தமிழக அரசு பெண்களுக்கு ரூ.5000 வழங்கிய நிலையில் மாலைக்குள் வங்கியிலிருந்து எடுத்து விட வேண்டும் என்பது முற்றிலும் தவறான தகவல் என தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு நேற்று (பிப்ரவரி 13) கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான ரூ.3000 மற்றும் கோடை கால சிறப்பு நிதியாக ரூ.2000 என மொத்தம் ரூ.5000 வரை முன்கூட்டியே வழங்கியுள்ளது.
தேர்தலை முன்னிட்டு உரிமைத் தொகை வழங்குவதை முடக்க சிலர் முயற்சித்த நிலையில், முன்கூட்டியே இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வங்கியிலிருந்து மாலைக்குள் எடுத்துவிடாவிட்டால் பணம் திருப்பி எடுக்கப்படும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் எக்ஸ் பதிவில் விளக்கம் அளித்துள்ளது.
அதில், மகளிருக்கு அரசு வழங்கிய ரூ.5,000 தொகை திருப்பி எடுக்கப்படும் என்று பரவும் வதந்தி!
பரவிய செய்தி
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கிய உரிமைத் தொகையை வங்கியிலிருந்து மாலைக்குள் எடுக்காவிட்டால் பணம் திருப்பி எடுக்கப்படும் என்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
தமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் சேர்த்து ரூ.5 ஆயிரம் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்குச் செலுத்தியது.
இத்தொகையை அன்று மாலைக்குள் வங்கியிலிருந்து எடுத்து விட வேண்டும் என்பது முற்றிலும் தவறான தகவல். தமிழ்நாடு அரசு இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தவறான தகவலைப் பரப்பாதீர்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
