.மு.க. அமைச்சர்கள் சிக்கியதற்கு உங்கள் பதில் என்ன? வருமான வரித்துறையில் சொந்தக்காரர்கள் சிக்கியதால்தான், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தீர்களா? இவ்வாறு ஏராளமான கேள்விகள் இருக்கிறது. இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லாமல் தவிர்த்தாலும், மக்களுக்கு பதில் தெரியும்! உங்கள் லட்சணமும் தெரியும்!

எனவே, தி.மு.க. அரசை அவதூறுகளால் களங்கப்படுத்த நினைக்கும் உங்களின் பேச்சுகளை மக்கள் நம்ப மாட்டார்கள்! நம்முடைய திராவிட மாடல் அரசு, சாதனைகளின் அரசாக இருப்பதுதான், பழனிசாமி அவர்கள் இவ்வளவு வேதனையுடன் புலம்புவதற்குக் காரணம்!

ஆயிரமாண்டுகள் நின்று பேசும் சாதனைகளை, ஐந்தே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறோம்! யூடியூபிலும் – சோஷியல் மீடியாக்களிலும் பாருங்கள்… வடமாநில சேனல்கள் அனைத்தும், இவ்வாறு சாதனைகளை செய்யும் அரசு, இந்தியாவிலேயே இல்லை என்று பாராட்டி, எனவே, ஒரு சிறப்பான ஆட்சிக்கு அடையாளம் இதுதான் என்று, தமிழ்நாட்டின் அரசை எடுத்துச் சொல்லி, எடுத்துக்காட்டாக காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்! நான் மட்டுமல்ல, இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் நெஞ்சை நிமிர்த்தி சொல்லலாம்… தமிழ்நாட்டு வரலாற்றிலேயே நம்முடைய அரசு போன்று சாதனைகள் செய்த அரசே கிடையாது! ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் செய்த திட்டங்களை மட்டுமல்ல… ஒவ்வொரு மாவட்டத்திற்கும் – தொகுதிக்கும் நிறைவேற்றப்பட்டிருக்கும் சாதனைகளை நம்மால் பட்டியலிட்டுச் சொல்ல முடியும்!

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்… நாம் போராடுவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல; தமிழ்நாட்டின் வெற்றிக்காக! பா.ஜ.க.வின் டப்பா எஞ்சின் முன், நம்முடைய திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின் ஒருபோதும் தலைகுனியாது! இந்த உறுதியை தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் – ஒவ்வொரு வாக்காளருக்கும் ஏற்படுத்த வேண்டியது, உங்களுடைய பணி! களப்பணிதான், உங்களுடைய முழுப் பணி! நீங்கள் உழைக்கும் ஒவ்வொரு நிமிடமும் – ஒரு புது வாக்கு நமக்கு வரும்!

மக்களைச் சந்திக்கும்போது, நம்முடைய சாதனைகளைச் சொன்னால் மட்டும் போதாது; ஒன்றிய பா.ஜ.க. அரசின் துரோகங்களையும் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்! டப்பா எஞ்சின்-இல் ஏறி, கொத்தடிமைகள் மூலமாக, தமிழ்நாட்டுக்குள் புறவாசல் வழியாக நுழைய நினைக்கும் பா.ஜ.க.வின் எண்ணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்!

தமிழ்நாட்டிற்கு பரப்புரைக்கு வரும் பிரதமர், தமிழ்நாட்டிற்கு என்று இந்தச் சாதனைகளை எல்லாம் செய்திருக்கிறோம் என்று சொல்கிறாரா? இருந்தால்தானே சொல்ல முடியும்! அண்மையில் ஒன்றிய அரசின் பட்ஜெட் வெளியிட்டார்களே… அதில் தமிழ்நாட்டிற்கு என்று ஏதாவது சிறப்புத் திட்டங்கள் அறிவித்தார்களா? இதைத் தட்டிக் கேட்கும் துணிச்சலோ – தைரியமோ, பழனிசாமி அவர்களுக்கு இருக்கிறதா?

அவரைப் பொறுத்தவரைக்கும், “போடு தோப்புக்கரணம்” என்று சொன்னால், “ஸ்டாப்” சொல்லும் வரைக்கும் “நான்-ஸ்டாப்”-ஆக பல்டி அடிப்பார்! அனைத்து துரோகத்தையும் செய்துவிட்டு, “கூட்டணி தர்மத்துக்காகத்தான் தமிழ்நாடு உரிமைகளை அடகு வைத்தேன்” என்று கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல் சொல்லுவார்! இதையெல்லாம் நன்றாக உணர்ந்துதான், அவருடைய தலைமையை அவருடைய கூட்டணியினரே ஏற்றுக் கொள்ளவில்லை! அனைவரும் ஒரிஜினல் ஓனரான பா.ஜ.க.விடம் நேரடியாக சரண்டர் ஆகிறார்கள்! எனவே, அ.தி.மு.க. என்பது, பா.ஜ.க. டிராவல் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளும் ஒரு கிளை அமைப்பு என்பதை, மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்! தமிழ்நாடு என்ற பெயரையே மாற்ற வேண்டும் என்று துடிப்பவர்கள், தமிழ்நாட்டிற்குள் வந்தால், அவர்களின் சதித் திட்டங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று மக்களுக்கு நீங்கள் புரிய வைக்க வேண்டும்!

இந்தச் சதியை உணராமல், நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைத் தவிர, வேறு யாருக்கு வாக்களித்தாலும், இன்றைக்கு நாம் செய்து கொண்டிருக்கும் அத்தனை நலத்திட்டங்களையும் நிறுத்திடுவார்கள் என்று மக்களுக்கு நீங்கள் புரிய வைக்க வேண்டும்!

எனவே, திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற நம்முடைய இலக்கை, நீங்கள் அனைவரும் உங்கள் நெஞ்சங்களில் ஏந்தி, அந்த இலக்கை அடைய ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்! நம்முடைய இலக்கு எவ்வளவு? 200 தொகுதிகள்! 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன தேவை? ஓய்வில்லாத உழைப்பு!

வேட்பாளரை அறிவிக்கும் பொறுப்பை, தலைமைக் கழகம் பார்த்துக் கொள்ளும்! வெற்றி பெறுபவர்தான் வேட்பாளர்! திறமை இருப்பவர்தான் வேட்பாளர்! அவரை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டியது, உங்களுடைய கடமை!

ஏழாவது முறையும் கழகம் ஆட்சி அமைத்தது என்ற வரலாற்றை எழுத, வீரியத்துடன் செயல்படுங்கள்! மீண்டும் சொல்கிறேன்… தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, அனைவரும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும்! அதற்கான அத்தனை களப்பணிகளையும் நீங்கள் இடைவிடாமல் செய்ய வேண்டும்! தொடர்ந்து வெல்ல, உழைப்போம்! மீண்டும் வெல்வோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! வெல்வோம் ஒன்றாக!” என்று அறிவுரை வழங்கினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share