கடலூரில் அதிக பாதிப்பு ஏன்?: ஆய்வுக்குப் பின் முதல்வர்!

Published On:

| By Balaji

கடலூரில் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ஏக்கருக்கு மேலான விளைநிலங்களிலிருந்த பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் வெள்ள பாதிப்பினை ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (டிசம்பர் 8) மதியம் கடலூர் சென்றார்.

ADVERTISEMENT

மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் கட்சியினர் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, பெரியபட்டில் அமைக்கப்பட்டுள்ள மழை சேதங்கள் குறித்த புகைப்படங்களைப் பார்வையிட்ட முதல்வர், அனுக்கம்பட்டில் புயல் மற்றும் கனமழையால் வேளாண் நிலங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை, வயலில் இறங்கிப் பார்வையிட்டார்.

பின்னர், காட்டுமன்னார்கோவில் வட்டம், லால்பேட்டை பகுதியில் வீராணம் ஏரியிலிருந்து உபரிநீர் வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்படுவதைப் பார்வையிட்டார். ராதாமதகு பகுதியிலிருந்தும் ஆய்வு மேற்கொண்ட அவர், திருநாரையூர் பகுதிகளையும் பார்வையிட்டார்.

ADVERTISEMENT

சிதம்பரம் வட்டம் – சாலியன்தோப்பு கிராமத்தில் புயல் மற்றும் கனமழையால் வேளாண் நிலங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களையும் ஆய்வு செய்தார். கடவாச்சேரியில் உப்பனாற்று வடிகாலில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளைப் பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆகாயத் தாமரைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

சிதம்பரத்தில் கனமழையால் சேதமடைந்த இளமையாக்கினார் திருக்கோயிலின் குளக்கரை தடுப்புச் சுவர் மற்றும் அதனையொட்டிய சேதமடைந்த சாலை பகுதியைப் பார்வையிட்ட பின், வல்லம்படுகையில் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கும் என்று தெரிவித்தார்.

தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவினர் நிவர் புயல் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் புயல் பாதிப்புக்கு உரிய நிதியைக் கேட்டுள்ளோம். அதை மத்திய அரசிடம் தெரிவித்துப் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளனர். புரெவி புயல் குறித்தும் ஆய்வு செய்ய மத்தியக் குழு வருகை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

மத்திய அரசு பேரிடர் நிதியைக் கொடுத்துள்ளது. அதிலிருந்து தான் செலவு செய்து கொண்டிருக்கிறோம். அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதிக நிதியைக் கேட்டுள்ளோம். தற்போது மத்தியக் குழு பார்வையிட்டிருக்கிறது. இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு எவ்வளவு நிதி கொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நீண்ட கால திட்டமாகக் கடலூரில் நீர் வடிவதற்காக 400 கோடி ரூபாய் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளோம். கனமழை பெய்தால் அந்த தண்ணீர் எங்குதான் போகும். இது ஒரு சமவெளி பரப்பு. புயலின்போது கடலின் நீர்மட்டம் உயர்கிறது. இதனால் நீர் கடலுக்குள் செல்வதில்லை என்பதால் பாதிப்பு அதிகமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

மேலும், “வடிகால் வசதி செய்து வேளாண் மக்கள், விளைநிலங்கள் பாதிக்காத அளவுக்குத் திட்டம் தீட்டுவதற்கு உண்டான நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறோம். அதற்குத்தான் 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக எந்தெந்த பகுதிகளில் நீர் வடியாமல் இருக்கிறதோ அங்கு ஆய்வு செய்து எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

**-பிரியா**,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share