ரெட் ஒயின் ஆரோக்கியமானது என்றொரு பொதுக் கருத்து இருக்கிறதே… அது உண்மையா? வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட்ஸ் என்ன சொல்கிறார்கள்? Red wine Good for health?
“ரெட் ஒயின் என்பதும் மதுபானங்களில் ஒருவகைதான். இதுவரை ஒருமுறைகூட குடித்துப் பழக்கமே இல்லை என்பவர்கள், இதை பற்றி யோசிக்கத் தேவையில்லை.
எப்போதாவது குடிக்கும் ‘சோஷியல் டிரிங்கிங்’ பழக்கம் உள்ளவர்கள், மற்ற மதுபானங்களுக்கு பதிலாக, மிகக் குறைந்த அளவு ரெட் ஒயின் குடிக்கலாம்.
ரெட் ஒயினில் ‘ரெஸ்வெரட்ரால்’ (Resveratrol ) என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் (Antioxidants) உள்ளது உண்மைதான். அது மூளை மற்றும் இதயத்துக்கு ஆரோக்கியமானது என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆனால், அதற்காக ரெட் ஒயின் குடிப்பது நல்லது என்று அர்த்தமாகாது. எந்த மருத்துவரும், ஊட்டச்சத்து ஆலோசகரும் யாருக்கும் ஆல்கஹால் பழக்கத்தை அறிவுறுத்தவே மாட்டார்கள்.
சிலர் மதுப்பழக்கத்திலிருந்து மீளும் முயற்சியில் இருப்பார்கள். மாதம் ஒரு முறையோ, இருமுறையோ குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் மட்டும், பாதகங்கள் நிறைந்த மற்ற ஆல்கஹால் பானங்களைக் குடிப்பதற்கு மாற்றாக, குறைந்த அளவில் ரெட் ஒயின் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் 30 முதல் 50 மில்லியைத் தாண்டாதபடி இருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.
சிவப்புநிற திராட்சைகளை மசித்து, புளிக்கவைத்துத் தயாரிக்கப்படுவதுதான் ரெட் ஒயின். அப்படிப் புளிக்கவைப்பதால் அதிலிருந்து ஆல்கஹால் உருவாகிறது. இதில் பாலிபீனால் (Polyphenol) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமிருக்கிறது. அதை ரெட் ஒயின் குடித்துதான் பெற வேண்டும் என அவசியமில்லை. திராட்சையாகச் சாப்பிடலாம்.
கேமமைல் டீ (Chamomile tea ) போன்றவற்றிலும் அது இருக்கிறது. ஆரோக்கியமான உணவுகளின் மூலமே அதைப் பெற முடியும் என்ற நிலையில், தேவையே இல்லாமல் ஒரு பழக்கத்துக்கு அடிமையாவது அவசியமில்லை” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : தஞ்சாவூர் அசோகா அல்வா
”ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் குஷ்புவிற்கு பதிலளிப்பார்கள்” : கீதாஜீவன்
பியூட்டி டிப்ஸ்: அடிக்கடி முகம் கழுவும் பழக்கம் உடையவரா நீங்கள்? வெயிட் ப்ளீஸ்!