டிரைவிங் டெஸ்டில் தேர்ச்சி பெற்ற அன்றே டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 2) 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டார்,
அதில்,
”நமது அரசு ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வதுடன் அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் எளிமையான முறையில் மக்களை சென்றடையும் வகையில் தொடர்ந்து நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
தற்போது தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்று (ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட்) பெறுவதற்கு கட்டணமாக 250 ரூபாய் விண்ணப்பதாரர்களால் செலுத்தப்பட்டு சிப் பொருத்தப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதனால் விண்ணப்பதாரர்களுக்கு கிடைப்பதற்கு ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை காலதாமதம் ஏற்படுகிறது. இந்த காலதாமதத்தினால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே இந்த காலதாமதத்தினை தவிர்க்கும் வகையில் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் ஆகியவை டிஜிட்டல் முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும்.
டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் டிஜிட்டல் ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட் வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
மின்னணு வாகன பதிவு சான்றிதழ் முறை (டிஜிட்டல் ஆர்சி) அறிமுகம் செய்வதன் மூலம் புதிய வாகனம் வாங்குவோர் வாகன பதிவை அதாவது டிஜிட்டல் ஆர்சி-ஐ இணையம் வழயாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோன்று டிரைவிங் டெஸ்டில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே ஓட்டுனர் உரிமம் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.
அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து மின்னணு முறையில் ஆவணங்களை சரி பார்க்க முடியும். இதன் மூலம் போலி ஆவணங்கள் தவிர்க்கப்படும். இந்த முறையினால் ஆவணம் தொலைந்தாலோ சேதம் அடைந்தாலோ மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அச்சிட்டு கொள்ளவும் முடியும். ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கும் வாகனத்தை பதிவு செய்வதற்கும் வாகன பதிவு புதுப்பித்தல் மற்றும் படிப்படியாக போக்குவரத்து சம்பந்தமான அனைத்து அலுவலக சேவைகளுக்கும் தமிழ்நாட்டில் எந்த ஒரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் விண்ணப்பித்து, எனிவேர் ரிஜிஸ்ட்ரேஷன் லைசன்ஸ் என்ற முறை படிப்படியாக செயல்படுத்தப்படும்” என்றார்.
