திருமணம் என்பது இரண்டு மனங்கள் இணைவது மட்டுமல்ல; பல நேரங்களில் இரண்டு பேரின் நிதித் திட்டங்களும் ஒன்றாகத் தொடங்கும். வீடு வாங்குவது, கார் வாங்குவது, தனிநபர் கடன் பெறுவது எனப் பல தேவைகளுக்காகத் தம்பதிகள் இணைந்து கடன் வாங்கத் திட்டமிடுவார்கள். அப்போது எழும் முக்கியமான கேள்வி, திருமணமான பிறகு கணவன் அல்லது மனைவியின் கிரெடிட் ஸ்கோர் மற்றவரைப் பாதிக்குமா என்பதுதான். இதுகுறித்து நிலவும் தவறான நம்பிக்கைகளையும் உண்மையான விதிகளையும் தெரிந்துகொள்வது அவசியம்.
திருமணமானதும் கிரெடிட் ஸ்கோர் மாறிவிடுமா?
திருமணம் செய்துகொண்டதற்காக மட்டும் கணவன், மனைவி இருவரின் கிரெடிட் ஸ்கோரும் ஒன்றாக இணைக்கப்படாது. இருவருக்கும் தனித்தனியான கிரெடிட் அறிக்கைகளும் மதிப்பெண்களும் இருக்கும்.
ஒருவருக்குக் குறைவான கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும், அது மற்றவரின் தனிப்பட்ட ஸ்கோரைத் தானாகக் குறைக்காது. அவரவர் பெயரில் உள்ள கடன்கள், கிரெடிட் கார்டுகள், திருப்பிச் செலுத்தும் பழக்கம் ஆகியவையே தனிப்பட்ட கடன் வரலாற்றைத் தீர்மானிக்கின்றன.
கூட்டு கடன் வாங்கும்போது என்ன நடக்கும்?
வீட்டுக் கடன் அல்லது கார் கடனை இருவரும் இணைந்து பெற விண்ணப்பிக்கும்போது நிலைமை மாறுகிறது. வங்கிகள் இருவரின் கிரெடிட் ஸ்கோர், வருமானம், ஏற்கெனவே உள்ள கடன்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை ஆய்வு செய்யலாம்.
ஒருவரின் கடன் வரலாறு மோசமாக இருந்தால், கூட்டு கடன் ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். கடன் தொகை அல்லது வட்டி நிபந்தனைகளிலும் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது.
துணையின் குறைந்த ஸ்கோர் தடையாக இருக்குமா?
கணவன் அல்லது மனைவிக்கு குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருப்பதால் கடன் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் முடிந்துவிடுவதில்லை. அதிக வருமானமும் நல்ல கடன் வரலாறும் கொண்டவர் தனியாகக் கடனுக்கு விண்ணப்பிப்பது ஒரு வாய்ப்பாக இருக்கலாம். எனினும், இறுதி முடிவு வங்கியின் தகுதி விதிமுறைகளைப் பொறுத்தது.
கடன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
கூட்டு கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு இருவரும் தங்களது கிரெடிட் அறிக்கைகளைச் சரிபார்க்க வேண்டும். நிலுவையில் உள்ள தொகைகளைச் செலுத்துவது, தவணைகளைத் தவறாமல் கட்டுவது, கிரெடிட் கார்டு பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது ஆகியவை கடன் வரலாற்றைச் சீராக வைத்திருக்க உதவும்.
குறிப்பாக, இருவரும் இணைந்து கடன் வாங்கினால், திருப்பிச் செலுத்தும் பொறுப்பையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். திருமணம் கிரெடிட் ஸ்கோரை இணைக்காது; ஆனால் கூட்டு நிதி முடிவுகள் இருவரின் கடன் வாய்ப்புகளையும் பாதிக்கலாம்.
