‘உடற்பயிற்சி செஞ்சா ஆண்மை குறைஞ்சுடும்; குழந்தை பொறக்காது’ என்ற அச்சம் இன்றைக்கும் சிலரிடம் இருக்கிறது. அது எந்த அளவுக்கு உண்மை? செக்ஸாலஜிஸ்ட்ஸ் என்ன சொல்கிறார்கள்?
”இந்த அச்சம் ஜிம்முக்கு செல்லும் பலரிடமும் இருக்கிறது. உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு கொண்ட பெண்கள்கூட கர்ப்பமாக இருக்கும்போது உடற்பயிற்சி செய்தால் கரு கலைந்துவிடும் என்று நம்புகிறார்கள். ஆனால், இவை எவற்றிலுமே உண்மை கிடையாது.
மனித உடல் என்பது இயங்குவதற்காகவே படைக்கப்பட்டது. 12 மணி நேரம்கூட உடலுழைப்பு செய்யலாம். வேட்டை, விவசாயம் என்று பல மணி நேரம் உழைத்தவர்கள்தாம் மனிதர்கள்.
கடந்த 100 வருடங்களாகத்தான் நம்மில் பலரும் வொயிட் காலர் ஜாப் செய்ய ஆரம்பித்துவிட்டோம். அதே நேரம், சுவைக்கு ஆசைப்பட்டு வறுத்தது, பொரித்தது, இனிப்பு வகைகள் என்று கலோரி அதிகமான உணவுகளையும் அதிகம் சாப்பிட ஆரம்பித்துவிட்டோம்.
இதன் விளைவுதான் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல் பிரச்சினைகள். இந்தப் பிரச்சினைகள் வரக்கூடாது என்றால், ஒவ்வொருவரும் தினமும் 6,000 அடிகள் நடக்க வேண்டும். இது கிட்டத்தட்ட நாலரை கிலோ மீட்டர் வரும்.
ஆண்கள் ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி அவசியம். தவிர, உடற்பயிற்சி செய்யும்போது டெஸ்டோஸ்டீரான் (Testosterone) சுரப்பு தூண்டப்பட்டு ஆண்மையும் அதிகரிக்கும்.
பெண்களுக்கும் உடற்பயிற்சி ஆரோக்கியத்தைத் தரும். அவர்களுக்கு நல்ல கருத்தரிப்புத் திறனைக் கொடுக்கும். கருத்தரித்த பிறகு மருத்துவரின் ஆலோசனையின்படி உடற்பயிற்சிகளைத் தொடரலாம்.
தினமும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்தால் யாருக்குமே எந்தத் தீங்குமே வராதா என்றால், வரலாம். ஜெயிக்க வேண்டுமென்பதற்காக ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் ஜிம்மிலேயே இருப்பவர்களுக்கு வளர்சிதை மாற்றங்கள் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் நிகழலாம். பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் வரலாம். இதனால், பிற்காலத்தில் கருத்தரிப்பதில் பிரச்சினைகள் வரலாம்.
மற்றபடி, ஆரோக்கியத்துக்காக ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்கிற ஆண்களுக்கு, ஆண்மைக் குறைபாடு வராது. பெண்களுக்குக் கருத்தரிப்பதில் சிக்கலும் வராது” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: நெல்லை சொதி
”தமிழகத்திற்கு இனி தண்ணீர் கிடையாது” : கர்நாடக அரசுக்கு எடப்பாடி கண்டனம்!